Published : 12 Apr 2024 08:20 PM
Last Updated : 12 Apr 2024 08:20 PM
மதுரை: “திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் ஊழல்களால் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை” என மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.
மதுரை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசனுக்கு ஆதரவாக மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சி மூலம் ஆதரவு திரட்டினார். மதுரை நேதாஜி சாலையில் முருகன் கோயில் அருகில் இருந்து தொடங்கி தெற்கு ஆவணி மூல வீதி, நகைக்கடை பஜார் வழியாக விளக்குத் துண் காவல் நிலையம் வரை சென்று இந்த‘ ரோடு ஷோ’நிறைவுற்றது. திறந்த வேனில் சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, தாமரை சின்னத்தை காண்பித்தவாறு ஆதரவு திரட்டினார்.
சாலையின் இரு பக்கங்களிலும் பாஜகவினர், பொதுமக்கள், வியாபாரிகள் திரண்டு நின்று அமித்ஷாவை பார்த்து உற்சாகமாக கையசைத்து ஆராவாரம் செய்தனர். அவரது வாகனத்துக்கு முன்னதாக மேளதாளம் முழங்க பாஜகவினர் உற்சாகத்துடன் அணிவகுத்துச் சென்றனர். மீண்டும் மோடி பிரதமராக தாமரைக்கு வாக்களியுங்கள் போன்ற கோஷங்களை எழுப்பினர். ரோடு ஷோ விளக்குத்தூண் ரவுண்டானா அருகே நிறைவு பெற்றது. மாலை 6.45 மணிக்கு தொடங்கிய ரோடு ஷோ இரவு 7.30 மணிக்கு விளக்குத்தூண் அருகே நிறைவடைந்தது.
அப்போது, உள் துறை அமைச்சர் அமித் ஷா பேசியது: “மதுரை மக்களுக்கு எனது வணக்கம். மழையிலும் கூட மதுரை மக்கள் மிகப்பெரிய வரவேற்பை அளித்துள்ளீர்கள். தமிழகத்தில் இந்தமுறை அதிமுக, திமுக இரு கூட்டணியையும் 40 தொகுதிகளிலும் கைவிட வேண்டும். அதிமுக, திமுக இவர்களிடையே நிலவும் ஊழலால் தமிழகம் பெற வேண்டிய வளர்ச்சிகளை பெறவில்லை. மோடி தேசத்தின் வளர்ச்சி, பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ளார். தற்போது சரியான சமயம் வந்துவிட்டது. மோடிக்கு வாக்களிக்க தயாராகி விட்டீர்கள்.
பாஜக மட்டுமே தமிழ் மற்றும் தமிழக வளர்ச்சியில் அக்கறை செலுத்துகிறது. தமிழத்தின் பெருமையை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பறைசாற்றி வருபவர் பிரதமர் மோடி மட்டுமே. என்னால் தமிழில் பேச முடியவில்லையே என்பதற்காக மன்னிட்டு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த தேர்தலில் தமிழில் பேச கற்றுக் கொள்வேன். தாமரை சின்னத்துக்கு வாக்களித்து மதுரை வேட்பாளர் பேராசிரியர் ராம.ஸ்ரீனிவாசனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று அவர் பேசினார். மேலும், ராம.ஸ்ரீனிவாசன் நன்றி தெரிவித்தபோது, அனைவருக்கும் சித்திரை திருவிழா வாழ்த்துக்களை தமிழில் தெரிவிக்கும்படி அமித் ஷா கூறினார்.
பாதுகாப்பு: உள்துறை அமித் ஷா வருகையையொட்டி மதுரை மாநகர் பகுதி முழுவதும் மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரோடு ஷோ வழித்தடத்தில் இன்று மாலை முதல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு சாலையின் இரு புறங்களிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன.
ரோடு ஷோ நடைபெற்ற பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள உயரமான கட்டிடங்களில் போலீஸார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியதால் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மாற்றுப்பாதையில் கோயிலுக்கு சென்றனர்.
மதுரையில் அமித் ஷா ரோடு ஷோ ஏற்கெனவே இரு முறை திட்டமிடப்பட்டு ரத்து செய்யப்பட்டது. இன்று ரோடு ஷோவுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை பைரவர் மற்றும் சத்யவகீஸ்வரர் கோயிலுக்குச் செல்ல அமித் ஷா திட்டமிட்டிருந்தார். மோசமான வானிலை காரணமாக திருமயம் நிகழ்ச்சியை அமித்ஷா ரத்து செய்தார். காரைக்குடியில் சிவகங்கை பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக அமித் ஷா நடத்த திட்டமிட்டிருந்த ரோடு ஷோ ஏற்கெனவே ரத்து செய்யப்பட்ட நிலையில் திருமயம் பயணம் இன்று ரத்து செய்யப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு: முன்னதாக, மதுரை விமான நிலையத்திலிருந்து பெருங்குடி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்ற அமித் ஷா பின்னர் மதுரை ரோடு ஷோவில் பங்கேற்றார். முன்னதாக மதுரையில் அமித்ஷா ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், மக்களவைத் தேர்தலை ஒட்டி மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ நடத்தி பிரச்சாரம் செய்கிறார்.
அவரது ரோடு ஷோ நேதாஜி ரோடு முருகன் கோயில் முன்பு தொடங்கி விளக்கத்தூண் காவல் நிலையம் வரை நடைபெறுகிறது. இதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரோடு ஷோ நடைபெறும் பாதையில் 5 இடங்களில் கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். எனவே அமித்ஷா ரோடு ஷோவில் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், 3 இடங்களில் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நெருக்கடியான பகுதி என்பதால் 2 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை அணுகுவதை தவிர்க்க வேண்டும், எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT