Published : 13 Apr 2024 06:15 AM
Last Updated : 13 Apr 2024 06:15 AM
சென்னை: தமிழகத்தில் ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்படும், அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் உட்பட ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான திட்டங்கள் நாட்டுக்கே வழிகாட்டுவதாக திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு.
மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சியில், பட்டமேற்படிப்பு வரை இலவசப் படிப்பு, ஓலைக்குடிசைக்கு பதில் கான்கிரீட் வீடுகள் கட்ட ஆதிதிராவிடர் வீட்டு வசதிக் கழகத்தைத் தொடங்கி நாட்டுக்கே வழிகாட்டினார்.
ஊரின் ஒதுக்குப்புறத்தில் வாழ்ந்தவர்களை ஊரின் நடுவில் வாழச்செய்ய, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரியார் நினைவு சமத்துவபுர குடியிருப்புகளை ஏற்படுத்தினார்.
அதேபோல், ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை 16-லிருந்து 18 சதவீதமாக உயர்த்தியதுடன், மலைவாழ் பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் தனி ஒதுக்கீடும், அருந்ததியினருக்கு 4 சதவீதம் உள் ஒதுக்கீடும் வழங்கினார்.
சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில், முதல்முறையாக உயர் நீதிமன்ற நீதிபதியாக ஆதிதிராவிடரான ஏ.வரதராஜனை, 1973-ல் நியமித்தார். அவர் பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
இந்த வரலாறுகளை பின்னணியாக கொண்ட திராவிட மாடல் அரசு, கடந்த மூன்றாண்டுகளில் ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்ற நோக்குடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்.14-ம் தேதியை சமத்துவ நாளாக அறிவித்து, உறுதிமொழி ஏற்கப்படுகிறது. அம்பேத்கர் விருதின் பரிசுத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்ற அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தில் 65 சதவீத வங்கிக் கடனுக்கான 6 சதவீத வட்டியையும் அரசே ஏற்கிறது.
அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஊரகப்பகுதிகள் மட்டுமல்லாமல், நகர்ப்புறங்களிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட ஆண்டுதோறும் ரூ.200 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தூய்மைப் பணியாளர் நலவாரியம் மூலம், ரூ.10 கோடிக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நரிக்குறவர் இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆதிதிராவிடர், பழங்குடியின பள்ளி விடுதிகள், உண்டி உறைவிடப் பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த 3 ஆண்டுகளில் பழங்குடியினர் குடியிருப்புகளில் ரூ.475 கோடியில் 25,262 அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
திராவிட மாடல் அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால் ஆதிதிராவிட, பழங்குடியின சமுதாய இளைஞர்கள் எல்லா இடங்களிலும், பதவிகளிலும், பொறுப்புகளிலும் மற்றவர்களுக்கு இணையாக வீற்றிருந்து பணியாற்றுகின்றனர். பொருளாதார நிலை, சமுதாய மதிப்பு, பெருமைகளால் உயர்ந்து சிறந்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT