Published : 13 Apr 2024 05:47 AM
Last Updated : 13 Apr 2024 05:47 AM
சென்னை: சென்னையில் சட்டக் கல்லூரி அமைக்க 7 ஏக்கர் பரப்பில் இடம் தேர்வு செய்வது தொடர்பாக வருவாய்த் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வந்த டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டக்கல்லூரியை வெளியிடத்துக்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில், கல்லூரி இரண்டாக பிரிக்கப்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டது. மூன்று ஆண்டுகள் கொண்ட சட்டப்படிப்பு, திருவள்ளூர் மாவட்டம் பட்டரை பெரும்புதூர் கல்லூரியிலும், ஐந்து ஆண்டுகள் சட்டப் படிப்பு, காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் கல்லூரியிலும் வழங்கப்பட்டு வருகிறது.
சட்டக் கல்லூரியை இரு அண்டை மாவட்டங்களுக்கு மாற்றியதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த முறை இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, சென்னையில் சட்டக் கல்லூரியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சட்டக் கல்லூரியை சென்னையில் அமைக்க குறைந்தபட்சம் 7 ஏக்கர் நிலம் தேவைப்படும். இருப்பினும், சென்னையில் சட்டக் கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்வது தொடர்பாக வருவாய் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய சட்டக் கல்லூரி வளாகத்தையே பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், மற்றொரு முறை மாணவர்களுக்கு இடையே மோதல் நடப்பதை விரும்பவில்லை என கருத்து தெரிவித்தனர். மேலும், சென்னை மாநகர எல்லைக்குள் சட்டக் கல்லூரியை அமைப்பதற்கான இடத்தை கண்டறிந்து தெரிவிப்பதற்காக வரும் ஜூன் 24 வரை அரசுக்கு கால அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT