Published : 09 Apr 2024 11:26 AM
Last Updated : 09 Apr 2024 11:26 AM
மதுரை: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.
தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாமக்கல், திருவாரூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு நேற்றிரவு மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் தங்கினார்.
இதனையடுத்து இன்று காலை உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தரிசனம் செய்ய வருகை தந்தார். கோயிலுக்கு வருகை தந்த அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது.
மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்ற பின்னா் முக்குறுணி விநாயகரை தரிசனம் செய்த பின்னர் மீனாட்சி அம்மன் சன்னதியிலும் சுந்தரேஸ்வரர் சன்னதிக்கும் சென்று சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்டார். பின்னர் கோயிலில் உள்ள பொற்றாமரை குளத்தின் முன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்
முன்னதாக அமைச்சரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக அஷ்டசக்தி மண்டபம் வழியாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், அமைச்சர் தங்கிய தங்கும் விடுதியில் இருந்து கோயில் வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டதோடு கோயிலை சுற்றிய பகுதிகளிலும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு முழுமையான கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டது.
மீனாட்சி அம்மன் கோயிலில் 30 நிமிட சாமி தரிசனம் முடித்த பின்னர் மதுரை விமான நிலையத்துக்கு அமைச்சர் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலமாக அசாம் புறப்பட்டுச் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT