Published : 12 Apr 2024 11:11 AM
Last Updated : 12 Apr 2024 11:11 AM

‘ஸ்டார் தொகுதி’ பெரம்பலூர் கள நிலவரம் என்ன? - ஓர் அலசல்

விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட, பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரி வேந்தர் போட்டியிடுவதால் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. பெரம்பலூர் மக்களவைத் தொகுதி, பெரம்பலூர்(தனி), துறையூர் (தனி), குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகளைக் கொண்டது.

இத்தொகுதி விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டது. பெரும்பாலான மக்கள் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள். இத்தொகுதியில் இதுவரை நடைபெற்ற 17 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 2 முறையும், திமுக 7 முறையும், அதிமுக 6 முறையும் தமிழ்நாடு தொழிலாளர் கட்சி ஒருமுறையும், இந்திய ஜனநாயக கட்சி ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன. ஆ.ராசா, திரைப்பட நடிகர் நெப்போலியன் ஆகிய 2 மத்திய அமைச்சர்களை வழங்கிய தொகுதி இது.

இந்தத் தேர்தலில் திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு திமுக வேட்பாளராகவும், மறைந்த முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜின் சகோதரர் மகன் என்.டி. சந்திரமோகன் அதிமுக வேட்பாளராகவும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக வேட்பாளராகவும், இரா.தேன்மொழி நாம் தமிழர் கட்சி வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.

2019 மக்களவைத் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரான டி.ஆர்.பாரிவேந்தர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சிவபதியைவிட சுமார் 4 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். இப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுக தலைவர் ஸ்டாலின், பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தது முதல் திமுகவினர் சுற்றிச் சுழன்று உற்சாகமாக பணியாற்றி வருகின்றனர்.

கூட்டணிக் கட்சியினரும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுவது அவருக்கு பக்க பலமாக இருக்கிறது. அதிமுக வேட்பாளர் என்.டி.சந்திரமோகனும் கூட்டணி கட்சியினருடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நாளை (ஏப்.13) அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அவருக்கு ஆதரவாக மேற்கொள்ள உள்ள பிரச்சாரம், தனக்கு மேலும் வலு சேர்க்கும் என சந்திரமோகன் நம்பிக்கையுடன் உள்ளார். அதேபோல, ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தரும், கடந்த 5 ஆண்டுகளில், தான் மேற்கொண்ட பணிகளை பட்டியலிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.

இன்னும் ஓரிரு நாட்களில் பிரதமர் மோடியும் பெரம்பலூர் வந்து பாரிவேந்தருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் வேட்பாளர் இரா.தேன்மொழியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். மத்திய, மாநில அரசுகள் மீதான அதிருப்தி வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என்ற ஆர்வத்துடன் நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொகுதியின் முக்கிய பிரச்சினை: தமிழகத்திலேயே அதிக அளவில் விளைவிக்கப்படும் சின்ன வெங்காயத்தை பதப்படுத்தி, மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் தொழிற்சாலை, மக்காச்சோளம் மதிப்பு கூட்டும் தொழிற்சாலை, வாழை பொருட்கள் பதப்படுத்தும், மதிப்புக் கூட்டும் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்.

அரியலூரிலிருந்து பெரம்பலூர் வழியாக துறையூர், நாமக்கல் வரையிலான ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும். சுமார் 13 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி திட்டம், சிறப்பு பொருளாதார மண்டல திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை ஆகும்.

ஆண் வாக்காளர்கள்: 7,01,400

பெண் வாக்காளர்கள்: 7,44,807

மூன்றாம் பாலினத்தவர்கள்: 145

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x