Published : 28 Apr 2018 06:42 PM
Last Updated : 28 Apr 2018 06:42 PM
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களுக்கு பெரிய அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கும் என டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.
இது குறித்து டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியனிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:
நேற்று 11 எம்எல்ஏக்கள் தீர்ப்பு வந்துள்ளது அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தீர்ப்பைப் பொறுத்தவரையில் அனைத்து தரப்பு வாதங்களும் முழுமையாக தீர்ப்பில் பிரதிபலிக்கப்படவில்லை. சட்டரீதியாக என்னவெல்லாம் எங்களுக்கு சாதகமாக உள்ள் விஷயங்களை மேற்கோள் காட்டி வாதமிட்டோமோ அது இந்த வழக்கில் முழுமையாக எடுத்தாளப்படவில்லை.
தீர்ப்பில் பல விஷயங்கள் குறிப்பிட்டு சொல்லி இருந்தாலும், மிக முக்கியமான விஷயங்களாக சொல்லியிருந்தோமோ அது தீர்ப்பில் விவாதிக்கவில்லை. ஒரு வேலை அது தேவை இல்லை என்று நீதிபதிகள் கருதியிருக்கலாம்.
ஆனால் நாங்கள் இது போன்ற விஷயங்கள் விடுபட்டு போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் எழுத்துப்பூர்வமாக வாதத்தை தாக்கல் செய்தோம். அதில் என்னென்ன விஷயங்கள் கூறியிருக்கிறோமோ அது தீர்ப்பில் விவாதிக்கப்படவில்லை.
முக்கியமான ஒரு விஷயம் எம்எல்ஏ ஆர்.நட்ராஜின் வழக்கறிஞர் அவர் தரப்பு வாதமாக நீங்கள் நீதிமன்றம் எங்களுக்கு ஏன் நீங்கள் எதிர்த்து வாக்களித்தீர்கள் என்று கேள்வியை கேட்டு அதற்கு பதிலளிக்கும் உரிமையைக் கொடுக்க வேண்டும், அதற்கு சரியான பதிலளிக்க எங்களுக்கு வாய்ப்பு தரவேண்டும். அந்த உரிமையை நீதிமன்றம் எடுத்துக்கொள்ள கூடாது என்று வாதம் வைத்தார்.
அப்போது தலைமை நீதிபதி அந்த வழக்கறிஞரிடம் என்ன கேட்டார் என்றால், 2017 பிப்ரவரி மாதம் நடந்ததற்கு இந்த பிப்ரவரி வரையிலும் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லையே? நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியும் அவர் நீதிமன்றத்திற்கு வர மறுக்கிறாரே? அப்போதும் கூட நீதிமன்றம் தலையிடக்கூடாதா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் இது போன்ற ஒரு தருவாயில் எப்படி நாங்கள் ஒரு முடிவுக்கு வருவது? என்று கேட்டார்.
ஆனால், அதைப்பற்றிய விபரங்கள் முழுமையாக தீர்ப்பில் குறிப்பிடாதது சட்டத்தை நம்பக்கூடிய, சட்டபூர்வமான விஷயங்கள் வெல்லும் என்று நம்பக்கூடிய என்னைப்போன்ற வழக்கறிஞர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.
11 எம்எல்ஏக்கள் தீர்ப்பை ஒட்டி, 18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு எப்படி வரும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
11 எம்எல்ஏக்கள் தீர்ப்பில் சபாநாயகர் எந்தவித உத்தரவும் பிறப்பிக்காததால் நாங்கள் உத்தரவிட முடியாது என்கிறார்கள். ஆகவே, 18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் உத்தரவிட்டதால் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
எங்களைப் பொறுத்தவரை 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் உத்தரவு போட்டுள்ளதால் அதை தவறு என்றுதான் நாங்கள் வாதம் செய்துள்ளோம். எல்லாவற்றிற்கும் மேல் ஒரு சில வழக்குகளில் இங்கே நீதி கிடைக்கிறது. சில வழக்குகளில் மேல் முறையீட்டின் மூலம் உச்ச நீதிமன்றத்தில் நீதி கிடைக்கிறது.
எங்களைப் பொறுத்தவரை 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் உறுதியாக நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த வழக்கில் எந்த அம்சங்கள் எல்லாம் குறையாக இருக்கிறதோ அதை எல்லாம் நாங்கள் அதையே அடிப்படையாகக் கொண்டு மேல் முறையீடு செய்வோம்.
இன்னொரு முக்கியமான விஷயம் இந்த வழக்கு உச்சநீதிமன்றம் சென்று விட்டு வந்த வழக்கு. ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பியதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
உச்ச நீதிமன்றத்தில் சபாநாயகரின் அதிகாரம் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால் இதில் முடிவெடுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்களே?
அதே கருத்தைத்தான் செம்மலை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதமாக வைக்கப்பட்டது. ஆனாலும் எங்களுடைய வாதத்தையும் கேட்ட பிறகு இது வேறு வகையான வழக்கு ஆகவே சென்னை உயர் நீதிமன்றம் தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும், என்று உச்ச நீதிமன்றம் வழக்கை திருப்பி அனுப்பி வைத்தார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தீர்ப்பு எப்படி வரும்?
ஒரு நியாயமான தீர்ப்பு உறுதியாக வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
சபாநாயகர் முடிவுக்கு எதிராக தடை வரும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
நிச்சயம் வரும் என்று உறுதியாக எதிர்பார்க்கிறோம்.
அப்படி 18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தீர்ப்பு வந்தால் அது அரசியல் மாற்றத்தை உருவாக்குமா?
அரசியல் மாற்றம் என்பதைத் தாண்டி, உண்மையிலேயே நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் வண்ணமாக அந்த தீர்ப்பு இருக்கும். ஆறு மாத காலத்துக்கு மேல் எந்த ஒரு சட்டப்பேரவை தொகுதியும் காலியாக இருக்கக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. ஆனால் ஆறு மாத காலத்துக்கு மேலாக செப்டம்பர் 2017-லிருந்து 18 எம்எல்ஏக்களின் தொகுதிகள் காலியாகவே உள்ளன.
மக்களுடைய எதிர்பார்ப்பாக இந்தத் தீர்ப்பு இருந்து வருகிறது. ஆகவே அரசியல் மாற்றத்தைத் தாண்டி நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை உணர்த்தும் விஷயமாக இந்தத் தீர்ப்பு அமையும் என்று நம்புகிறேன். ஆகவே நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களுக்கு பெரிய அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
இவ்வாறு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT