Published : 12 Apr 2024 06:17 PM
Last Updated : 12 Apr 2024 06:17 PM

“திமுகவுக்கு பயம்!” - தன் மீதான வழக்குப் பதிவு குறித்து அண்ணாமலை விளக்கம்

கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார் | படம்: ஜெ.மனோகரன்

கோவை: “மக்களின் அன்பு காரணமாக, தேர்தல் பிரச்சாரத்தின்போது, தாமதம் ஆவது சகஜம்தான். ஆவாரம்பாளையத்தில் காவல் துறையினரும் இருந்தனர். நான் மைக்கில் பேசி பிரச்சாரம் செய்திருந்தால் அந்த வீடியோவை அவர்களை வெளியிடச் சொல்லுங்கள். நான் சென்ற இடங்களில் எல்லாம் காவல் துறையினர், தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் ஆணையத்தின் வீடியோப் பதிவு குழுவினர் இருந்தனர். பாஜகவைப் பார்த்து திமுக பயப்படுகிறது” என்று தன் மீதான வழக்குப் பதிவு குறித்த கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தை அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார். மேலும், கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையையும் அவர் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, ஒரு வேட்பாளர் 10 மணிக்கு மேல் வாக்காளர்களைச் சந்திக்கக் கூடாது என்று இல்லை.

எங்களுடைய பிரச்சாரம் முடிவதற்கு, இரவு 12.30 முதல் 1.30 மணி வரை ஆகிவிடுகிறது. திட்டமிட்டப்படி பிரச்சாரம் செய்ய வேண்டிய இடங்களுக்கு சென்று சேர முடியவில்லை என்றால், இரவு 10 மணிக்குப் பிறகு மைக்கை அணைத்துவிட்டு, அங்கு சென்று மக்களைச் சந்தித்து குறைந்தபட்சம் ஒரு வணக்கமாவது சொல்லிவிட்டு வரவேண்டும். காரணம், மக்கள் அந்தப் பகுதியில் 3 முதல் 4 மணி நேரம் காத்திருக்கின்றனர்.

திமுகவின் பிரச்சாரத்துக்கு ஆட்களே வருவதில்லை. ஒரு நான்கைந்து பேர் இருக்கின்றனர். அவர்களும் கலைந்து சென்று விடுகின்றனர் என்றால், அதற்கு பாஜக என்ன செய்ய முடியும். பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரச்சாரங்களுக்கு மக்கள் ஆர்வமுடன் வந்து நிற்கின்றனர். அரசியல் மாற்றம் வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வரவேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். இதனால், பிரச்சாரத்துக்கு செல்ல வேண்டிய கடைசி மூன்று நான்கு இடங்களில் கால தாமதமாகிறது.

நாங்கள், குறிப்பிட்டுள்ள இடங்களைத் தாண்டி புதிய இடங்களுக்கு எங்குமே செல்லவில்லை. எனவே, எங்களுக்காக காத்திருக்கும் பொதுமக்களைச் சந்தித்து, இரவு 10 மணிக்குள் வரமுடியவில்லை எனவே மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கேட்பதற்காகத்தான், ஏற்கெனவே காவல் துறை அனுமதியளித்த இடங்களுக்கு நேற்று சென்றிருந்தோம். அங்கு காவல் துறையினரும் இருந்தனர். ஆவாரம்பாளையம் பகுதியில் மக்கள் 4 மணி நேரமாக காத்திருந்தனர்.

ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், இரவு 10 மணி ஆகிவிட்டது நாங்கள் பேசமாட்டோம் என்று கூறிவிட்டு போக முடியாது. தேர்தல் ஆணைய விதிகளின்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்த அனுமதி இல்லை. ஆனால், 10 மணிக்குப் பிறகு மக்களைச் சந்திப்பதை யாரும் தடுக்க முடியாது. காரணம் ஏற்கெனவே, பிரச்சாரத்துக்காக நாங்கள் அனுமதி பெற்ற பகுதி அது.

இரவு 10 மணிக்குள் வர முடியாத காரணத்தால், பிரதமர் மோடியே மக்கள் முன்பு மேடையில் விழுந்து மன்னிப்புக் கேட்டதையும் இந்த நாடு பார்த்திருக்கிறது. மக்களின் அன்பு காரணமாக, தேர்தல் பிரச்சாரத்தின்போது, தாமதம் ஆவது சகஜம்தான். காவல் துறையினரும் அங்கு இருந்தனர். நான் மைக்கில் பேசி பிரச்சாரம் செய்திருந்தால் அந்த வீடியோவை அவர்களை வெளியிடச் சொல்லுங்களேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் காவல் துறையினர், தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் ஆணையத்தின் வீடியோப்பதிவு குழுவினர் இருந்தனர்.

பாஜகவைப் பார்த்து திமுக பயப்படுகிறது. திமுகவுக்கு கோவையில் டெபாசிட் கிடைக்காது. மக்களின் கோபமும், பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் எழுச்சியும் அனைத்துப் பக்கமும் தெரிகிறது. பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக கூறுவது காதில் பூ சுற்றும் கதை. அங்கு கைகலப்பு ஏற்படுவதற்கு காரணம், அங்கிருந்த திமுகவினர் பாஜகவினரை தள்ளி விட்டுள்ளனர். ஆரம்பித்தது அவர்கள்தான். எங்கள் தொண்டர்கள் யாரையும் தாக்கவில்லை. ஆனால், திமுகவினர் மருத்துவமனைக்குச் சென்று படுத்துக் கொண்டு இன்று காலையில் புகார் அளித்துள்ளனர்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x