Published : 12 Apr 2024 02:53 PM
Last Updated : 12 Apr 2024 02:53 PM
திருவண்ணாமலை: தமிழக முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய ரூ.30 ஆயிரம் கோடிக்கு, அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என திருவண்ணாமலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி பேசினார்.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து, திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “ஆன்மிக பூமியில் பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்த இறைவனுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்மிகத் திருத்தலமான அண்ணாமலையார் கோயிலை மத்திய தொல்லியல் துறை கையகப்படுத்த முயன்றபோது தடுத்து நிறுத்தி, இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதிமுக ஆட்சியில் ரூ.68 கோடியில் கிரிவல பாதையை மேம்படுத்தியது, பக்தர்களுக்காக யாத்ரி நிவாஸ் எனும் தங்கும் விடுதி கட்டிக் கொடுக்கப்பட்டது. தென்பெண்ணையாறு - செய்யாறு இணைப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வேளாண்மை நிறைந்த மாவட்டமாகும். 70 சதவீத மக்கள், விவசாயத்தை நம்பி வாழ்க்கின்றனர். விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கு பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. 2 முறை பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் அதிகளவில் பயிர் கடன் வழங்கப்பட்டது. ஆனால், தனி பட்ஜெட் என கூறி, நாட்டு மக்களை ஏமாற்றுவதில் திமுக அரசு முதன்மையாக திகழ்கிறது. ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம், ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 கொடுப்பதாக தெரிவித்தார்.
ஆனால் தரவில்லை. அதிமுக ஆட்சியில் 96 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் நாற்பதாக குறைக்கப்பட்டுவிட்டது. திறந்தவெளியில் நெல் மூட்டைகளை அடுக்கிவைத்து, விவசாயிகள் கண் முன்னே மழையில் நனைந்து நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. விவசாயிகளை வஞ்சிக்கின்றனர். இதற்கு தீர்வு காண அதிமுக ஆட்சி மலர வேண்டும்.
கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை கடன் ரத்து என ஸ்டாலினும், உதயநிதியும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் கூறினர். அனைவரும் நகையை அடகு வைத்து பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்தனர். ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால், அவரது ஆசையை தூண்ட வேண்டும் என சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வரும் காட்சியை போன்று பேசினர்.
மக்களும் நம்பி, நகையை அடகு வைத்து பணத்தை செலவு செய்தனர். பின்னர் ஆட்சிக்கு வந்ததும், தகுதியான நபர்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி என்றனர். 48 லட்சம் பேர் அடகு வைத்த நிலையில், 13 லட்சம் பேருக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் நகையை மீட்க முடியாமல் 35 லட்சம் பேர் ஏமாற்றமடைந்தனர். ஏழை மக்கள் காதில் இருந்த தோடு, கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டனர். வாக்களித்த மக்களுக்கு வேதனையும், துன்பமும்தான் மிச்சம்.
எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த காங்கிரஸ்: இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் விளம்பரம் கொடுக்கிறார். 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில், ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என ஸ்டாலின் கூறினார். அந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது காங்கிரஸ் கட்சி. அப்படிப்பட்ட ராசி அவருக்கு. திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது.
2 ஆண்டு ஆட்சியில் கிடைத்த ரூ.30 ஆயிரம் கோடியை என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடுவதாக தமிழக நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் கூறினார். அவர் கூறியதில் உண்மை இருக்கும். ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்களை அழைத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறார்.
தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தியபோதே, தமிழக தொழிலதிபர்களை அழைத்து ஒப்பந்தம் போட வேண்டியதுதானே. முதலீட்டை ஈர்க்க சென்றாரா, அல்லது முதலீடு செய்ய சென்றாரா?. அதிமுக ஆட்சி மலரும். ரூ.30 ஆயிரம் கோடிக்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. கஞ்சா போதை அதிகரித்துள்ளது. டெல்லியில் கஞ்சா போதை பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் திமுக அயலக அணி நிர்வாகி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. 2.0 ஆபரேஷன் என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு நடத்தியும், கடைசி வரை அவரால் கஞ்சாவை ஒழிக்க முடியவில்லை.
(கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபருடன் ஸ்டாலின், உதயநிதி இருக்கும் புகைப்படத்தை காண்பித்தார்). போதை பொருள் கடத்தலுக்கும் திமுகவுக்கும் என்ன தொடர்பு என மக்கள் கேட்கிறார்கள். காவல்துறை மானிய கோரிக்கையில் கஞ்சா போதை விற்பனையில் 2,138 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், 148 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மற்றவர்கள் என்ன ஆனார்கள். அவர்கள் அனைவரும் திமுகவினர்களா?. கஞ்சா விற்பனையை திமுக ஆட்சியால் கட்டுப்படுத்த முடியாது.
ரூ.3 லட்சம் கோடி கடன் சுமை: என் கட்சிக்காரர்கள் என்ன பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளனர் என்ற அச்சத்துடன் கண் விழிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். இவரால் நாட்டையும், கட்சியையும் பாதுகாக்க முடியாது. தமிழக மக்களுக்கு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஆனால் தமிழகத்தில் 3 ஆண்டு திமுக ஆட்சியில் ரூ.3 லட்சம் கோடி கடன் உள்ளது. இவர்கள் வாங்கிய கடனை நாம்தான் சுமக்க வேண்டும். தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு வரபோகிறது.
எதிர்கட்சியாக இருந்தபோது கோ பேக் மோடி என கருப்பு பலூன் பறக்கவிட்டார். ஆளுங்கட்சியாக வந்ததும் கம் பேக் மோடி என கூறுகின்றார் வெள்ளைக்கொடி ஏந்திய வேந்தர். தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்” இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வீரமணி, ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT