Published : 09 Apr 2024 06:30 PM
Last Updated : 09 Apr 2024 06:30 PM
‘அழகி’ திரைப்படத்தின் மூலம் பட்டித்தொட்டியெல்லாம் பாப்புலரான திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், நாஞ்சில் நாடன் எழுதிய தலைகீழ் விகிதங்கள் நாவலின் உயிர்ப்பு சற்றும் குறையாமல் ‘சொல்ல மறந்த கதை’ படத்தை இயக்கியருந்தார். அந்த நாவலை வாசித்தபோது அவர் அழுத பகுதிகளைத் திரைக்கதையாக்கும் போதும் உணர்ச்சி வசப்பட்டதாக ஓர் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்த தங்கர் பச்சான், அது திரைப்படமாக வந்தபோது பார்வையாளர்கள் அதே இடங்களில் உணர்ச்சிவசப்படுத்தினார் என்பதை மறுப்பதற்கில்லை. அந்த அளவுக்கு திரைத்துறையில் அர்ப்பணிப்போடு இயங்கக் கூடியவர். யதார்த்தத்திலும் உணர்ச்சிவசப்படக் கூடியவர் என்பது அவரைச் சுற்றியுள்ளவர்கள் அறிந்ததே.
உதாணரத்துக்கு, இயற்கை பேரிடரால் கடலூர் மாவட்டம் பாதிக்கப்பட்டபோது, தனது ஆதங்கத்தை சமூக ஊடங்கள் வாயிலாக மக்களை சென்றடையச் செய்தார். எதையும் பட்டென்று பேசும், உணர்ச்சிமிக்கவரான தங்கர் பச்சான் யாரும் எதிர்பாராத வகையில் கடலூர் மக்களவைத் தொகுதியின் பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, அது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல.
தங்கர் பச்சானின் இயல்பான குணங்கள் அரசியலுக்கு சரியாக இருக்குமா என்பது போன்ற எண்ணற்ற கேள்விகள் வாக்காளர்கள் மத்தியில் எழாமல் இருந்திருந்தால் வியப்புத் தான். மக்களவைத் தேர்தல் அறிவித்த பின்னரும், அதிமுக கூட்டணியா, பாஜக கூட்டணியா என்ற பரபரப்பான சூழல்களுக்கு இடையே பாஜக கூட்டணியில் இடம்பெற்ற பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதில் அக்கட்சித் தலைமை, வலுவான தொகுதியாக கருதப்படும் கடலூர் தொகுதியின் வேட்பாளராக தங்கர் பச்சான் நிறுத்தப்படும் செய்தி வெளியானது. தமிழ் தேசிய உணர்வாளரும், திரைப்படக் கல்லூரியில் பயின்று, ஒளிப்பதிவாளராக திரையுலகுக்கு அறிமுகமானவர், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். அதோடு மட்டுமின்றி திரைப்படை இயக்குநராகவும், நடிகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் அவர், தற்போது யாரும் எதிர்பாரத வகையில், கடலூர் பாமக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். மண்ணின் மைந்தர், திரைப்பட வெளிச்சம் என்ற பன்முகத்தோடு, தொகுதிக்குள் வலம் வரும் தங்கர் பச்சான், அவரை வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதை, பாமக நிறுவனரே தேர்தல் பரப்புரையின்போது வெளிப்படுத்தினார்.
அதாவது, முன்னாள் எம்எல்ஏ ஆர்.கோவிந்த சாமியை நிறுத்த முயற்சி போது, அவர் உடல் நலத்தைக் காரணம் காட்டி தவிர்த்து விட்ட நிலையில் தான், வெளிநாட்டிலிருந்த தங்கர்பச்சானை தொடர்பு கொண்டு கடலூர் வேட்பாளராக உங்களை நிறுத்துகிறேன் என்றபோது, அவரால் நம்ப முடியவில்லை. ”நானா, எனக்கா என ஆச்சர்யத்தோடு தான் என்னிடம்” பேசினார். ஆமாம், நீங்கள் தான் எனத் திரும்பக் திரும்பக் கூறிய பிறகு நம்பினார் என்றார். அதே நேரத்தில் இண்டியாக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஆரணித் தொகுதி எம்.பி.யும், பாமக தலைவர் அன்புமணியின் மைத்துனருமான விஷ்ணு பிரசாத்தும், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக, அக்கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ சிவக்கொழுந்துவும் களம் காண்கின்றனர்.
பாமகவுக்கென வலுவான வாக்கு வங்கியும், தமிழ் தேசிய உணர்வாளர்களின் ஆதரவோடு களம் காணும் தங்கர் பச்சான் திரைத் துறையில் சிறந்த படைப்பாளி என்பதை யாரும் மறுப்பதிற்கில்லை. சமூகம் சார்ந்த பிரச்சனைகள், மண் சார்ந்த விளைச்சல்கள், இயற்கை பேரிடர் தொடர்பான தனது கருத்தையும் ஆணித்தரமாகவும், ஆதங்கத்தோடும் பதிவு செய்து, சமூக ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்த தங்கர் பச்சானுக்கு, அரசியலில் அதேவிதமான அணுகு முறை கை கொடுக்குமா என்பது எதிர்வரும் தேர்தல் பிரச்சாரத்தில் எதிரொலிக்கும் என்பது திண்ணம்.
மேலும், காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் அன்புமணியின் மைத்துனர் விஷ்ணு பிரசாத்தை, தங்கர் பச்சானைக் காட்டிலும், பாமக தலைவர் அன்புமணி எதிர்கொள்ளும் விதம் சற்று கடுமையாகவே இருக்கிறது.மச்சானை விட பச்சானே என தேர்தல் பிரச்சார மேடைகளில் முழுங்கும் அன்புமணி, எனது மச்சான் டெபாசிட் இழக்க வேண்டும் என ஆக்ரோஷமாக பேசிவருவது, தங்கர் பச்சானுடன் தேர்தல் பிரச்சாரம் செல்லும் பாமகவினருக்கு புதுத் தெம்பை அளித்திருக்கிறது.
அதே நேரத்தில் விஷ்ணு பிரசாத்தும், தேர்தல் களத்தில் மச்சானவாது மாமனாவது என்ற தொனியில் வாக்கு சேகரித்து வருகிறார். வெள்ளித் திரை என்ற அஸ்திரத்தோடு களமிறங்கிய தங்கர் பச்சான், அதே பார்வையோடு தேர்தல் பிரச்சாரத்திலும் தனக்கு வெளிச்சம் காட்ட முயன்று, ஒரு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். இரு தினங்களுக்கு முன் பிரச்சாரத்தின் போது மக்களோடு மக்களாக ஒருங்கிணையும் தங்கர் பச்சான், சாலையோர கிளி ஜோசியரிடம் ஜோசியம் பார்த்துள்ளார்.
அது தொடர்பான வீடியோவும் வைரலான நிலையில், விழித்துக் கொண்ட வனத் துறை, வனத் துறை சட்டப்படி வன உயிரினங்களை கூண்டில் அடைத்து ஜோசியம் பார்ப்பது எனக் கூறி ஜோசியர் செல்வராஜை கைது செய்துள்ளது. தேர்தல் நடத்தை விதி ஒரு புறம் என்றாலும் சமூகக் கண்ணோட்டம் கொண்ட தங்கர் பச்சானுக்கு, வன உயிரின சட்டம் குறித்த தகவலர் அறியாமல் இருந்தாரா அல்லது தெரிந்தே செய்தாரா என்பது புரியாத புதிர்.
2019 தேர்தலில் திமுகவும், அதிமுக கூட்டணியில் பாமகவும் நேரடியாக மோதியபோது, 10,43,202 பதிவான வாக்குகளில், 1,43,983 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் வெற்றி பெற்றார். தற்போது கடலூர் தொகுதியில் சற்றேறக்குறைய 14,01,392 வாக்காளர்கள் உள்ள நிலையில், தமிழ் தேசிய உணர்வாளர்ளோடும், பாட்டாளிகளின் துணையோடு களமிறங்கியுள்ள படைப்பாளி தங்கர் பச்சானின் பலம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT