Published : 11 Apr 2024 11:34 AM
Last Updated : 11 Apr 2024 11:34 AM

கள்ளக்குறிச்சி தொகுதியை கைப்பற்றப் போவது யார்? - கள நிலவர அலசல்

கள்ளக்குறிச்சி: தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்உருவான கள்ளக்குறிச்சி மக்கள வைத் தொகுதி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி (தனி), ரிஷிவந்தியம், சங்கராபுரம், சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் (தனி),கெங்கவல்லி (தனி), ஏற்காடு (தனி) என 4 தனி மற்றும் இருபொது சட்டப்பேரவைத் தொகுதி களை உள்ளடக்கியது.

தமிழகத்திலேயே ஒரு மக்களவைத் தொகுதியில் 4 தனி சட்டப் பேரவைத் தொகுதிகளையும், 2 பொது சட்டப்பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கிய, ஒரு பொது மக்களவைத் தொகுதி கள்ளக் குறிச்சியே. கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 7,73,121 ஆண் வாக்காளர்கள், 7,94,588 பெண் வாக்கா ளர்கள், இதரர் 228 என மொத் தம் 15,67,937 வாக்காளர்கள் உள் ளனர்.

இத்தொகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த காமராஜூம், 2019-ல் நடைபெற்ற தேர்தலில் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகா மணியும் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த தேர்தலின் போது வெற்றிபெற்ற கவுதமசிகாமணி 7,21,713 வாக்குகள் பெற்று, 3,99,919 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியை 4 முறை திமுகவும், ஒரு முறை அதிமுகவும் கைப்பற்றியுள்ளது.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆத்தூரில் வாக்கு
சேகரிப்பில் ஈடுபட்டுள்ள திமுக வேட்பாளர் மலையரசன்.

இரு மாவட்டங்களைச் சேர்ந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில், ஆத்தூர் (தனி), கெங்கவல்லி (தனி), ஏற்காடு (தனி), கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் அதிமுக வசமும், ரிஷிவந்தியம், சங்கராபுரம் என இரு பொதுத் தொகுதிகள் திமுக வசமும் உள்ளது.

இந்த நிலையில் இண்டியா கூட்டணி சார்பில் திமுக வேட்பா ளர் மலையரசன், அதிமுக - தேமுதிக கூட்டணியில் அதிமுக வேட்பாளர் குமரகுரு, பாஜக - பாமக கூட்டணியில் பாமக வேட்பாளர் தேவதாஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் திரைப்பட இயக்குநர் ஜெகதீசன் மற்றும் சுயேச்சைகள் உட்பட 21 பேர் களத்தில் உள்ளனர்.

இதனால் இத்தொகுதியில் இருமின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. தகதகக்கும் கோடை வெயி லுக்கு நடுவே, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சின்னசேலத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக
வேட்பாளர் குமரகுரு.

பொதுத்தேர்தலுக்கு புதிய வரான திமுக வேட்பாளரான தே.மலையரன், தங்கள் கட்சியின் இரு மாவட்ட செயலாளர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார். வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் உளுந்தூர் பேட்டையில் சிப்காட் வளாகம் அமைகிறது; அங்கு 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக் கும் வகையில் தொழில் நிறுவனம் அமைய இருக்கிறது என்று கூறி திமுக தரப்பினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

மேலும், கள்ளக்குறிச்சி நகரில்நிலவும் போக்குவரத்து நெருக்கடியை சரிசெய்ய மேற்கொள்ளப் பட்டு வரும் திட்டங்களை முன் வைத்து பிரச்சாரம் செய்கின்றனர். எதிர்தரப்பில் உளுந்தூர் பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி யில் 3 முறை வென்றவரான அதி முக மாவட்டச் செயலாளரான ரா.குமரகுரு, முதன்முறையாக மக்களவைக்கு போட்டியிடுகிறார்.

சின்னசேலத்தில் வாக்கு சேகரிக்கும் பாமக வேட்பாளர் தேவதாஸ்.

முன்னாள் முதல்வர் பழனிச் சாமியின் நம்பிக்கைக்குரியவரான இவர், தனது சட்டப்பேரவைத் தேர்தல் அனுபவங்களையும் கொண்டு, இத்தொகுதியில் உள்ள தேமுதிகவினர் பலத்தோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாகக் காரணமே முந்தைய அதிமுக அரசு என்பதை பிரச்சாரத்தின் போது இக்கட்சியினர் மறக்காமல் குறிப்பிடுகின்றனர். மேலும், அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி, சின்னசேலம் அருகே சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும்விலங்கின ஆராய்ச்சி மையம் அமைத்தது உள்ளிட்ட சாதனை களைக் கூறியும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

பாமக வேட்பாளராக களமிறங்கி யுள்ள முன்னாள் எம்.பியான தேவ தாஸ், பாஜகவினரோடு இணைந்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தின் தேசிய நலன் சார்ந்த கருத்துகளை முன்வைக்கின்றனர். மத்திய அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர். இவர்களுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீசன் தன் கட்சித் தொண்டர்களோடும் வீதி வீதியாக பரப்புரை செய்து வருகிறார்.

சங்கராபுரத்தில் வாக்கு சேகரிக்கும் நாம் தமிழர் வேட்பாளர் ஜெகதீசன்.

தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள்

# விவசாயம் சார்ந்த பகுதியான கள்ளக்குறிச்சியில், அரிசி ஆலைகளும், சர்க்கரை ஆலைகளும் அதிகமாக உள்ளன. அது சார்ந்த வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

# சேலம் - கள்ளக்குறிச்சியை இணைக்கும் கல்வராயன் மலை வாழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடங்கி, பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

# விவசாயத்துக்கான நீராதாரமாக விளங்கும் மணிமுக்தா மற்றும் கோமுகி அணையை மேம்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது. கள்ளக்குறிச்சி நகரின் விரிவாக்கம், அதனால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடி மாவட்ட நிர்வாகத்துக்கு பெரும் சவாலை உருவாக்கி வருகிறது.

# ஏற்காடு தொகுதியில் உள்ள மலைக் கிராமங்கள் பலவற்றுக்கு, சாலை வசதி கூட இதுவரை செய்யப்படவில்லை. சிறந்த சுற்றுலா மையமாக இருந்தாலும், சுற்றுலா தொழிலும் வளர்ச்சியடைவில்லை. இங்குள்ள சேர்வராயன் மலையில் காஃபி, மிளகு, சிறுதானியங்கள் உள்ளிட்டவை அதிகளவு விளைச்சல் இருந்தாலும், ஏற்காட்டில் போதிய வணிக வாய்ப்புகள் இல்லாதது ஏற்காடு மக்களை அதிருப்தியில் வைத்துள்ளது.

# விவசாயத்தை முதன்மையாக கொண்டுள்ள பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல் ஆகிய வட்டங்கள் வறட்சியானவையாகவே இருக்கின்றன. காவிரி உபரி நீரை வசிஷ்ட நதிக்கு கொண்டு வர வேண்டும் என்ற பல்லாண்டு கோரிக்கை, பகல் கனவாகவே இருக்கிறது.

# சேலம் மாவட்டத்தில் இருந்து, ஆத்தூரைப் பிரித்து, தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே உள்ளது.

# ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய தொகுதி விவசாயிகளுக்கு பயன்தரக் கூடியதாக இருக்கும் தலைவாசல் தினசரி காய்கறி சந்தையை, கோயம்பேடு வணிக வளாகம் போல, அனைத்து அடிப்படை வசதிகளுடன் மாற்றியமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

# கள்ளக்குறிச்சி, தலைவாசல், ஆத்தூர் வட்டாரங்களில் ஏராளமான எண்ணிக்கையில் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பயின்ற பல ஆயிரம் மாணவர்கள், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி, ஆத்தூர் போன்ற நகரங்களில் சிறிய அளவிலான தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைத்தால், உள்ளூரிலேயே மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்பது போன்ற எதிர்பார்ப்புகள் மக்களிடம் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x