Published : 12 Apr 2024 03:50 PM
Last Updated : 12 Apr 2024 03:50 PM
புதுச்சேரி: “புதுச்சேரியில் இலவச அரிசி திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.300 கோடியை அரசு ஏமாற்றுகிறது” என்று அம்மாநில அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டணம் சம்பந்தபட்ட பிரச்சனைகளில் ஆளும் பாஜக அரசு நாடகமாடுகிறது. லாபத்துடன் இயங்கும் மின்துறையை ஆளும் பாஜக அரசு கொள்கை முடிவு எடுத்து தனியார்மயமாக்க முடிவு செய்தது. கடந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி மதிப்புள்ள மின்துறைக்கு சொந்தமான சொத்துக்களை சுமார் ரூ.1000 கோடி அளவில் அரசு டெண்டர்விட முடிவு செய்தது. இது சம்மந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மின்துறை ஊழியர்கள் சார்பில் தனியாருக்கு டெண்டர் விட தடை பெறப்பட்டது.
ஆனால், புதுச்சேரி அரசு 23 முறை நீதிமன்றத்தில் வாய்தா வாங்கிக்கொண்டு வருகிறது. அதோடு ஒரு முறைகூட எங்கள் அரசு மின்துறையை தனியார் மயமாக்கமாட்டோம் என நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலுக்காக மின்துறையை தனியார் மயமாக்கமாட்டோம் என பொய்யான தகவலை மின்துறை அமைச்சரும், பாஜகவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் மின்கட்டண உயர்வுக்கு ஆளும் பாஜக அரசு இசைவு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து ஒரு யூனிட்டுக்கு 50 காசு முதல் 80 காசு வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்ட உயர்வு அறிவிக்கப்பட்டால் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.500 முதல் ரூ.1500 வரை மின்கட்டணம் உயரும். இதனால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
தேர்தலை காரணம் காட்டி மின் கட்டண உயர்வினை தற்காலிகமாக அறிவிக்காமல் அரசு மறைத்து வைத்துள்ளது. தேர்தல் முடிந்தவுடன் முன்தேதியிட்டு கட்டண உயர்வு அறிவிக்கப்படும். நம் மாநிலத்துக்கு 40 ஆண்டுகளுக்கு முன் மின்சார தேவைக்காக நிலக்கரி சுரங்கம் உரிமையை நமக்கு மத்திய அரசு ஒரிசாவில் உள்ள நைனிடால் என்ற நிலக்கரி சுரங்கத்துக்கு வழங்கியது.
அந்த உரிமையை சட்டத்துக்கு விரோதமாக தனியாருக்கு விற்று தாரை வார்த்தவர் தான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மாநிலத்தின் முதல்வராக இருந்த, தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளராக உள்ள வைத்திலிங்கம் தான். இதையெல்லாம் உணர்ந்து மக்கள் காங்கிரஸ் கட்சியையும், பாஜகவையும் புறக்கணித்து அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழ்வேந்தனுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். மேலும் இலவச அரிசி வழங்குவதாக கூறினார்கள். ஆனால் கொடுக்கவில்லை. அதற்குரிய பணமும் வழங்கவில்லை.
ஒரு கிலோ பொன்னி அரசி ரூ.60 விற்கப்படுகிறது. அப்படியானால் ரூ.1600 கொடுக்க வேண்டும். ஆனால் அரசு ரூ.600 மட்டும் கொடுக்கிறது. அப்படியானால் பணமாக வழங்கும் திட்டத்தில் ரூ.600 ஏமாற்றப்படுகிறது. அதன்படி இலவச அரிசி திட்டத்தில் மட்டும் ஓராண்டுக்கு ரூ.300 கோடியை இந்த அரசு ஏமாற்றுகிறது.
புதுச்சேரியில் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் குறித்து விமர்சித்து பேசினார். இதனை நமச்சிவாயம் கண்டிக்காதது ஏன்? இதனையெல்லாம் முதல்வர் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT