Published : 12 Apr 2024 09:09 PM
Last Updated : 12 Apr 2024 09:09 PM
நாமக்கல்: “திமுகவைச் சேர்ந்த 4 முதல்வர்கள் அதிகாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி பேசினார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தமிழ்மணியை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது அவர் பேசியது: “திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள்? அதிகாரம் மையங்களாக 4 முதல்வர்கள் இருக்கிறார்கள். நாட்டுக்கு ஒரு முதல்வர்தான் தேவை. திமுகவைச் சேர்ந்த 4 முதல்வர்கள் அதிகாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். உதயநிதி, துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட நான்கு முதல்வர்கள் தமிழகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக ஆட்சிக் காலத்தையும் திமுக ஆட்சி காலத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. சட்டம் - ஒழுங்கு சீர் கெடுகிறதோ அந்த மாநிலம் பாதிக்கப்படும். பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. அதிமுக ஆட்சியில் 7 பாலியல் வன்கொடுமை வழக்குகள். 2 ஆண்டு திமுக ஆட்சியில் 52 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 30 ஆயிரம் லாரிகள் இங்கு உள்ளது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள்.
லாரி விலை, உதிரிபாக விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, தொழில் பாதிப்பு, திமுக ஆட்சியில் டீசல் விலை குறைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றபடவில்லை. டீசல் விலை உயர்வால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். வாடகை உயர்வு பொருள் விலை உயர்வு விலைவாசி ஏற்றம். பொதுமக்கள் பாதிப்பு மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை. 60 ரூபாய்க்கு விற்ற டீசல் 96 ரூபாயக்கு விற்கிறது. கட்டுமான பொருள், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு டீசல் விலை தான் காரணம்.
கம்பி விலை உயர்வு மணல் எம் சாண்ட் விலை உயர்வால் கனவில் தான் வீடு கட்ட முடியும். கட்டுமான பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கொண்டு வருவோம் என வாக்குறுதி கொடுத்த திமுக அதனை நிறைவேற்றவில்லை.
தமிழகம் போதைப் பொருள் மாநிலமாக மாறிவிட்டது. ஸ்டாலினால் கட்டுப்படுத்த முடியவில்லை . வெளிநாட்டில் இருந்து போதைப் பொருள் கடத்திய ஜாபர் சாதிக்குடன் அப்பா ஸ்டாலின், மகன் உதயநிதியுடன் போட்டோ எடுத்துள்ளனர். அவர்களுக்கு என்ன தொடர்பு என நமக்கு தெரியாது. இந்த பகுதியில் மேனகா என்ற கவுன்சிலருக்கு சொந்தமான குடோனில் கள்ள மதுபானம் தயாரிக்கபட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் நாமக்கல் கூட்டு குடிநீர், திருச்செங்கோட்டை மையமாக வைத்து சாலைகள் விரிவாக்கம் என பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. பரமத்தியில்186 கோடியில் வாய்க்கால் கரைகள் சீரமைப்பு, புதிய தாலுக்கா அலுவலகங்கள் அமைத்தோம். வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை கிடப்பில் போட்டு விட்டனர். சங்ககிரி பகுதியில் 33 ஏரிகள் நிரப்பும் திட்டம் கிடப்பில் போட்டு விட்டனர்.
பறவை காய்ச்சல் ஆய்வு மையம், ஆட்டோ நகர் ஜவ்வரிசி தொழிற்சாலை, முட்டை பாதுகாப்பு மையம் அருந்திய மக்களுக்கு ஆதிதிராவிட மக்களுக்கு தனி வீடுகள் ஆகியவை எங்கள் வேட்பாளர் தமிழ்மணி வெற்றி பெற்று வந்தால் நிறை வேற்றி தரப்படும்” என்றார்.
முன்னாள் அமைச்சர்கள் பி. தங்கமணி வி. சரோஜா, எம்எல்ஏக்கள் சேகர், சுந்தரராஜன், முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி, வேட்பாளர் எஸ் தமிழ்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT