Published : 10 Apr 2024 03:39 PM
Last Updated : 10 Apr 2024 03:39 PM
ஓசூர்: "கர்நாடகாவில் பாஜகவை மறைமுகமாக இபிஎஸ் ஆதரிக்கிறார். கர்நாடகாவில் நிறைய பகுதிகளில் தமிழர்கள் வாக்குவங்கி உள்ளது. தமிழர்களின் வாக்கு வங்கியை சிதைப்பதன் மூலம் பாஜகவுக்கு ஆதரவளிக்க இப்படி ஒரு நிலையை எடுத்துள்ளார் என்று கருதுகிறேன்" என்று கூறி கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். இபிஎஸ்ஸை கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக எஸ்.டி.குமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.டி.குமார், "கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் வரை தொடர்ந்து தமிழர்களுக்கு அரணாக போட்டியிட்டு வருகிறது. ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தல், இந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. ஏன், யாருக்கு ஆதரவளிப்பது என்ற குழப்பமான மனநிலையில் கர்நாடக அதிமுகவினர் உள்ளனர்.
இபிஎஸ் முதன்முதலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி ஏ படிவம், பி படிவத்தில் கையெழுத்திட்டார் என்றால் அது கர்நாடக சட்டமன்ற தேர்தலில்தான். ஆனால், சில நாட்களிலேயே பாஜக ஆதரவு தெரிவிப்பதாக கூறி கடைசி நேரத்தில் எங்களை வாபஸ் பெறவைத்தார்கள்.
கட்சிக்காக தீவிரமாக உழைத்த நாங்கள் இந்த மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனுவை கர்நாடக மாநில அதிமுக செயலாளர் என்ற அடிப்படையில் அளித்திருந்தேன். அதற்கு நேர்காணலும் நடத்தினார்கள். மறுநாள் என்னை தலைமை கழகத்துக்கு வர சொன்னார் இபிஎஸ். அதன்படி சென்றால் என்னை சந்திக்கவும் இல்லை, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மட்டும் வேட்பாளரை அறிவித்துவிட்டு சென்றுவிட்டார்.
ஏன் கர்நாடக மாநிலத்துக்கு வேட்பாளரை அறிவிக்கவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்னை அதிர்ச்சியடைய வைத்தது. கட்சி நிர்வாகிகள் சொன்னதால் கர்நாடகாவில் வேட்பாளரை நிறுத்தவில்லை என்றார் இபிஎஸ். `கட்சியின் பொதுச்செயலாளர் நீங்கள்தான். அந்த அடிப்படையில் முடிவெடுக்க வேண்டியதும் நீங்கள்தான். ஆனால் மற்றவர்கள் சொன்னார்கள் என்பதற்காக போட்டியிட வேண்டாம் என்று சொன்னால் எப்படி' என்று மட்டும் இபிஎஸ்ஸை கேட்டுவிட்டு, `தெளிவான முடிவு இல்லாததால் என்னை பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு' கூறிவிட்டு அங்கிருந்து வந்துவிட்டேன்.
அதன்பின், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி இபிஎஸ்ஸை சந்திக்க சென்றோம். ஆனால், 'உங்களை எல்லாம் யார் வரச்சொன்னது' என்கிற ரீதியில் கட்சி நிர்வாகிகளை அன்று கீழ்த்தரமாக நடத்தினார்கள். நிர்வாகிகள் சத்தம் போட்ட பிறகு இபிஎஸ் எங்களை சந்தித்தார்.
ஆனால் 'கர்நாடகாவில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இல்லை. அங்கு போட்டியிட்டால் ஓட்டு வாங்க மாட்டோம்.' என்று கூறிய இபிஎஸ், 'யாருக்கு ஆதரவளிப்பது என்பதை குழுவில் பேசி பிறகு சொல்கிறேன்' என்று தெரிவித்தவர் இதுவரை எந்த பதிலையும் கூறவில்லை. அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களின் நானும் ஒருவன். அப்படி ஒற்றைத் தலைமையாக வந்த இபிஎஸ் தற்போது எந்த முடிவையும் அவர் எடுக்கவில்லை. குழுவிடம் பேசி முடிவெடுப்பதாக கூறுகிறார். அப்படியானால் இது ஒற்றை தலைமை இல்லையே. கூட்டு தலைமைதானே.
நாங்கள் யாருக்கு வேலை செய்ய வேண்டும் என்பதை ஒரு பொதுச் செயலாளராக தீர்மானிக்க முடியாத நிலையில் இபிஎஸ் உள்ளார். கர்நாடகாவில் இருக்கும் அதிமுகவினர் அவரை தாறுமாறாக விமர்சனம் செய்து வருகின்றனர். அன்றைக்கு 2014 மக்களவை தேர்தலில் ஜெயலலிதா பாஜகவை துணிச்சலாக எதிர்த்து பேசினார். ஆனால், இன்றைக்கு மக்களவை தேர்தல் போல் இல்லாமல், சட்டமன்ற தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வது போல் பேசி வருகிறார் இபிஎஸ். டெல்லியை பற்றியோ, மோடியை பற்றியோ இதுவரை அவர் வாய் திறக்கவில்லை.
இபிஎஸ் மீது எம்ஜிஆர் ரசிகர்கள் மிகவும் கொதித்து போய் உள்ளனர். காரணம், பொதுச் செயலாளராக இருக்கும் இபிஎஸ் தனது பிரச்சார வாகனத்தில் எம்ஜிஆர் படத்தை மிகவும் சிறிய அளவிலேயே போடுகிறார். வேறு யாரவது அப்படி செய்தால் பரவாயில்லை. கட்சியின் பொதுச்செயலாளரே எம்ஜிஆரை மதிப்பதில்லை. இந்தக் கட்சியை உருவாக்கியவர் எம்ஜிஆர். அவரால் உருவாக்கப்பட்ட கொடியையும், சின்னத்தையும் பிடித்துக்கொண்டு எம்ஜிஆரை சிறுமைப்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எம்ஜிஆர் ரசிகர்கள் மிகவும் வேதனையோடு இருக்கிறார்கள்.
தேர்தலில் நான் பெங்களூருவில் போட்டியிடுவதாக இருந்தால், தமிழர்களை முன்னிறுத்த வேண்டும் என்று இருந்தோம். தமிழ் அமைப்புகள் எங்களுக்கு ஆதரவு கடிதத்தை கொடுத்தன. ஒட்டுமொத்த தமிழ் அமைப்புகளும் ஒன்றாக இணைவதற்கான வாய்ப்புகள் உண்டானது. ஆனால், எங்களால் அதை சாத்தியப்படுத்த முடியவில்லை. கர்நாடக மாநிலத்தில் அரணாக இருக்கக்கூடிய அதிமுகவை, வேலியே பயிரை மேய்ந்த கதையாக கட்சித் தலைமையே கட்சியை அழிக்கிறது. இப்படியான நிலையில் மாநிலச் செயலாளராக இருந்து என்ன பயன்.
கட்சித் தொண்டர்களுக்கு ஒரு மாநிலச் செயலாளராக என்னால் பதில் சொல்ல முடியவில்லை. வேறு வழியில்லாமல், கட்சியில் இருந்து விலகாமல், எனக்கு கொடுக்கப்பட்ட கர்நாடக மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். கர்நாடகாவில் இதுநாள் வரை தமிழர்களுக்கு அரணாக இருந்தது. ஆனால் இப்போது அது பட்டுபோய் விட்டது.
கர்நாடகாவில் பாஜகவை மறைமுகமாக இபிஎஸ் ஆதரிக்கிறார். கர்நாடகாவில் நிறைய பகுதிகளில் தமிழர்கள் வாக்குவங்கி உள்ளது. தமிழர்களின் வாக்கு வங்கியை சிதைப்பதன் மூலம் பாஜகவுக்கு ஆதரவளிக்க இப்படி ஒரு நிலையை எடுத்துள்ளார் என்று கருதுகிறேன். கர்நாடகாவில் அதிமுகவை லெட்டர் பேடு கட்சி போல் எடப்பாடி பழனிசாமி நடத்திக்கொண்டிருக்கிறார்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT