Published : 12 Apr 2024 05:30 AM
Last Updated : 12 Apr 2024 05:30 AM
சென்னை: சென்னையில் ரம்ஜான் பண்டிகைகோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. தொழுகை முடிந்து இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் விளங்குகிறது. இந்தமாதத்தில்தான் இஸ்லாமியர்களின் முக்கியமான 5 கடமைகளில் ஒன்றான நோன்பு நோற்பது கடைபிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளிலிருந்து இஸ்லாமியர்கள் நோன்பு தொடங்குவர். இந்த ஆண்டு ரம்ஜான் நோன்பு, கடந்த மார்ச் 12-ம் தேதி தொடங்கியது. 30 நாட்கள் நோன்பின் இறுதியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
அந்த வகையில், நோன்பு காலம்முடிந்த நிலையில், நேற்று முன்தினம் பிறை எதுவும் தென்படாததால், ஏப்.11-ம் தேதி தமிழகத்தில்ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தில்நேற்று ரம்ஜான் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
சென்னை பிராட்வே டான் பாஸ்கோபள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மார்க்கப் பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பில் ரம்ஜான்பெருநாள் சிறப்பு கூட்டுத் தொழுகைநடைபெற்றது.
இந்த சிறப்பு கூட்டுத் தொழுகையில், தமுமுக தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ, கலந்து கொண்டு தொழுகை உரை நிகழ்த்தினார். இதில் மாநிலச் செயலாளர் மாயவரம் ஜெ.அமீன், தலைமை செயற்குழு உறுப்பினர் பி.எம்.ஆர்.சம்சுதீன், தலைமை அலுவலக செயலாளர் ஐ.அமீன் அகமத் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.
கூட்டுத் தொழுகை முடிவடைந்ததும் இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி ரம்ஜான்வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். பின்னர், இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதேபோல, திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல், பெரியமேடு பள்ளிவாசல், மண்ணடி ஈத்கா, அண்ணாசாலை தர்கா உட்பட பல்வேறு இடங்களிலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று கூட்டுத் தொழுகை நடைபெற்றது.
பள்ளி வாசல்கள் முன்பு கூடியிருந்த ஏழைகளுக்கு முஸ்லிம்கள் புத்தாடை, உணவு வழங்கினர். ஒரு சில இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. ரம்ஜான் தொழுகை நடைபெற்ற அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT