Published : 11 Apr 2024 02:46 PM
Last Updated : 11 Apr 2024 02:46 PM
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை தமிழகம் வருகிறார். 2 நாட்கள் தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இந்நிலையில், அவரது பிரச்சாரத் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் நடத்தவிருந்த அவரது ரோடு ஷோ பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாளை ஏப்ரல் 12-ம் தேதி மதியம் 3.05 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் அமித் ஷா, ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை சென்று, அங்கு ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது. சிவகங்கை பாஜக வேட்பாளரான தேவநாதன் யாதவ் மீது பண மோசடி குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. இந்த நிலையில், அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்த நிகழ்வை அமித் ஷா ரத்து செய்துள்ளார்.
இதேபோல், மதுரையில் 12-ம் தேதி பாஜக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்த பிறகு மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்லும் நிகழ்வை ரத்து செய்துள்ளார் அமித் ஷா. மாலை ரோடு ஷோ முடிந்து மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பிறகு விமான நிலையம் சென்று அங்கிருந்து கேரளா செல்வதாக பயணத் திட்டம் இருந்தது. இந்நிலையில், தற்போது அது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, நாளை மாலை 5.40 மணிக்கு மதுரையில் அமித் ஷா ரோடு ஷோ பிரச்சாரம் மேற்கொண்டுவிட்டு, இரவு 7.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதாக இருந்தது. அன்றைய தினம் இரவு மதுரையில் தங்கிவிட்டு, மறுநாள் ஏப்.13-ல் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு செல்வதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமித் ஷாவின் ஏப்ரல் 13-ன் பயணத் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஏப்ரல் 13 அன்று திருவனந்தபுரத்தில் இருந்து வாகனம் மூலம் கன்னியாகுமரி வரும் அவர், ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்கிறார். இதையடுத்து, அங்கிருந்து புறப்பட்டு, மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். பின்னர், ஹெலிகாப்டரில் திருவாரூர் செல்லும் அமித் ஷா, மதியம் 3 மணிக்கு திருவாரூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
பொதுக் கூட்டம் முடிந்து, திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தென்காசி செல்கிறார். அங்கு ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிக்கிறார். இரவு 8.15-க்கு தூத்துக்குடி விமான நிலையம் வரும் அமித் ஷா, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT