Published : 13 Apr 2024 05:41 AM
Last Updated : 13 Apr 2024 05:41 AM

தேர்தல் பணியில் ஈடுபடுவோரின் தபால் வாக்கை பிரித்து அனுப்ப திருச்சியில் ஒருங்கிணைந்த மையம் அமைப்பு: சத்யபிரத சாஹு தகவல்

சென்னை: தேர்தல் பணியில் ஈடுபடுவோரின் தபால் வாக்குகளை திருச்சியில் உள்ள ஒருங்கிணைந்த மையத்துக்கு கொண்டு சென்று, அங்கிருந்து சம்பந்தப்பட்ட தொகுதிக்கு பிரித்து அனுப்பும் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல்பணியில் பல்வேறு துறைகளை சேர்ந்த 4 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவ்வாறுதேர்தல் நாளில் பணியில் ஈடுபடுவோர் வாக்களிக்க 2 வகையிலான வசதிகளை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதில் ஒன்று தபால் வாக்கு.

அதன்படி, குடியிருக்கும் தொகுதியைவிட்டு, வெளி தொகுதியில் பணியமர்த்தப்பட உள்ளவர்கள் பயிற்சிக்கு செல்லும்போது, அவர்களிடம் படிவம் 12 வழங்கப்பட்டு பூர்த்தி செய்து பெறப்படும்.அடுத்த கட்ட பயிற்சியின்போது தபால் வாக்கு படிவம் வழங்கப்பட்டு, அந்த படிவத்தில் அவர்கள்தங்கள் வாக்கை பதிவு செய்து, அங்குள்ள சேவை மையத்தில் உள்ள பெட்டியில் போட ேண்டும்.

மற்றொரு வசதி, தாங்கள் குடியிருக்கும் தொகுதியிலேயே உள்ளவாக்குச்சாவடியில் பணியமர்த்தப்படுவோர் 12-ஏ படிவம் மூலம், ‘இடிசி’எனப்படும் தேர்தல் பணிச் சான்றிதழ் பெற்று, தான் பணியாற்றும்வாக்குச்சாவடியிலேயே மின்னணுஇயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்வதாகும்.

இதில், தபால் வாக்கு நடைமுறையை பொருத்தவரை, பயிற்சிமையங்களில் பெறப்படும் தபால்வாக்குகள் தேர்தல் நடத்தும் அலுவலரால் தொகுதி வாரியாகபிரிக்கப்பட்டு, அவர் நியமிக்கும்அதிகாரி மூலம் சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும்அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படும்.

தமிழகத்தில் 39 ஒவ்வொரு தொகுதிக்கும் இவ்வாறுஒரு அதிகாரி அனுப்பப்படுவார்.அவர் அங்குசென்று தபால் வாக்குகளை அளித்துவிட்டு, தான் சார்ந்த தொகுதிக்கான தபால் வாக்குகளை பெற்று வருவார். இந்த நடைமுறைதான் ஏற்கெனவே இருந்தது.

இப்பணியில் பல அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டி இருந்ததாலும், காலவிரயம் ஏற்படுவதை தவிர்க்கவும், இந்த நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழகதலைமை தேர்தல் அதிகாரி தரப்பில், தேர்தல் ஆணையத்துக்குகடிதம் எழுதப்பட்டது. இதையடுத்து,தபால் வாக்குகளை தொகுதிகளுக்குபிரித்து அனுப்புவதில் புதிய நடைமுறையை ஆணையம் அறிமுகம்செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைதேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹுகூறியதாவது: புதிய நடைமுறையின்படி, திருச்சியில் இதற்காக ஒருங்கிணைந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவோர் செலுத்திய தபால் வாக்குகளுடன் 39 தொகுதிகளில் இருந்தும்அதிகாரிகள் திருச்சிக்கு வந்துஇந்த மையத்தில் ஒப்படைப்பார்கள்.

அங்கு தொகுதி வாரியாக வாக்குகள் பிரிக்கப்பட்ட பிறகு, தாங்கள் சார்ந்த தொகுதிக்கான தபால் வாக்குகளை பெற்றுக்கொண்டு தங்களது தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைப்பார்கள்.ஏப்ரல் 16-ம் தேதி வரை பெறப்படும் தபால் வாக்குகள் அனைத்தும் 17-ம் தேதி திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, அன்றே அனைத்து தொகுதிகளின் தேர்தல்நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எளிதாகவும், பயனளிக்கும் வகையிலும் உள்ளதால் இந்தநடைமுறையை தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ளது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x