Last Updated : 16 Apr, 2018 02:24 PM

 

Published : 16 Apr 2018 02:24 PM
Last Updated : 16 Apr 2018 02:24 PM

ஸ்டெர்லைட் நிறுவனம் தந்த பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன்: பொன்.ராதாகிருஷ்ணன்

தனது தேர்தல் செலவுக்காக ஸ்டெர்லைட் நிறுவனம் கொடுத்தனுப்பிய பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பியதாக, மத்திய கப்பல் மற்றும் நிதித்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் நகரில் வஉசி துறைமுக பொறுப்புக் கழகம் சார்பில் ரூ.22 லட்சம் செலவில் மீன் வலை பின்னும் கூடம் மற்றும் மீன் ஏலமிடும் கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டி, மீனவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிடம் நான் பணம் வாங்கிவிட்டேன் என்றும், பணம் வாங்க வருகிறேன் எனவும் இங்கே சிலர் கூறுவதாகக் கேள்விப்பட்டேன். ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடிக்கு வருவதற்கு முன்பே, இந்த ஆலை வரக்கூடாது என வலியுறுத்தி தூத்துக்குடியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவன் நான்.

தேர்தலில் நான் போட்டியிட்ட நேரத்தில், அந்த நிறுவனம் தேர்தல் செலவுக்கு எனக்கு கொடுத்து அனுப்பிய பணத்தை வாங்கமாட்டேன் எனக் கூறி திருப்பி அனுப்பியவன் நான். ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து நான் ஒரு சல்லிக் காசு கூட வாங்கியதில்லை. இதற்கு மனசாட்சியும், தெய்வமும் தான் சாட்சி.

இப்போது 100 கோடி வாங்கினால் கூட தெரியாது. ஆனால், 100 கோடி, 1000 கோடி வாங்கியவர்கள் எல்லாம் இப்போது மாப்பிளை மாதிரி சுற்றி வருகிறார்கள்.

நான் உண்ணாவிரதம் இருந்த நேரத்தில் நீங்கள் என்னோடு வந்திருந்தால், ஸ்டெர்லைட் ஆலையே இங்கு வந்திருக்காது. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையை சரி செய்வது குறித்து மத்திய அரசு கவலைப்படுகிறது. வதந்திகளை பரப்பி உங்களை ஏமாற்றுவார்கள். அதனை நம்பிவிடாதீர்கள்”.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

முன்னதாக துறைமுக விருந்தினர் மாளிகை வளாகத்தில் ரூ.5 லட்சம் செலவில் அம்பேத்கர் வெண்கல சிலை, துறைமுக குடியிருப்புப் பகுதியில் கட்டப்பட்டுள்ள ரூ. 2.84 கோடியில் வணிக வளாக கட்டடம், பழைய துறைமுகம் அருகே ரூ. 80.40 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள சமுதாயக் கூடம், தூத்துக்குடி எஸ்ஏவி பள்ளியில் துறைமுக நிதி ரூ.17.42 லட்சம் உதவியுடன் ரூ.24 லட்சத்தில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடம் ஆகியவற்றை பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x