Published : 12 Apr 2024 04:15 PM
Last Updated : 12 Apr 2024 04:15 PM

“தமிழகத்தில் வருமான வரித் துறை மூலம் இதுவரை ரூ.74 கோடி பறிமுதல்” - சத்யபிரத சாஹு தகவல்

சத்யபிரத சாஹு | கோப்புப்படம்

சென்னை: “மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை ரூ.74 கோடியை வருமான வரித் துறை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” எனறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். மேலும், மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு எந்தத் தடையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் 70 சதவீத வாக்களர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை 4.36 கோடி பூத் சிலீப் வழங்கப்பட்டுள்ளது. நாளைக்குள் வாக்களர்களுக்கு பூத் சிலிப் முழுமையாக விநியோகிக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

முதல்முறை வாக்காளர்களுக்கு இந்தமுறை நூறு சதவீதம் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். இன்னும் 6000 அட்டைகள் மட்டுமே வழங்க வேண்டியுள்ளது. விரைவில் அதுவும் வழங்கப்படும். தமிழகத்தில் தற்போது வரை வருமான வரித் துறையினர் 74 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையப் புத்தகத்தில் உள்ள சின்னங்களின் வரைபடத்தின் அடிப்படையில்தான் நாம் தமிழர் கட்சியின் சின்னம் வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உதவி செலவின பார்வையாளர் அனுப்பி வைத்த புகார் இதுவரை எங்களுக்கு வரவில்லை. செய்தித்தாள்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இதுகுறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இருக்கும். தபால் வாக்கு செலுத்தும் முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி திருச்சியில் மாநில அளவிலான ஒருங்கிணைந்த மையம் தபால் வாக்குகளுக்கு என்று அமைக்கப்படும். அங்கிருந்து தபால் வாக்குகள் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும்.

பழைய நடைமுறையில், சென்னையில் பணிபுரியும் ஒருவரின் வாக்கு கன்னியாகுமரியில் இருந்தால் சென்னையிலிருந்து ஒரு அதிகாரி கன்னியாகுமரிக்கு சென்று அந்த தபால் வாக்கு சீட்டுகளை அளித்துவிட்டு வருவார். தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு அனைத்தும் ஒருங்கிணைந்த மையமான திருச்சிக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு எந்த தடையும் இல்லை. தொடர்ச்சியாக செயல்படுத்தி வரும் அரசுத் திட்டங்களை தொடரலாம் என்று தேர்தல் ஆணையத்தில் விதி உள்ளது. இதற்கு தேர்தல் ஆணையத்திடம் எந்தவித அனுமதியும் பெற தேவையில்லை.

பெரும்பாக்கம் பகுதியில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது தொடர்பாக அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்த தபால் வாக்கு சீட்டை சமூக வலைதளத்தில் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x