Published : 10 Apr 2024 08:46 PM
Last Updated : 10 Apr 2024 08:46 PM

செய்தித் தெறிப்புகள் @ ஏப்.10: திமுகவை ‘தாக்கிய’ மோடி முதல் டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா

“தமிழகத்தில் பாஜக அலை!” - பிரதமர் மோடி பேச்சு: “கொள்ளை அடிப்பதிலும், ஊழல் செய்வதிலும் திமுக காப்புரிமை வைத்துள்ளது. தமிழகத்தை கொள்ளையடிப்பதை தவிர திமுக குடும்பம் எந்த வேலையும் செய்வதில்லை. தமிழகத்தில் மணல் கொள்ளை மூலம் மட்டும் இரண்டு ஆண்டுகளில் ரூ.4 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என்று வேலூர் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திமுக மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

அதேபோல், “திமுக தன்னுடைய சுய லாபத்துக்காக, தமிழகத்துக்கு அதிகபட்ச கேடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் கோடிக்கணக்கான வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ஆனால், அந்தத் திட்டத்தில், திமுகவினர் மட்டும் பயன் அடையும் வகையில் அத்திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இன்றளவும் இந்த கோவைப் பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிக்க தண்ணீர் கிடைக்கிறது என்பது மிகவும் வருத்தமான விஷயம்” என்று கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

மேலும், “தமிழகத்தில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் பாஜகவின் அலை வீசுகிறது. மக்கள் அனைவரும் பேசத் தொடங்கிவிட்டனர். திமுகவுக்கு விடை கொடுக்க தயாராகி விட்டனர்” என்று அவர் பேசினார்.

கேரண்டி கேட்ட ஸ்டாலினுக்கு தமிழிசை பதில்: “பிரதமர் மோடியைக் கண்டால் முதல்வர் ஸ்டாலின் அவ்வளவு பயப்படுகிறார். தனது சாதனைகளை சொல்வதை தவிர மோடி அர்ச்சனை தான் அதிகமாக உள்ளது. அண்ணன் ஸ்டாலினுக்கு இப்போது தூக்கம் வரவில்லை” என்று பாஜக தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.

மேலும் அவர், "அனைத்துக்கும் கேரண்டி கேட்கிறார் முதல்வர். நீட் விலக்கு என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தது திமுக. ஆனால், நீட் விலக்கை அமல்படுத்த முடியும் என்று திமுகவால் கேரண்டி தர முடியுமா. நீட் தேர்வு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெரியாத ஒரு முதல்வர் இருக்கிறார். தூக்கத்தில் இருந்து எழுந்தது போல் இன்றைக்கு அனைத்துக்கும் கேரண்டி கேட்டுள்ளார். இவரால் தமிழக மக்களுக்கு எந்த கேரண்டியும் கொடுக்க முடியாது. சமூக நீதி பேசும் திமுக அரசால், வேங்கைவயல் பிரச்சினையை இன்றைக்கும் தீர்க்க முடியவில்லை." என்று விமர்சித்துள்ளார்.

கர்நாடக அதிமுக மாநிலச் செயலர் ராஜினாமா: "கர்நாடகாவில் பாஜகவை மறைமுகமாக இபிஎஸ் ஆதரிக்கிறார். கர்நாடகாவில் நிறைய பகுதிகளில் தமிழர்கள் வாக்குவங்கி உள்ளது. தமிழர்களின் வாக்கு வங்கியை சிதைப்பதன் மூலம் பாஜகவுக்கு ஆதரவளிக்க இப்படி ஒரு நிலையை எடுத்துள்ளார் என்று கருதுகிறேன்" என்று கூறி கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். இபிஎஸ்ஸை கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக எஸ்.டி.குமார் அறிவித்துள்ளார்.

“நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்” - அமீர்: “எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்” என்று இயக்குநர் அமீர் மதுரையில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “நீங்கள் அனைவரும் கேட்பது போல் என்னிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் 11 மணி நேரம் விசாரணை நடத்தியது, அமலாக்கத் துறையினர் ரெய்டு நடத்தியது உண்மைதான். என் மீதான குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நான் நிரூபிப்பேன்” என்றார்.

“ஓட்டுக்கு திமுகவினர் தரக்கூடியது கஞ்சா மூலம் வந்த பணம்”: “இந்த முறை திமுககாரர்கள் யாராவது தன்னுடைய பாக்கெட்டில் இருந்து ஓட்டுக்கு பணம் கொடுத்தால், அது கஞ்சா மூலமாக வந்த பணம் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களுடைய குழந்தையின் எதிர்காலத்தை உறிஞ்சப்போகிற பணம் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று கோவையில் நடந்த பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசினார்.

“மத்தியில் காங். ஆட்சி அமைந்தால் மேகேதாட்டுவில் அணை”: “மேகேதாட்டுவில் அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை. அணை கட்டாததால் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும். பெங்களூருவில் அனைவருக்கும் காவிரி நீர் கிடைக்க வழிவகை செய்யப்படும்” என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

“இரு கொள்கைகள் இடையிலான யுத்தம் இது!” - ராகுல் காந்தி: “எதிர்வரும் மக்களவைத் தேர்தல் இரு கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம். நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள் யார், மக்களின் ஒற்றுமை, சுதந்திரத்துக்கு பாடுபட்டவர்கள் யார் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்படும்” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: பதஞ்சலி விளம்பர விவகாரத்தில், பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் ஆச்சாா்ய பாலகிருஷ்ணா ஆகியோா் உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருந்த நிலையில், அதனை உச்ச நீதிமன்றம் மீண்டும் ஏற்க மறுத்துவிட்டது. அதோடு, ‘இந்த வழக்கில் நாங்கள் தயவு காட்ட விரும்பவில்லை’ என்று காட்டமாக தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தை நாடிய கேஜ்ரிவால்: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்தது செல்லும். இந்த நடவடிக்கை சட்டபூர்வமானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்த தீர்ப்பினை எதிர்த்து கேஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா: டெல்லி அரசில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதோடு ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “ஆம் ஆத்மி கட்சி ஊழலை எதிர்த்துப் போராட தொடங்கப்பட்டது. ஆனால், இன்று அந்தக் கட்சி ஊழலில் சிக்கித் தவிக்கிறது. அமைச்சர் பதவியில் பணியாற்றுவது எனக்கு கடினமாகிவிட்டது. ஊழல் என்ற பெயருடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை. அதனால், அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளேன்” என்றார்.

முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பணமோசடி வழக்கில் ராஜ்குமார் ஆனந்தின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் தொடர்புடைய 13 இடங்களில் இருந்து முக்கிய ஆதாரங்கள் மீட்கப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

“நெதன்யாகு தவறு செய்கிறார்” - பைடன் அதிருப்தி: இஸ்ரேல் - காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், “இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அணுகுமுறை தவறானது. அவருடைய அணுகுமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

பெயரைக் குறிப்பிடாமல் பாஜகவை சாடிய இபிஎஸ்: “இப்போது மத்தியில் இருந்து தமிழகத்துக்கு அடிக்கடி வந்து போகின்றனர். விமானத்தில் இருந்து இறங்குகின்றனர். ரோட்டில் செல்கின்றனர். அத்துடன் கதை முடிந்து போய்விட்டது. மக்கள் வாக்களித்து விடுவார்களா? தமிழக மக்கள் என்ன சாதாரணமானவர்களா? அறிவுத் திறன் படைத்தவர்கள்” என்று பொள்ளாச்சியில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். எனினும், அவர் தனது பேச்சில் பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடவில்லை.

இந்துக்கள், சீக்கியர்களின் சொத்துகளை மீட்டு ஒப்படைக்கிறது தலிபான் அரசு: தலிபான் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் சொத்துகளை மீட்டெடுக்கும் பணி தொடங்க உள்ளது. அதற்கான பணியை அந்த நாட்டில் நீதி அமைச்சகம் மேற்கொள்கிறது. தலிபான் அரசு இதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது.

“வள்ளலார் பெருவெளியை அபகரிக்கிறது திமுக அரசு” : “அதிகார கொடுங்கரங்களால் வள்ளலார் பெருவெளியை அபகரிக்கும் திமுக அரசுக்கு, வேறு ஏதேனும் சாமியார் மடத்தின் மீது கை வைக்கத் துணிவிருக்கிறதா? என்ற கேள்வியும் எழுகிறது. வள்ளல் பெருமானார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியைக் கையகப்படுத்தும் முடிவை கைவிட்டு வள்ளாலார் ஆய்வு மையத்தை வடலூரிலேயே வேறு பகுதியில் அமைத்திட தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

ரயில்வே ஊழியர்களுக்கான தபால் வாக்கு வசதிக்கு உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு: தபால் வாக்குப் பதிவு நடந்து வரும் நிலையில், தெற்கு ரயில்வே ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தும் வசதியை ஏற்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x