Published : 10 Apr 2024 12:22 PM
Last Updated : 10 Apr 2024 12:22 PM

“கொள்ளை அடிப்பதிலும், ஊழல் செய்வதிலும் திமுக காப்புரிமை வைத்துள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம் @ வேலூர்

வேலூர்: “கொள்ளை அடிப்பதிலும், ஊழல் செய்வதிலும் திமுக காப்புரிமை வைத்துள்ளது. தமிழகத்தை கொள்ளையடிப்பதை தவிர திமுக குடும்பம் எந்த வேலையும் செய்வதில்லை. தமிழகத்தில் மணல் கொள்ளை மூலம் மட்டும் இரண்டு ஆண்டுகளில் ரூ.4 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.” என்று வேலூர் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி திமுக மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, நேற்று (செவ்வாய்) சென்னையில் நடந்த வாகனப் பேரணியில் பங்கேற்றார். இன்று வேலூரில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூர் சென்ற பிரதமர் மோடி, வேஷ்டி, சட்டை அணிந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

பாஜக கூட்டணி வேட்பாளர்கள் ஏ.சி.சண்முகம், சௌமியா அன்புமணி, கே.பாலு ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி பேசுகையில், “என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம். உங்களிடத்தில் தமிழில் உரையாற்ற முடியாதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

வரவிருக்கும் தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியான ஆண்டாக அமையட்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எனது அனைத்து திறமைகளையும் நான் பயன்படுத்துவேன். வேலூரில் நடக்கும் இந்த எழுச்சிமிகு கூட்டத்தை டெல்லியில் உள்ளவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆங்கிலேயருக்கு எதிராக மிகப்பெரிய புரட்சியை செய்த மண் வேலூர். இந்த வேலூர் மண் மீண்டும் ஒரு வரலாறு படைக்கப் போகிறது. தமிழகத்தில் பாஜகவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது.

இந்த 21-ம் நூற்றாண்டில் இந்தியாவை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் ஆளுகின்ற தேசிய ஜனநாயக கூட்டணி இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து வைத்துள்ளது. ஆனால், 2014-ம் ஆண்டுக்கு முன்பாக இந்தியா எப்படி இருந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். பொருளாதாரத்தில் பலவீன நாடாக இருந்தது. மிகப்பெரிய முடிவுகள் எதுவும் அப்போது எடுக்கப்படவில்லை. இந்தியாவை பற்றி எங்கு பார்த்தாலும் மோசடி, ஊழல் செய்திகள் மட்டுமே வெளிவந்தன.

இந்தியா தற்போது உலகின் வல்லரசாக மாறி வருகிறது. இதில் தமிழகத்தின் பங்கு மிகப்பெரியது. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. விண்வெளி துறையில், உற்பத்தி துறையில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்வதில் தமிழகம் மிகக் கடுமையாக உழைக்கிறது. தமிழகத்தில் அமைந்துள்ள ராணுவ பாதுகாப்பு உற்பத்தி மையங்கள் மூலமாக நடைபெறும் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி தமிழகத்தை மிகப்பெரிய அளவில் முன்னோக்கி கொண்டு செல்லும்.

வேலூர் மக்களின் எதிர்பார்ப்புகளை மனதில் வைத்து என்டிஏ கூட்டணி செயல்படுகிறது. வேலூர் விமான நிலையம் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். சென்னை, பெங்களூரு தொழில் வழித்தடம் வேலூர் வழியாகச் செல்கிறது. இதன்காரணமாக வேலூர் நவீன மயமாக மாறும்.

வளர்ந்த இந்தியாவை தமிழகம் வழிநடத்த கூடிய நேரம் இது. ஆனால் திமுக இன்னும் பழைய சிந்தனைகளோடு இருப்பதோடு, பழைய அரசியலையும் செய்து நம் அனைவரையும் இதில் சிக்க வைக்க நினைக்கிறது. ஒட்டுமொத்த திமுகவும் ஒரு குடும்பத்தின் சொத்து. திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேறவில்லை. தமிழக கலாச்சாரத்துக்கு எதிராக திமுக செயல்படுகிறது. குடும்ப அரசியல், ஊழல் போன்றவற்றால் தமிழகத்தை திமுக பின்னோக்கி அழைத்துச் செல்கிறது.

கொள்ளை அடிப்பதிலும், ஊழலிலும் திமுக காப்பிரைட் வைத்துள்ளது. தமிழகத்தை கொள்ளையடிப்பதை தவிர திமுக குடும்பம் எந்த வேலையும் செய்வதில்லை. தமிழகத்தில் மணல் கொள்ளை மூலம் மட்டும் இரண்டு ஆண்டுகளில் ரூ.4 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மத்திய அரசு அனுப்புகிறது. ஆனால், அதை திமுக ஊழல் செய்து வருகிறது.

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கமும், கடத்தலும் அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை நடப்பது வேதனை அளிக்கிறது. போதை மாஃபியாகளுக்கு யார் பாதுகாப்பில் எந்த குடும்பத்தோடு தொடர்பில் இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா. இந்த பாவங்களுக்கு எல்லாம் வருகின்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

மக்களைப் பிரித்தாளும் கொள்கையில் திமுக ஈடுபடுகிறது. தமிழக மக்களை மொழியால், மதத்தால், சாதியால் பிரித்தாள்கிறது திமுக. என்றைக்கு இந்த பிரித்தாளும் செயல்களை மக்கள் உணரும்போது திமுக கட்சி செல்லாக்காசாகிவிடும். இந்த 50 ஆண்டுகளில் திமுக செய்த மோசமான அரசியலை நான் தொடர்ந்து அம்பலப்படுத்துவேன்.

காசி தமிழ் சங்கமம் நடத்தினோம். ஐ.நா மன்றத்தில் தமிழ் குறித்து பேசினேன். உலகத்தில் பழமையான மொழி தமிழ் என்பதை நிறுவ முயற்சித்து வருகிறேன். தமிழகத்தின் செங்கோல் நாடாளுமன்றத்தில் வீற்றிருக்கிறது. ஆனால், இந்த நிகழ்வை திமுக புறக்கணித்தது.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது காங்கிரஸும், திமுகவும்தான். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்துவிட்டார்கள். அந்த உண்மையை மக்களுக்கு சொல்லாமல் மறைக்கிறார்கள். யாருடைய நலனுக்காக இதை கொடுத்தார்கள் என்பது தெரியும். இன்றைக்கு அதைப்பற்றி பேசாமல் காங்கிரஸ் மவுனம் சாதிக்கிறது. கச்சத்தீவை தாரைவார்த்ததால் நமது மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இலங்கை கடற்படை மூலம் சிறைபிடிக்கப்படும் மீனவர்கள் என்டிஏ அரசின் முயற்சியால் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களை எனது அரசு மீட்டு கொண்டுவந்தது. காங்கிரஸும், திமுகவும் மீனவர்களுக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும் துரோகம் செய்தவர்கள்.

தமிழகம் பெண் சக்தியை ஆராதிக்கும் மண். ஆனால், இண்டியா கூட்டணியினர் பெண் சக்திக்கு எதிராக பேசி வருகின்றனர். இந்து மதத்தில் இருக்கிற பெண் சக்தியை அழிப்பேன் என ராகுல் காந்தி பேசியது நினைவிருக்கலாம். திமுகவுக்கும் அதே மனநிலை தான். சனாதனத்தை அழிப்பேன் என்று ஒருவர் திமுகவில் பேசுகிறார். அதேபோல் ராமர் கோவிலை புறக்கணிப்போம் என்கிறது திமுக.

பெண்களை இழிவுபடுத்துவதில் திமுகவும், இண்டியா கூட்டணியும் கைகோர்த்து வேலை பார்க்கிறார்கள். அம்மா ஜெயலலிதாவை திமுகவினர் எப்படி எல்லாம் இழிவுபடுத்தினார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இன்றைக்கு கூட திமுக தலைவர்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார்கள். நாங்கள் பெண்கள் சக்தியை பாதுகாப்பது மட்டுமல்ல, அவர்களுக்கான உரிமைகளை மீட்டுக் கொடுப்போம்.” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x