Published : 10 Apr 2024 05:37 AM
Last Updated : 10 Apr 2024 05:37 AM
சென்னை: மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான வாக்குச்சாவடிகளில் வசதிகள் ஏற்படுத்துவது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அணுகத்தக்க தேர்தலுக்கான வழிகாட்டும் குழுவின் 4-வது கூட்டம் அதன் தலைவரும், தமிழகதலைமை தேர்தல் அதிகாரியுமான சத்யபிரத சாஹு தலைமையில் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத் திறனாளிவாக்காளர்கள் பெயர் சேர்ப்பதில்உள்ள பிரச்சினைகள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சிறப்பு தேவைகளை மேற்கொள்ளும் வாக்குச்சாவடி அலுலவலர்களுக்கான பயிற்சி, வாக்குச்சாவடிகளில் குறைந்தபட்ச வசதிகளான சாய்தளம், சக்கர நாற்காலிகள், குடிநீர், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான வாக்குச்சாவடி வசதிகள், மருத்துவபொருட்கள், தேவையான தளவாடங்கள், தேவையான வெளிச்சம் கிடைக்கும் வகையிலான மின்சாரஏற்பாடுகள், வாக்காளர் உதவி மையம், தண்ணீர் வசதியுடன்கூடிய கழிப்பறை, வாக்குச்சாவடி தன்னார்வலர்கள், வரிசையை மேலாண்மை செய்தல் உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்த கூட்டத்தில், இணை தலைமை தேர்தல் அதிகாரி எச்.எஸ்.காந்த், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை, பொதுப்பணித் துறை, தொண்டு அமைப்புகள், மாற்றுத் திறனாளிகள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ரூ.254 கோடி பறிமுதல்: தமிழகத்தில் தேர்தல் நடத்தைவிதிகளை மீறி கொண்டு செல்லப்படும் பணம், தங்கம், பரிசுப் பொருட்கள் தேர்தல் பறக்கும்படையினர், நிலைகண்காணிப்புக்குழுக்கள், வருமான வரித்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று காலை 9 மணி நிலவரப்படி ரூ.103.78 கோடி ரொக்கம், ரூ.4.89 கோடி மதிப்பு மதுபானங்கள், ரூ.93 லட்சம் மதிப்பு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், ரூ.121.65 கோடி மதிப்பு தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள், ரூ.23.15 கோடி மதிப்பு பரிசுப் பொருட்கள் என மொத்தம் ரூ.254.40 கோடி மதிப்புள்ளவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஏப்.8-ம் தேதி காலை 9 மணி முதல் நேற்று காலை 9 மணி வரையிலான ஒரு நாளில் மட்டும் ரூ.4.05 கோடி ரொக்கம், ரூ.14.39 கோடி மதிப்பு தங்கம் உள்ளிட்ட உலோகங்கள் உட்பட ரூ.18.66 கோடி மதிப்புள்ளவை கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிக்கை: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த என்.புகழேந்தி(71) கடந்த சில தினங்களுக்கு முன், மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது காலமானார். அதைத்தொடர்ந்து, தொகுதி காலியாக இருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதைதெரிவித்து, சட்டப்பேரவை செயலகம் தமிழக அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவை செயலகம் சார்பிலும்சத்யபிரத சாஹு வாயிலாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர், இங்கு இடைத்தேர்தலை ஆணையம் நடத்தும் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT