Published : 12 Apr 2024 10:22 PM
Last Updated : 12 Apr 2024 10:22 PM
கோவை: “கோவை மக்கள் அமைதியை விரும்பக் கூடியவர்கள். அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும், நிறுவனங்களை நடத்த முடியும். பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சி போய்விடும். நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது”, என்று கோவையில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று (ஏப்.12) கோவை மாவட்டம், சிட்டிபாளையத்தில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கோவை வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி வேட்பாளர் ஈஸ்வரசாமி, கரூர் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரை அறிமுகப்படுத்தி இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு பேசினார். அப்போது அவர் பேசுகையில், மாநாடு போல நடந்துகொண்டிருக்கும் இந்தக் கோவை கூட்டத்துக்கு மகுடம் வைத்ததைப் போல், இந்தியாவின் இளந்தலைவர் சகோதரர் ராகுல் காந்தி வருகை தந்திருக்கிறார். நாடு சந்திக்க இருக்கும், இரண்டாம் விடுதலை போராட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் கைகளை வலுப்படுத்த, திமுக தோளோடு தோள் நிற்கிறது.
திமுக எப்போதும், சோதனைக் காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு இருக்கும் கூட்டணிக் கட்சி. எப்போதும் வெல்லும் கூட்டணி, நம்முடைய கூட்டணி. சோனியா காந்தி மீதும் சகோதரர் ராகுல்காந்தி மீதும் தமிழக மக்கள் என்றும் தணியாத அன்பும் பாசமும் கொண்டவர்கள். அப்படிப்பட்ட ராகுலை, நம்முடைய ஸ்டைலில் வரவேற்க வேண்டும் என்றால் ராகுல் அவர்களே வருக... புதிய இந்தியாவுக்கு விடியல் தருக என இந்தியாவின் தென்முனையான தமிழகத்தில் இருந்து வரவேற்கிறேன்.
ராகுலின் நடைப்பயணத்தை, நான்தான் கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தேன். மும்பையில் நடந்த நிறைவு கூட்டத்திலும் பங்கெடுத்தேன். மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள் என்ற அண்ணா வழியில், ராகுல், தன்னுடைய நடைப்பயணத்தில் மக்களுடன் மக்களாக இருந்து அவர்கள் பிரச்சினைகளைத் தெரிந்துகொண்டு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை உருவாக்கியிருக்கிறார். இந்த “எலக்ஷனின் ஹீரோ”காங்கிரசின் தேர்தல் அறிக்கைதான். திமுக தொடர்ந்து வலியுறுத்தும் சமூகநீதி அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் எதிரொலித்திருக்கிறது. மாநிலங்களுக்கும், நாட்டுக்கும் நம்பிக்கையளிக்கும் வாக்குறுதிகளை ராகுல் காந்தி கொடுத்திருக்கிறார்.
மற்றொரு பக்கம் பிரதமர் மோடி, எப்போதும் வெளிநாட்டு டூரில் இருக்கிறவர், இப்போது தேர்தல் வந்துவிட்டது என்று உள்நாட்டு டூரில் இருக்கிறார். கூட்டங்களில் பேசுகிறாரே, அதில் எங்கேயாவது தன்னுடைய பத்தாண்டுகால ஆட்சியின் சாதனைகள் என்று எதையாவது பேசுகிறாரா? இல்லை. அவர் பேசுவதெல்லாம், இண்டியா கூட்டணி கட்சிகளை வசைப் பாடுகிறது. அதிலும், ஒரே பல்லவி, குடும்பக் கட்சி, ஊழல் கட்சி, இதற்கெல்லாம் நான் எத்தனையோ முறை பதில் சொல்லிவிட்டேன்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். யாருக்கும் நேராகப் பதவி வருவதில்லை. தேர்தலில் நின்று மக்களைச் சந்தித்து மக்களும் அவர்களுடன் செயல்பாடுகளை எடைபோட்டு வாக்களித்தால்தான், பதவிக்கு வர முடியும். பிரதமர் மோடி, குடும்ப அரசியல் என்று எங்களை மட்டும் அவமதிக்கவில்லை. எங்களைத் தேர்ந்தெடுத்த கோடிக்கணக்கான மக்களையும் அவர் அவமதிக்கிறார்.
அதே போன்று, ஊழலைப் பற்றி பேசுவதற்கு, பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டாமா? ஊழலுக்கு ஒரு பல்கலைக்கழகம் கட்டினால், அதற்கு வேந்தராக இருக்க உங்களுக்குத்தான் அத்தனை தகுதியும் இருக்கிறது. தேர்தல் பத்திரம் என்று ஒரு நடைமுறையைக் கொண்டுவந்து ஊழலைச் சட்டப்பூர்வமாக்கியது யார், நீங்கள்தானே? மற்ற கட்சிகளும் அதில் நிதி வாங்கி இருக்கிறோம் என்றால், நீங்கள் அந்த நடைமுறையைக் கொண்டு வந்ததுதான் காரணம். ஆனால், நீங்கள் எப்படி நிதி வாங்கினீர்கள்?
ED,IT, CBI என்று உங்கள் கூட்டணி அமைப்புகள் மூலமாக, ரெய்டு விட்டு மிரட்டி தேர்தல் பத்திரங்கள் பெற்றுப் பணம் பறித்தது பாஜக. பாஜகவுக்கு பணம் கொடுத்த கம்பெனிகள் மேல் எப்போது ரெய்டு விட்டீர்கள். உடனே அவர்கள் என்றைக்குப் பணம் கொடுத்தார்கள் என்று எல்லாத் தகவலும் இப்போது வெளியாகிக் கொண்டு இருக்கிறதே. அடுத்து, பி.எம். கேர்ஸ் நிதி. இதில் வசூல் செய்த தொகையைப் பற்றி கேள்வி கேட்டால், அது தனி அறக்கட்டளை என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால், அதை ஏன் பிரதமர் பெயரில் ஆரம்பித்து ஆயிரக்கணக்கான கோடிகளை நிதியாகப் பெற்றீர்கள்? இதற்கும் பதில் இல்லை.
அடுத்து, உங்கள் ஆட்சிக்கு சிஏஜி கொடுத்த சர்ட்டிபிகேட் என்ன? ”Seven Schemes - Seven lakh crore rupees - Mega Scam” - இதைப் பற்றி ஏன் வாயைத் திறக்கமாட்டேன் என்கிறீர்கள்? இதை வெளியிட்ட தணிக்கைத்துறை அதிகாரிகள் மூன்று பேரை, உடனே பணியிட மாற்றம் செய்த மர்மம் என்ன?
அடுத்து, ரஃபேல் ஊழல். காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்துக்கு 526 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டார்கள் என்றால், பாஜக ஆட்சியில் 1670 கோடி ரூபாய்க்கு வாங்கினார்கள். இதனால் பயனடைந்தது யார் என்று, காங்கிரஸ் கேட்ட கேள்விக்கு இன்றைக்கு வரை பிரதமர் பதில் சொல்லவில்லை. கார்ப்பரேட்களுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய்க்குக் கடன்களைத் தள்ளுபடி செய்து, கார்ப்பரேட் முதலாளிகளுக்காகவே எப்படி அரசை நடத்துகிறீர்கள் என்று, ராகுல் நாடாளுமன்றத்தில் அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பியபோது, பதில் சொல்லாமல், தனிநபர் தாக்குதல் செய்தீர்கள். அதுமட்டுமா, அவரின் எம்.பி பதவியையே பறித்தீர்கள்.
பிரதமர் மோடி ஊழல் பற்றிப் பேசலாமா? அதுமட்டுமா, இப்போத ஊழல்வாதிகளுக்கு கேரண்டி கொடுக்கும் “மேட் இன் பிஜேபி” வாஷிங் மெஷின் வைத்து, ஊழல் கறை படிந்தவர்களை சுத்தப்படுத்துகிறீர்களே, இனியும் நீங்கள் ஊழலைப் பற்றி பேசினால், கிராமத்தில் சொல்வார்களே, “யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளே வை”என்று அப்படித்தான் மக்கள் சொல்வார்கள்.
பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தும், சாதனைகள் என்று தமிழகத்துக்குச் சிறப்புத் திட்டங்கள் என்று எதையும் சொல்ல முடியாமல் அவதூறு செய்யும் பிரதமர் ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம், பத்தாண்டுகள் தமிழகத்தைச் சீரழித்த பழனிசாமி. நடப்பது இந்தியாவை யார் ஆளவேண்டும் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல். இண்டியா கூட்டணிதான் ஆளவேண்டும் என்று நாம் சொல்கிறோம். ஆனால், அதிமுகவைப் பொறுத்தவரை, யார் ஆளவேண்டும் என்று சொல்லாமல் யார் ஆளக்கூடாது என்றும் சொல்லாமல், யார்தான் உண்மையான எதிரி என்றே தெரியாமல், எதற்காகத் தேர்தலில் நிற்கிறோம் என்ற தெளிவே இல்லாமல், கள்ளக்கூட்டணிக்கு ஆதாயம் தேடித்தரக் களத்துக்கு வந்திருக்கிறார் பழனிசாமி.
தன்னைச் சுற்றியிருந்த அத்தனை பேரையும் முதுகில் குத்திய பழனிசாமி, பாஜகவின் கூட்டணி முறிந்துவிட்டது என்று சொன்னார். சரி ஏன் எதிர்த்து பேசவில்லை என்று நாங்கள் கேட்டால், பாஜகவை எதிர்த்துப் பேச முடியாது அது கூட்டணி தர்மம் என்று சொல்கிறார். இப்படிப்பட்டவர்களைப் பற்றி, நாங்கள் என்ன பேசுவது? ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால், “சிம்பிளி வேஸ்ட்”.
நம்மைப் பொறுத்தவரைக்கும், மூன்றே ஆண்டுகளில் நம்முடைய திராவிட மாடல் அரசு எத்தனையோ சாதனைகளை செய்திருக்கிறது. நம்முடைய சாதனைகளைத்தான் அடையாளமாகக் காட்டி, நாங்கள் வாக்கு கேட்கிறோம். ஒவ்வொரு கூட்டத்திலும் நம்முடைய திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளைப் பற்றி சொல்கிறேன். இப்படி நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய நாங்கள் பணியாற்றிக்கொண்டு இருந்தால் தொழில்வளம் மிகுந்த இந்தக் கோவையை கடந்த 10 ஆண்டாக பாஜக எப்படியெல்லாம் நாசமாக்கி இருக்கிறது என்று சொல்லட்டுமா?
பாஜக ஆட்சியில் இரண்டு பெரிய தாக்குதல் நடத்தியது. கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லி, ஏழைகளின் சுருக்குப்பையில் இருந்த பணத்தையும் பறித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் முதல் தாக்குதல். இதனால் பணப்புழக்கம் குறைந்து, பல தொழில்கள் முடங்கிப் போனது. இரண்டாவது தாக்குதல், ஜிஎஸ்டி என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, இந்தக் கோவையில் முதலாளிகளாக இருந்தவர்களை எல்லாம், கடனாளிகளாக மாற்றினார்கள். பலர் தங்களின் கம்பெனிகளை இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
அதுமட்டுமல்ல வங்கதேசத்துடன் பாஜக அரசு போட்ட ஒப்பந்தத்தால், இங்கு உருவான நூலும்-துணியும் தேங்கிக் கிடக்கிறது. 35 விழுக்காடு மில்களை, மூட வேண்டிய நிலையில் இந்த மேற்கு மண்டலம் இருக்கிறது. இரண்டு முறை கோவைப் பகுதிக்கு வந்து, கொங்குப் பகுதி எனக்கு மிகவும் நெருக்கமான பகுதி என்று பிரதமர் பேசினாரே, திமுக தமிழகத்துக்கான வளர்ச்சித் திட்டங்களைத் தடுக்கிறது என்று சொன்னாரே, எப்படிப்பட்ட வடிகட்டிய பொய் இது. இந்தக் கோவை பொதுக்கூட்ட மேடையில் இருந்து, நான் பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறேன்.
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மிகப்பெரிய தொழில் நிறுவனம், 6500 கோடி ரூபாய் முதலீட்டில் கோவையைச் சேர்ந்த பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முதலீட்டை மேற்கொள்வதாக முடிவானது. தமிழக அரசும் இதற்கான எல்லா பேச்சுவார்த்தைகளும் முடிந்த பிறகு, அவர்களை மிரட்டி அந்தத் தொழில் திட்டத்தை குஜராத்துக்கு மாற்றிவிட்டார்கள். இதுதான் கோவைக்கான பாஜகவின் போலிப் பாசம். எதிர்காலத்தில், மிகப் பெரிய வாய்ப்புகளைத் தரும், செமிகண்டக்டர் தொழில் திட்டத்தை குஜராத் மாநிலத்துக்கு மிரட்டி மடைமாற்றியது பாஜக தான்.
எப்படி கூச்சமே இல்லாமல் ஓட்டு கேட்டு வருகிறீர்கள்? கோவையில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? கோவை மக்கள் மேல் ஏன் உங்களுக்கு இவ்வளவு வன்மம்? கோவை மக்கள் அமைதியை விரும்பக் கூடிய மக்கள். அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும், நிறுவனங்களை நடத்த முடியும். பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சி போய்விடும். நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது.
தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுப்பது யார் என்று தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால், பிரதமர் இங்கு வந்து, இட்லி பிடிக்கும், பொங்கல் பிடிக்கும், தமிழ் பிடிக்கும், தமிழகம் பிடிக்கும் என்று பேசும் போலி முகமூடி மொத்தமாகக் கிழிந்து தொங்கிவிட்டது! இப்படி “கோவை வேண்டாம்” - “தமிழ்நாடு வேண்டாம்” என்று புறக்கணித்த மோடிக்கு இப்போது தமிழகம் சொல்ல வேண்டியது, “வேண்டாம் மோடி” சொல்லுங்கள், “வேண்டாம் மோடி” இன்னும் சத்தமாக, “வேண்டாம் மோடி” தெற்கிலிருந்து வரும் இந்தக் குரல், இந்தியா முழுவதும் கேட்கட்டும். தமிழக வளர்ச்சியைத் தடுத்தால், தமிழ்மொழியைப் புறக்கணித்தால், தமிழ்ப் பண்பாட்டுமேல் தாக்குதல் நடத்தினால், தமிழக மக்களின் பதில் எப்படி இருக்கும் என்று ஏப்ரல் 19-ம் தேதி உங்கள் வாக்குகள் மூலம் நிரூபிக்கவேண்டும்”, என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT