Published : 11 Apr 2024 05:30 AM
Last Updated : 11 Apr 2024 05:30 AM
சென்னை: சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. மக்களவை தேர்தலில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி, அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று தொடங்கியது.
துறைமுகம் தொகுதியில் பாரதி மகளிர் கல்லூரியில் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, வேளச்சேரி தொகுதிக்கு உப்டட் திருவான்மியூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பணிகளையும் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், விவிபாட் இயந்திரங்கள் உள்ளிட்ட வாக்குப்பதிவுக்கு தேவையான இயந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் வாக்குச்சாவடிகள் வாரியாக தேர்வு செய்யப்பட்டு அந்தந்த சட்டப்பேரவை தொகுதிகளில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, வேட்பாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வட சென்னை மற்றும் தென் சென்னை மக்களவை தொகுதிகளில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களும், மத்திய சென்னையில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று தொடங்கியது. இப்பணிகள் 3 நாட்களில் முடிக்கப்படும்.
வாக்குப்பதிவுக்கு 11,843 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4,469 கட்டுப்பாட்டுக் கருவிகள், 4,842 விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்காளர் தகவல் சீட்டுகள் இதுவரை 16.7 லட்சம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் 611 பதற்றமான வாக்குச்சாவடிகள், 23 சவாலான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும், ஒரே இடத்தில் 10 வாக்குச்சாவடிகளுக்கு மேலுள்ள 135 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 769 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய நுண் பார்வையாளர்கள் மற்றும் காவல்துறை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசு ஊழியர்களில், சென்னை, இதர மாவட்டத்தினர், புதுச்சேரி ஊழியர்கள் என 14,735 அரசு ஊழியர்களிடமிருந்தும், காவல் பணிகளில் 19,122 பேரிடமிருந்தும் தபால் வாக்குகளுக்கான படிவங்கள் பெறப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான 4,538 தபால் வாக்குகளில் இதுவரை 1003 பேர் வாக்களித்துள்ளனர்.
தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூலமாக இதுவரை ரூ.14.73 கோடி, வருமான வரித்துறை சார்பில் ரூ.19.92 கோடி, மதுபானம் மற்றும் போதைப் பொருள் உள்ளிட்ட ரூ.59.33 லட்சம் மதிப்பிலான பொருள்களும், கலால் துறை மூலமாக ரூ.1 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, தேர்தல் நடத்தும் அலுவலர் கே.ஜெ.பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) ச.சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT