Published : 12 Apr 2024 06:37 PM
Last Updated : 12 Apr 2024 06:37 PM
நெல்லை: "பாஜகவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கிடையாது. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பாஜக தொடர்ந்து எதிர்த்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அதானிக்கும், அம்பானிக்கும் பாஜக செய்துக் கொண்டிருந்த சேவைகளை எல்லாம் கேள்வியாக எழுப்பினார் என்ற ஒரே காரணத்துக்காக ராகுலை நாடாளுமன்றத்தை நீக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்தது தான் பாஜக" என்று தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி பேசியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதில் கலந்துகொண்டு பேசிய தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, "நான் அடிக்கடி ராகுல் காந்தியிடம் சொல்வது, தமிழகம் உங்களை எப்போதும் வரவேற்க காத்திருக்கிறது, உங்களை அதிகம் நேசிக்கக் கூடியவர்கள் நாங்கள் என்பதுதான். அதற்கு உதாரணம் தான் காலையில் இருந்து இங்கு தகித்துக் கொண்டிருந்த வெயில் ராகுல் காந்தி கால் வைத்த உடன் பூங்காற்றாக மாறியுள்ளது.
வரக்கூடிய தேர்தல் என்பது நம் முன்னோர்கள் இந்த நாட்டை எப்படி காண வேண்டும் என்று கனவு கண்டார்களோ அந்த கனவை மீட்டெடுக்கக் கூடிய தேர்தல் இது. பாஜகவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கிடையாது. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பாஜக தொடர்ந்து எதிர்த்து கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். அதானிக்கும், அம்பானிக்கும் பாஜக செய்துக் கொண்டிருந்த சேவைகளை எல்லாம் கேள்வியாக எழுப்பினார் என்ற ஒரே காரணத்துக்காக ராகுலை நாடாளுமன்றத்தை நீக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்தது தான் பாஜக.
எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்களை எல்லாம் சிறைக்கு அனுப்ப வேண்டும். கேள்விக் கேட்கக் கூடிய அத்தனை பேரையும் மவுனமாக்க எதை செய்யவும் தயாராக இருக்கக்கூடிய இயக்கம் தான் பாஜக. இந்த நாட்டில் பேச்சுரிமையை, சாமானிய மக்களின் உரிமையை காப்பாற்ற வேண்டும் என்றால், இந்த தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றிபெற வேண்டும்.
காங்கிரஸும், திமுகவும் தொடர்ந்து இணைந்தே இருப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்க கூடிய இயக்கமாக இருப்பது திராவிட இயக்கம். அதன் அடிப்படை கொள்கைகளை இன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பார்க்க முடிகிறது. தனியார் நிறுவனத்திலும் இடஒதுக்கீட்டை கொண்டு வரவேண்டும் என்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. எனவேதான், இரு கட்சிகளும் இணைந்தே பயணிக்கிறது என்பதை எங்களை விமர்சிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழகத்தில் இருக்கும் திராவிட மாடலின் தொடர்ச்சியாக இந்த நாட்டின் அரசமைப்பு இருக்க வேண்டும் என்ற நமது கனவை நிறைவேற்றக் கூடிய தலைவர் ராகுல் காந்திதான்." என்று பேசினார்.
ராகுல் பேசியது என்ன? - இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, “தமிழ் மீது தொடுக்கப்படும் எந்த தாக்குதலும், தமிழர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே நான் பார்க்கிறேன். தமிழகம் வெள்ள நிவாரணம் கோரினால், அந்தத் தொகையை கொடுப்பதற்கு மத்திய அரசு மறுக்கிறது. தமிழகத்தின் வேண்டுகோளை மத்திய அரசு பிச்சை என்று கூறி நிராகரிக்கிறது. தமிழக மீனவர்கள் உதவி கோரினால், மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினாலும் ஒன்றும் கிடைக்கவில்லை” என்றார்.
மேலும், “தமிழக மாணவர்களின் மிகப் பெரிய பிரச்னையாக நீட் தேர்வு உள்ளது. இண்டியா கூட்டணியைப் பொறுத்தவரை நீட் தேர்வு என்பது மாநில அரசின் முடிவுபடியே செயல்படுத்தப்படும். நீட் தேர்வு ஏழை மக்களுக்கு எதிரானது. நீட் தேர்வு அந்தந்த மாநிலங்களின் விருப்பம்தான். தமிழக மக்களே தங்களுடைய கல்வி முறை எப்படி இருக்க வேண்டும். தேர்வு முறை எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்” என்றார்.
அத்துடன், “விவசாயிகளைப் போல மீனவர்கள் முக்கியமானவர்கள். மீனவர்களுக்கு டீசல் மானியம், படகுகளுக்கு காப்பீடு, கிரெடிட் கார்டு உள்ளிட்டவை வழங்கப்படும். உள்நாட்டு மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும்.
கலாசாரம், மொழியை பாதுகாக்க தொடுக்கப்படும் போரே இந்தத் தேர்தல். நானும், காங்கிரஸ் கட்சியும் மக்களுடன் இருப்போம். நரேந்திர மோடி மட்டுமல்ல, உலகின் எந்தவொரு சக்தியாக இருந்தாலும் தமிழ் மொழியையோ, கலாச்சாரத்தையோ தொட்டுப் பார்க்க முடியாது என்று உறுதியளிக்கிறேன். இந்திய அரசமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க தொடுக்கப்படும் இந்தப் போரில் இண்டியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” என்று ராகுல் காந்தி பேசினார். | முழுமையாக வாசிக்க > “தமிழக வேண்டுகோளை ‘பிச்சை’ என நிராகரிக்கிறது மத்திய அரசு” - ராகுல் காந்தி ஆவேசம் @ நெல்லை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT