Published : 12 Apr 2024 09:55 AM
Last Updated : 12 Apr 2024 09:55 AM

“குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சியை ஒழிப்பதில் மக்கள் உறுதி” - அண்ணாமலை

கோவை ஜீ.வி.ரெசிடென்சி பகுதியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை.

கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவை ஜி.வி.ரெசிடென்சி குடியிருப்பு பகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிரச்சார பொதுக்கூட்டத்தில் மோடி, அதிமுக குறித்து விமர்சனம் செய்யாததற்கான காரணம், களத்தில் யார் போட்டியாளர்களாக இருக்கிறார்களோ அவர் மீதான தவறை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும் என்பதுதான்.

பழனிசாமியை ரோட் ஷோ செல்ல சொல்லுங்கள், எத்தனை பேர் வருகின்றனர் என பார்க்கலாம். அரசியல் கட்சி கூட்டங்கள், தமிழகத்தில் பணம் வழங்கி கூட்டத்தை சேர்த்து நடத்தப்படுகிறது.

அதுபோன்ற கூட்டங்களுக்கு சென்று பார்த்தால், 500 பேருக்கு ஒரு பட்டி அமைக்கப்பட்டு அருகில் 2 பேர் நின்று கொண்டு இருப்பார்கள். தலைவர் பேசுவதை கேட்டுச் சென்றால்தான் பணம் முழுவதும் வழங்கப்படும். ஆனால், மோடி வருகையின்போது மக்கள் தங்கள் நேரத்தை செலவிட்டு தாமாக பார்க்க வருகின்றனர். திமுகவின் சமூக வலைதளங்களில் விளம்பரத்துக்கு மட்டும் ரூ.7 கோடியே 39 லட்சத்து 93 ஆயிரத்து 750 ரூபாய் செலவு செய்து இருக்கின்றனர். சபரீசனின் நிறுவனத்தில் இருந்து விளம்பரம் சென்று இருக்கிறது.

தமிழ்நாட்டில் பிரிவினை பேசக்கூடிய சக்திகளை அடக்கவும், குடும்ப ஆட்சியை ஒழிப்பேன் என்ற கேரண்டியையும் மோடி தருவார். இந்த தேர்தலில் குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி அனைத்தையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கின்றனர். சினிமா மீது கோபம் இல்லை.

மாமன்னன் போன்ற படங்களில் வடக்கில் உள்ளவர்கள் கெட்டவர்கள் என்றும் தெற்கில் உள்ளவர்கள் நல்லவர்கள் என்பது போன்ற தவறான செய்திகளை பரப்பினால் அதை கேட்க வேண்டிய நேரம் இதுதான். தேர்தல் பிரச்சாரத்தின் போது உதயநிதியிடம் குழந்தைக்கு பெயர் வைக்க சொன்னால் ரோலக்ஸ் என பெயர் வைத்திருக்கிறார். கமல் நடித்த விக்ரம் படத்தில் போதைப்பொருள் விற்பவர்களின் தலைவன் பெயர் ரோலக்ஸ். 2024 ஜூன் 4-ம் தேதி கொங்கு மண்டலம் யாருடையது என பார்த்து விடலாம்.

ஊழல் பல்கலைக்கழகத்தின் வேந்தராக மோடி இருக்க வேண்டும் என்றால், அந்த பல்கலைக்கழகத்தின் பெயரை ஸ்டாலின் பல்கலைக்கழகம் என வைக்க வேண்டும். இந்தியா கூட்டணியின் வாதம் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது அல்ல. பாஜக 400 சீட்டுகள் வாங்க விடக்கூடாது என்பது தான்.

அந்த கூட்டணியில் ஒரு தலைவர் கூட, 2024-ல் ஆட்சி அமைப்போம் என பிரச்சாரம் செய்வது இல்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் வரத்தான் போகிறது, கலைஞர் கருணாநிதியே அதற்கு விருப்பப்பட்டார். கலைஞர் மேலே இருந்து மோடிக்கு ஆசீர்வாதம் செய்வார். மக்களுக்கு வரும் பணத்தை தடுக்க நான் போலீஸ்காரன் இல்லை. நான் ஓட்டுக்கு பணம் தரப் போவதில்லை, அதிகாரிகள் தங்கள் கடமையை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x