Published : 11 Apr 2024 05:26 AM
Last Updated : 11 Apr 2024 05:26 AM

தமிழகத்தில் ரூ.15.87 கோடி பறிமுதல்; 3,221 தேர்தல் விதிமீறல் புகார்: சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக சி விஜில் செயலி மூலம் 3,221 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆங்காங்கே பணம், பொருட்கள் பறிமுதல் என்றதகவல்கள் வந்தாலும், வருமான வரித்துறையினர் அவை தொடர்பாக விசாரணை நடத்திய பின், அரசியல் தொடர்பா இல்லையா என்பதை ஆய்வு செய்து அதன்பின்னர்தான் எங்களுக்கு தகவல் அளிப்பார்கள். இதுவரை, ரூ.15 கோடியே 86 லட்சத்து 91 ஆயிரம்மதிப்புள்ள ரொக்கம், தங்கம் உள்ளிட்டவை வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தற்போது வரை தபால் வாக்குக்கான 12 படிவம் 1,07,186 வாக்குச்சாவடி அலுவலர்களும், 50,790 காவல்துறையினரும், 3,423 ஓட்டுநர் உட்பட என 1,59,084 பேர் அளித்துள்ளனர். அதே போல், பணியாற்றும் இடத்தில் மின்னணு இயந்திரத்தில் வாக்களிப்பதற்கான 12ஏ படிவத்தை இதுவரை 1,97,562 பேர் கொடுத்துள்ளனர்.

இதுதவிர, 82,666 மூத்தகுடிமக்கள், 50,665 மாற்றுத்திறனாளிகள், அத்தியாவசிய பணிகளில் இருப்பவர்கள் 8 பேர் என மொத்தம் 1,33,339 பேரிடம் படிவம்பெறப்பட்டு, தபால் வாக்கு பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தபால் வாக்கு பெறுவதற்காக வீடுவீடாக அரசு அலுவலர்,காவல்துறை அலுவலர், நுண் பார்வையாளர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் செல்கின்றனர்.

தற்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள், சின்னங்கள் ஒட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்படும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படும் பட்சத்தில், அதில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு இருந்தால், அவர் மீதான நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுத்து அறிவிக்கும். இல்லாவிட்டால், மாவட்ட தேர்தல் அதிகாரியே முடிவெடுப்பார்.

சி விஜில் செயலி மூலம் தற்போதுவரை 3,221 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 600 புகார்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ளவற்றில் 23 புகார்கள் மீதான நடவடிக்கை நிலுவையில் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பரந்தூர் மக்கள் புறக்கணிப்பு: புதிய விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் உள்ளிட்ட கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேட்டபோது, ‘‘பொதுவாக சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரியோ அல்லது பிரதிநிதியோ சம்பவ இடத்துக்கு சென்று அங்குள்ள மக்களை அழைத்து பேசி அறிவுரை வழங்குவார்கள். அதேநேரம் வாக்களிப்பது என்பதுஅவர்கள் உரிமை. ஜனநாயக நாட்டில் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது’’ என சாஹூ தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x