Published : 12 Apr 2024 05:46 AM
Last Updated : 12 Apr 2024 05:46 AM
கூடலூர்/திருவண்ணாமலை: நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மண்வயல் கம்மாத்தி பகுதியைச் சேர்ந்தவர் ஏ.ஜெ.தாமஸ். இவர், ஸ்ரீமதுரை ஊராட்சி முன்னாள் தலைவர். காங்கிரஸ் கட்சிப் பிரமுகரான இவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
இந்நிலையில், இவரது வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் பகல்12 மணியளவில் 8 பேர் அடங்கிய வருமான வரித் துறை அதிகாரிகள் குழுவினர் இரு கார்களில் வந்தனர். வீட்டில் உள்ள அனைவரிடமும் அவர்கள் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், பீரோ மற்றும்லாக்கர்களிலும் சோதனை நடத்தினர். சுமார் 20 மணி நேரத்துக்கும் மேல் சோதனை நடத்தப்பட்டது. இதில், கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக வருமான வரித் துறை அதிகாரிகள் கூறும்போது, கூடலூர் காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக புகார் வந்ததால், சோதனை நடத்தினோம்.
இதில், கணக்கில் வராத ரூ.3கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக வைத்திருந்தாரா என்பது குறித்து தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என்றார்.
2 நகை கடைகளில்... திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பஜார் வீதி மற்றும் ராஜவீதியில் 2 நகைக் கடைகள் உள்ளன.இந்தக் கடைகளில் வர்த்தகம் முடிந்து, நேற்று முன்தினம் இரவுகடையை மூடுவதற்கு உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் முற்பட்டபோது, அங்கு வந்த வருமான வரித்துறையினர், கடையில் நடைபெற்றவர்த்தகம் மற்றும் பணப்பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்தனர்.
இதில், சில முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற சோதனை இரவு 10.30 மணிக்கு நிறைவடைந்தது. பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT