Published : 12 Apr 2024 08:41 PM
Last Updated : 12 Apr 2024 08:41 PM
மதுரை: தருமபுரி உள்ளிட்ட வட மாவட்டங்களையே வட்டமிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்யும் அன்புமணி ராமதாஸ், தென் மாவட்டங்களுக்கு எப்போது பிரச்சாரத்துக்கு வருவார் என அவரது கட்சி நிர்வாகிகளும், பாஜக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் ஏக்கமுடன் காத்திருக்கிறார்கள்.
பாஜக கூட்டணியில் காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை மற்றும் கடலூர் தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. இதில், திண்டுக்கல் தவிர, மற்ற தொகுதிகள் அனைத்தையும் பாமக வாக்கு வங்கி உள்ள வட மாவட்டங்களிலேயே தேர்வு செய்து பாதுகாப்பாக போட்டியிடுகின்றது.
கட்சியின் தலைவர்கள் இதுவரை வராவிட்டாலும், திண்டுக்கல் பாமக வேட்பாளர் திலகபாமா, திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு இணையாக பிரச்சாரம் செய்து பொதுமக்களை கவர்ந்து வருகிறார். சந்தைகளில் சென்று வியாபாரி போல் அமர்ந்து காய்கறி வியாபாரம் செய்து, பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்வது, வடை சுடுவது, களையெடுப்பது, தாரை தப்பட்டை அடித்து வாக்கு சேகரிப்பது, பூ பறிப்பது, விற்பது என வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வாக்காளர் கவனத்தை கவருகிறார். ஆனால், இவரை ஆதரித்து இதுவரை பாமக முக்கியத் தலைவர்கள் பிரச்சாரத்துக்கு வரவில்லை.
திண்டுக்கல் தொகுதியில் திலகபாமா போட்டியிடுவதையே கட்சித் தலைமை மறந்துவிட்டது போல் உள்ளது. தென் மாவட்டத்தில் பாமக கட்சி வேட்பாளரே, கட்சி முக்கிய தலைவர்கள் வராமல் களத்தில் திணறும் நிலையில், தென் மாவட்டங்களில் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள், டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரித்து பிரச்சாரம் செய்ய ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக முக்கிய நிர்வாகிகள் வருவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியா அன்புமணி தருமபுரியில் போட்டியிடுவதால் அந்தத் தொகுதியில் மகள்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு களம் இறக்கிவிட்டாலும், அன்புமணி ராமதாஸ் அடிக்கடி சென்று நிர்வாகிகளை முடுக்கி விட்டு தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், பிரச்சாரமும் செய்ய வேண்டி உள்ளது.
மேலும், தருமபுரியில் பாமகவுக்கு வெற்றி வாய்ப்பும் இருப்பதால் அவர் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராக வருவார் என தருமபுரியில் செல்லும் இடமெல்லாம் பாமகவின் மூத்த தலைவர் ஜி.கே.மணி சொல்லி வருகிறார். அவர் கூறுவது போல் அவர் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராகவும் வாய்ப்புள்ளதால் அன்புமணி ராமதாஸ் முழு கவனமும், தருமபுரியில் மையம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், வட மாவட்டங்களில் போட்டியிடும் தன்னுடைய கட்சி மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்களையும் அவர் ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்கள். அதனால், அவரால் தென் மாவட்டங்களுக்கு வர முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
மதுரை பாமக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ''தென் மாவட்டங்களில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் விரும்பி கேட்கும் தேதிகளில் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்ய வர உள்ளார். அதற்கான பிரச்சார அட்டவணை தயாராகி விட்டது. தென் மாவட்டங்களில் கட்சியை வளர்க்கவே அவர் சமீப காலமாக அடிக்கடி பயணம் மேற்கொண்டு கட்சிக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
பாமகவின் பலத்தை அறியவே திண்டுக்கல் தொகுதியை அவர் கேட்டு வாங்கி போட்டியிடுகிறார். அன்புமணி ராமதாஸ் கண்டிப்பாக சில நாட்களில் திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகரில் பிரச்சாரத்துக்கு வரவுள்ளார்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT