Published : 11 Apr 2024 11:04 AM
Last Updated : 11 Apr 2024 11:04 AM

‘ஸ்டார் தொகுதி’ ஸ்ரீபெரும்புதூர் கள நிலவரம் என்ன? - ஒரு பார்வை

டி.ஆர்.பாலு, ஞா.பிரேம்குமார், வி.என்.வேணுகோபால்

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில், ஸ்ரீபெரும்புதூர் பொருளாதார மண்டலம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, மீனம்பாக்கம் விமான நிலையம், மெப்ஸ் ஏற்றுமதிவளாகம் என பல முக்கியமான தொழில் பகுதிகள் உள்ளன.

இதுதவிர, ஆட்டோமொபைல் தொழில்கள் இங்கு பிரதானம். உதிரிபாகங்கள் தயாரிக்கும் சிறு, குறு நிறுவனங்களும் அதிகளவில் இருக்கின்றன. சென்னை புறநகரில் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் தொகுதியாக உள்ளது.

மேலும் கல்வி நிறுவனங்கள், ஆன்மீக தலங்கள் நிறைந்துள்ளன. தொழில்துறை வளர்ந்துள்ள இந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில், இதுவரை திமுகவின் ஆதிக்கமே அதிகம் இருந்துள்ளது.

2014-ல் இந்த தொகுதியை தவறவிட்டாலும், 2019-ம் ஆண்டு மீண்டும் வென்று ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை ஸ்டார் தொகுதியாக மாற்றியுள்ளார் திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு. இந்த தொகுதியில் அம்பத்தூர், மதுரவாயல், ஸ்ரீபெரும்புதூர் (தனி), ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன.

2021-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. 2019 தேர்தலில் திமுகவின் டி.ஆர்.பாலு 56.53% வாக்குகளுடன் மொத்தம் 7,93,281 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்த பாமக வேட்பாளர் ஏ.வைத்திலிங்கம், 2,85,326 வாக்குகள் பெற்றார். மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட்ட எம்.ஸ்ரீதர் 1,35,525 வாக்குகள் பெற்றார். 1967-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

அப்போது முதல் 2019 வரை, 14 முறை இத்தொகுதியில் தேர்தல் நடந்துள்ளது. திமுகவின் சிவசங்கரன் இத்தொகுதியின் முதல் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அதிகபட்சமாக திமுக 8 முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.

1984 -1991 வரை, காங்கிரஸ் கட்சி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. 3 முறையும் மரகதம் சந்திரசேகர் வெற்றி பெற்று எம்.பி. ஆக இருந்துள்ளார். அதிமுகவும் 3 முறை இங்கு வென்றுள்ளது.

வெ.ரவிச்சந்திரன்

தற்போது திமுக சார்பில் தற்போதைய எம்.பி.யான டி.ஆர்.பாலுவும், அதிமுக சார்பில் மருத்துவர் ஞா.பிரேம்குமார், பாஜக கூட்டணியில் தமாகா வேட்பாளராக தாம்பரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் வி.என்.வேணுகோபால், நாம் தமிழர் சார்பில் வெ.ரவிச்சந்திரன் உள்ளிட்ட 31 பேர் போட்டியிடுகின்றனர்.

திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாக அமைச்சர் அன்பரசன் மற்றும் தொகுதியில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களும் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர் மருத்துவர் ஞா.பிரேம்குமாருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், டி.கே.எம். சின்னையா, சோமசுந்தரம், முன்னாள் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டணி கட்சியினருடன் இணைந்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பாஜக கூட்டணி வேட்பாளர் வி.என்.வேணு கோபால், தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாம் தமிழர் வேட்பாளர் ரவிச்சந்திரன் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். இதனால் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அனல் பறக்கிறது.

மேலும், கட்சி தலைவர்கள், ஸ்டார் பேச்சாளர்கள், நடிகர்கள் பலரும் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். முதலில் தனி தொகுதியாக இருந்த ஸ்ரீபெரும்புதூர், கடந்த 2008-ல்தொகுதி மறுசீரமைப்புக்கு பின் பொது தொகுதியாக மாற்றப்பட்டது.

சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மக்கள் தொகை பெருக்கம் மிகவும் அதிகம். தொழில்துறையின் மையமாக ஸ்ரீபெரும்புதூர் திகழ்கிறது. ஆட்டோமொபைல் உற்பத்தி, உதிரி பாகங்களின் உற்பத்தி ஆலைகள் உள்ளிட்ட ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

இவற்றை சார்ந்து ஏராளமான தொழிலாளர்கள் இங்கு வசிக்கின்றனர். ௮தில் கணிசமானவர்கள் வெளியூர், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள். இதேநிலைதான் அம்பத்தூரிலும். இங்கும் ஏராளமான தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் உள்ளன.

தாம்பரம் அண்மையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தாம்பரம், பல்லாவரம் போன்ற புறநகர் பகுதிகள் பொருளாதார ரீதியில் வசிப்பதற்கு ஏதுவான பகுதிகள் என்பதால், இப்பகுதிகளில் மக்கள் தொகை அதிகம்.

இதனால் குடிநீர், கழிவுநீர், குப்பை அகற்றுதல், சுகாதார சீர்கேடு, கொசுத்தொல்லை, சாலை வசதி, போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சினைகளும் ஏராளம். இவை தவிர சாலை விபத்துகள் அல்லது உயர் சிகிச்சை தேவைப்படுவோருக்கு இப்பகுதியில் பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.

இப்பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்பு என்பது பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. பல்லாவரம் மலையை சுற்றி தொல்லியல் துறையினர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர். இதனால் அங்கு கட்டுமான பணிகள் மேற்கொள்வதில் சிக்கல்கள் உள்ளன.

தாம்பரம் ரயில் நிலைய மேம்பாடு, ஸ்ரீபெரும்புதூருக்கு ரயில் நிலையம் ஆகியவை நீண்ட கால கோரிக்கைகளாகும். சென்னை விமான நிலையம் முதல், செங்கல்பட்டு வரை ஜி.எஸ்.டி., சாலையில், 41 கி.மீ., தொலைவுக்கு மேம்பால சாலை அமைக்க வேண்டும்.

இந்த மேம்பாலம் அமைந்தால் போக்குவரத்து நெரிசல் ஜி.எஸ்.டி சாலையில் வெகுவாககுறையும். ஆய்வுகள் முடிக்கப்பட்டு திட்டம் தொடங்கப்படாமலே உள்ளது. இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என்பது நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

இங்குள்ள தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் வாகனங்கள், பொருட்களைத் துறைமுகத்துக்குக் கொண்டு செல்ல வசதியாக சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக உள்ளது. பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x