Published : 11 Apr 2024 04:29 AM
Last Updated : 11 Apr 2024 04:29 AM

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்: நாகாலாந்து ஆளுநர், தலைவர்கள், திரைத்துறையினர் அஞ்சலி

சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் இருந்து ஆர்.எம்.வீரப்பன் உடலுடன் நுங்கம்பாக்கம் மயானம் நோக்கி நடைபெற்ற இறுதி ஊர்வலம். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் உடல் சென்னையில் நேற்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

எம்ஜிஆர் கழக நிறுவனரும், சினிமா தயாரிப்பாளரும், எம்ஜிஆர்மற்றும் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவருமான ஆர்.எம்.வீரப்பன் நேற்று முன்தினம் காலமானார். அன்றே அப்போலோ மருத்துவமனையில் இருந்த அவரது உடலுக்கு முதல்வர்ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து அவரது உடல் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நேற்று காலை முதல் அரசியல் தலைவர்கள், திரைத் துறையினர், பொதுமக்கள் என பல தரப்பினரும் அஞ்சலி செலுத்த வருகை தந்தனர்.

இதன்படி நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், அமைச்சர் ரகுபதி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சு.திருநாவுக்கரசர் எம்.பி., ஜெகத்ரட்சகன், ஹசன் மவுலானா எம்எல்ஏ,திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாமன்ற உறுப்பினர் சிற்றரசு, முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, திமுக வர்த்தக அணிச் செயலாளர் காசி முத்து மாணிக்கம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் பாஜக மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், மதிமுக மாவட்டச் செயலாளர் கழகக் குமார், தமிழக வெற்றிக் கழகமாவட்டச் செயலாளர் அப்புனு, தொழிலதிபர்கள் வி.ஜி.சந்தோசம், நல்லிகுப்புசாமி, திரைத் துறையினர் பாரதிராஜா, சிவக்குமார், பி.வாசு, எஸ்.வி.சேகர், தியாகராஜன், நாசர், அழகப்பன், பாண்டியராஜன், தேவா, ராம்குமார் உள்ளிட்டோரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து பிற்பகல் 3.30 மணியளவில் ஆர்.எம்.வீரப்பனின் உடல் இறுதி ஊர்வலமாக நுங்கம்பாக்கம் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x