Published : 12 Apr 2024 09:47 PM
Last Updated : 12 Apr 2024 09:47 PM

“45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம்” - ராகுல் காந்தி பேச்சு @ கோவை

கோவையில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். | படம்: எம்.பெரியசாமி

கோவை: “இந்தியாவில் ஏழை மக்களுக்காக பிரதமர் மோடி ஒன்றுமே செய்தது இல்லை. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. 83 விழுக்காடு இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். இந்தியா பிரிட்டீஷ் ஆட்சியில் இருந்ததைவிட மோசமான நிலையில் தற்போது உள்ளது. ஆனால், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யாத பிரதமர் மோடி, 20 முதல் 25 மிகப் பெரும் பணக்காரர்களின் 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார்” என்று கோவையில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை செட்டிப்பாளையம் பகுதியில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இண்டியா கூட்டணி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது: “நான் தமிழக மக்களை மிகவும் அன்போடு நேசிக்கிறேன். தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு எனக்கு மிகவும் பிடித்தது. தமிழக மக்கள் காட்டும் அன்பு, என் மனதில் நிலைத்து நிற்கிறது, என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. எனவே, தமிழகம் வருவதையும், உங்களுடன் பேசுவதையும் எப்போதும் நான் விரும்புகிறேன்.

இந்தியாவில் இன்று கருத்தியல் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் நரேந்திர மோடி அரசு வெளியேறுவதற்கான ஒரு புயல் விரைவில் வரவிருக்கிறது. நான் குறிப்பிடும்போது அதை நரேந்திர மோடியின் அரசு என்று கூறினேன். ஆனால், உண்மையில் அது அதானியின் அரசு. பிரதமர் மோடி அனைத்தையும் அதானிக்காகவே செய்து கொண்டிருக்கிறார். சாலைகள், துறைமுகம், விமான நிலையம் உள்பட எதுவாக இருந்தாலும், அதானி விரும்பினால், அதை உடனே பிரதமர் மோடி அவருக்குக் கொடுத்து விடுவார்.

அதானிக்கு மும்பை விமான நிலையம் தேவைப்பட்டது. அதை அவர் கேட்டார். உடனே விமான நிலையத்தின் உரிமையாளர்கள் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அடுத்த சில மாதங்களில் மும்பை விமான நிலையம் அதானி வசமானது. அத்துடன் அந்த சிபிஐ விசாரணை காணாமல் போனது. அதானிக்கு எது தேவை என்றாலும், அது அவருக்கு உடனே கிடைத்துவிடும். அதானி இந்த மத்திய அரசு மூலம் எப்படியெல்லாம் சலுகைகளைப் பெறுகிறார் என்று நான் நாடாளுமன்றத்தில் பேசினேன். உடனடியாக என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அடுத்த சில வாரங்களிலேயே என்னுடைய எம்.பி. பதவி பறிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேன்.

நான் அதானி குறித்து பேசிய உடனே, என்னுடைய எம்.பி. பதவியையும், நான் குடியிருந்த வீட்டையும் என்னிடம் இருந்து பறித்தனர். உண்மையில் அந்த வீட்டை எடுத்துக் கொண்டது மகிழ்ச்சி, எனக்கு அது தேவை இல்லை. எனக்கு இந்தியாவில் வாழும் மக்களின் மனங்களில் லட்சக்கணக்கான வீடுகள் இருக்கின்றன. லட்சக்கணக்கான தமிழக மக்கள் எனக்காக தங்களது வீட்டைத் திறந்து வைப்பார்கள். காரணம் தமிழக மக்களுக்கும் எனக்கும் இருப்பது அரசியல் ரீதியான உறவு அல்ல, குடும்ப ரீதியிலான உறவு உள்ளது. தொன்மையான நாகரிகம் கொண்ட தமிழக மக்களுக்கு யாரை எப்படி மதிக்க வேண்டும் என்பது நன்றாகவேத் தெரியும்.

உங்களிடம் யார் வந்து உண்மையைப் பேசுகிறார்கள் என்பதை நீங்கள் முடிவு செய்து விடுவீர்கள். தமிழகத்துக்கு என்று தனி வரலாறு உள்ளது. உங்கள் அனைவரையும் பார்க்கும்போதே, தமிழகத்தின் வரலாறு என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி ஆகியோர் தங்களது அறிவாற்றலின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர். அவர்கள் வெறும் தலைவர்கள் மட்டுமல்ல. தமிழக மக்களின் உளப்பூர்வமான உணர்வுகளை பிரதிபலித்தவர்கள். அவர்கள் பேசினால், உலகமே உற்றுநோக்கும். காரணம், அவர்களது பேச்சுகள் தமிழக மக்களின் பிரதிபலிப்பு.

தமிழக மக்களின் குரல் இப்போது மிக எளிமையான சில கேள்விகளை எழுப்புகிறது. பிரதமர் மோடி, அதானி, ஆர்எஸ்எஸ் தொடர்பு குறித்து அந்த கேள்விகள் இருக்கின்றன. தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடு, வரலாறு மீது ஏன் தாக்குதல் நடத்துகிறீர்கள்? பிரதமர் தமிழகம் வந்து தனக்கு தோசை பிடிக்கும் என்று கூறுகிறார். ஆனால், டெல்லிக்குச் சென்றபிறகு, ஒரே நாடு, ஒரே தேர்தல் ஒரே தலைவர், ஒரே மொழி என்று பேசுகிறார். ஏன் ஒரே மொழி, தமிழ், வங்காளம், கன்னடம் ஆகிய மொழிகள் ஏன் இருக்கக்கூடாது. இங்கு வந்து தோசை பிடிக்கும் என்று கூறிவிட்டு, அங்கு சென்றபிறகு, மொழி, கலாச்சாரம், வரலாற்றின் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள்.

தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இளைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியைக் கொண்டு வந்து சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன. பிரதமர் மோடிக்கு தோசை மட்டுமல்ல, வடை கூட பிடிக்கலாம். ஆனால், அதுவல்ல இப்போது பிரச்சினை. உங்களுக்கு தமிழ் மொழி பிடிக்குமா என்பதுதான் எங்களுடைய கேள்வி. நாங்கள் தமிழின் வரலாற்றை மதிக்கிறோம். தமிழகத்துக்கும் இந்த நாட்டுக்கும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்.

எனது மூத்த சகோதரர் ஸ்டாலின், நான் வேறு எந்த அரசியல் தலைவரையும் இப்படி அழைப்பது இல்லை. அவர் பேசும்போது, இந்த நாட்டில் நடந்த ஊழல்களிலேயே மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திர ஊழல் என்று கூறினார். பாஜக கட்சி ஒரு வாஷிங் மெஷினை வைத்துள்ளதாக கூறினார். அது என்ன என்பதை நான் உங்களுக்கு விளக்குகிறேன். முதலில் பிரதமர் மோடி அரசியலை தூய்மைப்படுத்தப் போவதாக கூறினார். பின்னர் தேர்தல் பத்திரம் என்ற ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வருகிறேன் என்று கூறினார். அத்திட்டத்தின் கீழ் யார் பணம் கொடுத்தார்கள் என்பது வெளியில் தெரியாது. அவர்கள் எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் கொடுத்திருக்கலாம், பணம் கொடுத்தவர்கள் யார் என்று வெளியில் தெரியாது.

சில வருடங்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் அந்த திட்டத்தை சட்ட விரோதம் என்று அறிவித்தது. யார் யார் எல்லாம் பாஜகவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் பணம் கொடுத்தார்கள் என்ற பட்டியலை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சில வாரங்களுக்கு அந்த வங்கி, பணம் கொடுத்தவர்களின் பெயர்களை வெளியிடவில்லை. அதன்பிறகு உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுப்பதாக கூறியபிறகு, பணம் கொடுத்தவர்களின் பெயர்கள் வெளியே வர ஆரம்பித்தன. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நேரடியாக பாஜகவுக்குச் சென்றுள்ளது.

யார் யார் எந்த தேதியில் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்ற விவரங்களும் வெளியிடப்பட்டது. அப்போதுதான் பிரதமர் மோடியின் புத்திசாலித்தனம் அம்பலமானது. ஒரு கம்பெனிகள் மீது சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. சில நாட்களுக்குப் பிறகு அந்த கம்பெனிகள் பாஜகவுக்கு தேர்தல் நிதியைக் கொடுக்கின்றனர். அதன்பின்னர் அந்த வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படுகிறது. இந்திய ஊடகங்கள் எதுவும் இந்த தகவல்களை வெளியிடவில்லை. காரணம் இந்திய அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் அதானிதான், அந்த வேலைகளை செய்கிறார். இதுதான் இந்த சமூகத்தில் அவர்கள் செய்கின்ற மிகப்பெரிய அச்சுறுத்தல். யாரையாவது மிரட்டி அவர்களிடம் பணம் பறிப்துதான் அச்சுறுத்தல்.

அதேபோல், சில நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்பந்தங்களைக் கொடுத்திருக்கிறது. அதிலிருந்து சில நாட்களில் ஒப்பந்தங்களைப் பெற்ற நிறுவனங்கள் பாஜகவுக்கு தேர்தல் நிதி கொடுத்துள்ளனர். சாலைகள், சுரங்கம் அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கான ஒப்பந்தங்களை பாஜக வழங்கியுள்ளது. இந்த உலகத்திலேயே இதுபோன்ற ஊழலை செய்தவர்கள் இவர்கள்தான். ஆனால், பிரதமர் மோடி தன்னை தூய்மையான அரசியல்வாதி என்று கூறிக்கொள்கிறார். அதைத்தான் முதல்வர் ஸ்டாலின் வாஷிங் மெஷின் என்று கூறுகிறார்.

இந்தியாவில் ஏழை மக்களுக்காக பிரதமர் மோடி ஒன்றுமே செய்தது இல்லை. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. 83 விழுக்காடு இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். இந்தியா பிரிட்டீஷ் ஆட்சியில் இருந்ததைவிட மோசமான நிலையில் தற்போது உள்ளது. ஆனால், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யாத பிரதமர் மோடி, 20 முதல் 25 மிகப்பெரும் பணக்காரர்களின் 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார்.

மத்திய அரசில் 30 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அந்த 30 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவோம். வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு முன்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிப்பதற்கான திட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

வேலை உறுதி திட்டம் உருவாக்கப்படும் 6 மாதம் அல்லது ஓராண்டு தனியார் வேலைவாய்ப்பு வழங்கி, பின்னர் அரசு வேலைக்கு தயார் செய்யப்படுவார்கள். பொறியியல், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்தவர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தை உருவாக்குவோம். தகுதியான ஒவ்வொரு இளைஞர், இளம்பெண்கள் தனியார், அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணி பெரும் வகையில் ஓராண்டு பயிற்சியளிப்பதோடு, ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

தமிழக மாணவர்களின் மிகப்பெரிய பிரச்னையாக நீட் தேர்வு உள்ளது. இண்டியா கூட்டணியைப் பொருத்தவரை நீட் தேர்வு மாநில அரசின் முடிவுபடியே செயல்படுத்தப்படும். நீட் தேர்வு ஏழை மக்களுக்கு எதிரானது. நீட் தேர்வு அந்தந்த மாநிலங்களின் விருப்பம்தான். தமிழக மக்களே தங்களுடைய கல்வி முறை எப்படி இருக்க வேண்டும். தேர்வு முறை எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க சட்டம் கொண்டு வரப்படும். ஒவ்வொரு விவசாயிக்கும் சட்ட ரீதியாக குறைந்தபட்ச ஆதார விலை பெற அரசு உறுதியளிக்கும். பிரதமர் தேசத்தின் பெரிய பணக்காரர்களுக்கு கடன் நிவாரணத்தை அளித்துள்ளார். ஆனால், எங்களைப் பொருத்தவரை ஏழை விவசாயிகளுக்கு கடன்களைத் தள்ளுபடி செய்ய விரும்புகிறோம்.

தமிழகத்தின் பெண்களும், இந்தியாவின் பெண்களும் தேசத்தின் எதிர்காலத்தைப் பார்த்துக் கொள்பவர்கள். அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி அதானி கூட்டணி இந்தியாவில் கோடீஸ்வரர்கள், ஏழைகள் என்ற இரு பிரவு மக்களை உருவாக்கியுள்ளனர். நாங்கள் இந்த நாட்டில் வறுமையை ஒழிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதனால் ஏழை பெண்களுக்காக சிறந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். வறுமையின் பிடியில் உள்ள குடும்பங்களுக்கு இத்திட்டம் உதவும். ஏழை குடும்பத்திலும் ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.8,500 ஆயிரம் வீதம் கிடைக்கும். இந்தியாவில் இருந்து வறுமையை நிரந்தரமாக விரட்ட முடிவு செய்துள்ளோம்.அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியம் இருமடங்காக்கப்படும். அரசு வேலைகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வோம். மக்களவை, சட்டப்பேரவையில் உடனடியாக மகளிருக்கான 50 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

கலாசாரம், மொழியை பாதுகாக்க தொடுக்கப்படும் போரே இந்த தேர்தல். இந்த நாட்டு மக்களின் வரலாறு, மொழி, கலாச்சாரம், உரிமைகள் அனைத்து அரசமைப்பு சட்டத்தின்படி பாதுகாப்போம். அரசியலமைப்புச் சட்டம் என்பது வெறும் புத்தகம் அல்ல. அது இந்திய மக்களின் ஆன்மா, அவர்களுடைய குரல். அந்த ஆன்மாவும், குரலும் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் அமைப்பால் குறிவைத்து தாக்கப்படுகிறது. இந்தியா என்பது மக்களுக்கான நாடே தவிர, அது ஆர்எஸ்எஸ் அமைப்புக்குச் சொந்தமானது அல்லை.

இந்தியாவில் இருக்கும் பல பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், மாணவர்கள் என்ன கற்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த நாட்டின் அதிகார அமைப்புகள், சட்டத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவைகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது நம் நாட்டின் அடிப்படைக் கோட்பாட்டுக்கு எதிரானது. இது நாட்டின் ஒன்றியங்களின் மீது நடத்தப்படும் தாக்குதல். ஏற்கெனவே அவர்கள் அரசமைப்புச் சட்டத்தை மாற்றப்போவதாக கூறியுள்ளனர்.

பாஜக அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறையை வைத்து இதுபோன்ற அமைப்புகளின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்துகின்றனர். இந்த புலனாய்வு அமைப்புகள் எல்லாம் பிரதமரின் தனிப்பட்ட சொத்துகள் அல்ல. இந்த அமைப்புகள் எல்லாம், இந்திய மக்களுக்கு சொந்தமானவை. பிரதமர் இந்த அமைப்புகளை தன்னுடைய சொந்தமானதைப் போல கையாண்டு வருகிறார். எனவே, இந்த தேர்தல் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க நினைப்பவர்களுக்கும், அதை அழித்தொழிக்க நினைப்பவர்களுக்கு இடையே நடக்கும் போர். அரசமைப்புச் சட்டம், ஜனநாயகத்தை பாதுகாக்க நினைக்கும் இண்டியா கூட்டணி இந்த தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறும்”, என்று ராகுல் காந்தி பேசினார். | வாசிக்க > “தமிழக வேண்டுகோளை ‘பிச்சை’ என நிராகரிக்கிறது மத்திய அரசு” - ராகுல் காந்தி ஆவேசம் @ நெல்லை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x