Published : 11 Apr 2024 04:16 AM
Last Updated : 11 Apr 2024 04:16 AM

"கோடை கால சிறப்பு ரயில்கள் ஏதும் அறிவிக்கப்படாமல் தூத்துக்குடி புறக்கணிப்பு"

தூத்துக்குடி: தெற்கு ரயில்வே சார்பில் தமிழகத்தின் பல்வேறு நகரங் களுக்கு கோடை கால சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தூத்துக்குடி நகருக்கு இதுவரை கோடை கால சிறப்பு ரயில் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முத்துநகர் விரைவு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. அந்த ரயிலில் கோடை காலத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே, பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க தூத்துக்குடி- சென்னை இடையே கோடை கால சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் செயலாளர் மா.பிரம நாயகம், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

தூத்துக்குடியில் இருந்து தினசரி மைசூரு விரைவு ரயில், சென்னைக்கு முத்துநகர் விரைவு ரயில் ஆகியவை மட்டுமே புறப்பட்டுச் செல்கின்றன. இந்த ரயில்களில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக காணப்படுகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி கூடுதலாக இரவு நேர ரயில் இயக்க வேண்டும். மேலும், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தினசரி காலையில் 'வந்தே பாரத்' ரயில் இயக்க வேண்டும்.

மேலும், காலையில் இயக்கப்படும் வண்டி எண் 05666 திருநெல்வேலி - தூத்துக்குடி - திருநெல்வேலி ரயிலின் பெட்டிகளைக் கொண்டு, தூத்துக்குடி - மதுரை இடையே பகல் நேர சிறப்பு ரயில் இருக்க வேண்டும். ரயில்வே வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் புதிய ரயில் மற்றும் திருநெல்வேலி - பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பை செயல்படுத்த வேண்டும். வண்டி எண். 06125, 06126 திருச்சியில் இருந்து காலை புறப்படும் காரைக்குடி, வண்டி எண் 06885, 06886 மானாமதுரை அருப்புக்கோட்டை விருதுநகர் ரயிலை தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும்.

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைய கிட்டத்தட்ட மூன்று மாதம் வரை ஆகும் என்று தெரிகிறது. தூத்துக்குடி மேலூர் ரயில் நிலைய நிறுத்தம் வரும் 16-ம் தேதி வரைதான் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி கீழூர் ரயில் நிலைய பணிகள் முடியும் வரை,வண்டி எண் 12684 தூத்துக்குடி - சென்னை முத்துநகர் ரயில், வண்டி எண். 16235- 16236 தூத்துக்குடி - மைசூரு - தூத்துக்குடி ரயில்களுக்கு தூத்துக்குடி மேலூர் ரயில் நிறுத்தத்தை நீடித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி கூடுதலாக இரவு நேர ரயில் இயக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x