Published : 10 Apr 2024 02:56 PM
Last Updated : 10 Apr 2024 02:56 PM

தெற்கு ரயில்வே ஊழியர்களுக்கான தபால் வாக்கு வசதிக்கு உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு

சென்னை: தபால் வாக்குப் பதிவு நடந்து வரும் நிலையில், தெற்கு ரயில்வே ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தும் வசதியை ஏற்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மதுரை ரயில்வே கோட்டத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றும் ராம்குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், “மக்களவைத் தேர்தலில், ராணுவம், துணை ராணுவப்படை வீரர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஊடகத்தினர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக தபால் வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

இதில் ரயில்வே தொழிலாளர்கள் சேர்க்கப்படவில்லை. அவர்களையும் சேர்க்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். கேரளாவில் ரயில்வே துறையினருக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் ரயில்வே ஊழியர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. ரயில் ஓட்டுனர்கள், ரயில் நிலைய அதிகாரிகள், பயணச்சீட்டு பரிசோதகர்கள் ஆகியோர் வாக்கு செலுத்துவதற்காக விடுப்பு எடுக்க முடியாது.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ரயில்வே துறை ஊழியர்கள் தபால் வாக்கு அளிக்க அனுமதிக்கப்பட்டனர். எனவே, அதேபோல, மக்களவை தேர்தலிலும் தபால் வாக்களிக்க அனிமதிக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தேன். ஆனால், அந்த மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த மனுவுக்கு தெற்கு ரயில்வேயும், தேர்தல் ஆணையமும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில், தபால் வாக்கு பதிவுக்கு அனுமதியளிப்பது தொடர்பாக விண்ணப்பிக்க, தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கடைசி நாளான பிப்ரவரி 20-ம் தேதிக்குள் தெற்கு ரயில்வே தரப்பில் விண்ணப்பிக்கப்படவில்லை.

தபால் வாக்கு பதிவு செய்வதற்கு சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் மார்ச் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது தபால் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு, வாக்குப் பதிவு நடந்து வருகிறது. கூடுதலாக தபால் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்க முடியாது. எனவே தெற்கு ரயில்வே ஊழியர்கள், தபால் வாக்களிக்க உரிமை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டது. அப்போது, தெற்கு ரயில்வே தரப்பில், நேரில் வாக்களிக்க ஏதுவாக ஊழியர்களுக்கு விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடைசி நேரத்தில் கூடுதல் தபால் வாக்குச் சீட்டுக்களை அச்சடிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர். மேலும், ஊழியர்கள் நேரில் வாக்களிக்க ஏதுவாக விடுப்பு வழங்குவது குறித்து தெற்கு ரயில்வே பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x