Published : 09 Apr 2024 11:10 AM
Last Updated : 09 Apr 2024 11:10 AM
புதுச்சேரி: புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் முதல் முறையாக மலரும் முனைப்பில் பாஜகவும், மீண்டும் தன் பலத்தை நிரூபிக்க காய் நகர்த்தும் காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன.
பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட புதுவை யூனியன் பிரதேசமாக உருவெடுத்தது. 1962-ல்தான் அதிகாரபூர்வமாக இந்தியாவுடன் இணைந்தது. அதன்பிறகு 1963-ம் ஆண்டு முதல் புதுவை மக்களவைத் தொகுதிக்கும், சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடந்து வருகிறது. புதுச்சேரியில் இதுவரை நடந்த 15 மக்களவைத் தேர்தல்களில் 11 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
1963, 1967, 1971 ஆகிய 3 தேர்தல்களில் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி பெற்றது. அதன்பின் 1980, 1984, 1989, 1991, 1996 என 5 முறை தொடர்ச்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றது. பின்னர் 1999, 2009, 2019 ஆகிய தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுக, பாமக, என்ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. இதனால் புதுவை காங்கிரஸின் கோட்டையாகவே திகழ்ந்தது. .
கடந்த 2019ல் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் பேரவைத் தலைவராக இருந்த வைத்திலிங்கம் பதவியை ராஜினாமா செய்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தற்போது சிட்டிங் எம்பியாக உள்ளார். அவர் மீண்டும் 2வது முறையாக மக்களவைத் தேர்தலில் களத்தில் இறங்கியுள்ளார். அதேநேரத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸில் பெரும் பிளவு ஏற்பட்டது. அமைச்சராக இருந்த நமச்சிவாயம், கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார்.
அவருடன் சேர்ந்து காங்கிரஸில் இருந்த பல்வேறு பிரிவுகள், அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் வெளியேறினர். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. தற்போது காங்கிரஸுக்கு புதுவை லாஸ்பேட்டை தொகுதி, மாஹே தொகுதி ஆகியவற்றில் மட்டுமே 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியில் அடித்தளம் வரை கட்டமைப்பு உள்ளது.
தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் அனைத்து தொகுதியிலும் உள்ளனர். கூட்டணி கட்சியான திமுகவுக்கு 6 எம்எல்ஏக்கள் பலமும் உள்ளது. இதோடு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து புதுவை மீண்டும் காங்கிரஸின் கோட்டை என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. தங்களுக்கு சாதகமாக உள்ள சிறுபான்மையினர், பட்டியல் இனத்தவர்கள் வாக்குகள் முழுமையாக கிடைக்கும் என காங்கிரஸ் நம்புகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட என்ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை விட சுமார் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் வைத்திலிங்கம்.
தற்போது ஆட்சியில் உள்ள பாஜக - என்ஆர்.காங்கிரஸ் கூட்டணி அதிக எம்எல்ஏக்கள் பலத்தோடு இருந்தாலும், மீண்டும் தன்பலத்தை நிரூபிக்க காய் நகர்த்தி காங்கிரஸ் பணியாற்றி வருகிறது.
முதல் முறையாக மலருமா?: புதுவை மக்களவைத் தொகுதியில் இதுவரை பாஜகவின் தாமரை மலர்ந்ததே இல்லை. ஆரம்பகால கட்டத்தில் எந்த கூட்டணியிலும் இடம்பெறாமல், பாஜக தனித்து போட்டியிட்டது. அப்போதெல்லாம் சொற்ப எண்ணிக்கையிலான வாக்குகளை மட்டும்தான் பெற்றது. 1999ல் திமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றது. அப்போது கூட்டணியில் பாமக வேட்பாளர் புதுவையில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
2004ல் அதிமுக - பாஜக கூட்டணி உருவானது. இந்த கூட்டணி சார்பில் புதுவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக லலிதா குமாரமங்கலம் போட்டியிட்டார். அவர்தான் கணிசமான வாக்குகளை பெற்று டெபாசிட் பெற்றார். இதன்பிறகு 2009ல் பாஜக கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டது. பாஜக வேட்பாளர் விஸ்வேஸ்வரன் 13 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றார். 2014-ல் தேமுதிக, மதிமுக, பாமகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணியில் புதுவை தொகுதியில் பாமக போட்டியிட்டு, தோல்வியடைந்தது.
2019 மக்களவைத் தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணியில் என்ஆர்.காங்கிரஸ் போட்டியிட்டது. என்ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். தமிழகத்தின் நுழைவுவாயிலாக புதுவையை பாஜக கருதுகிறது. அதனால் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றியை பதிவு செய்ததுபோல் தற்போது மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு கட்சியை புதுச்சேரியில் அடிமட்டம் வரை கொண்டுசெல்ல வேண்டும் என முடிவெடுத்துள்ளது.
இதற்கு சரியான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதில் பாஜக தலைமை உறுதியாக இருந்தது. உள்துறை அமைச்சராக உள்ள நமச்சிவாயம் முதலில் போட்டியிட மறுப்பு தெரிவித்தாலும், பாஜக மேலிடம் நேரடியாக தலையிட்டு அவரை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளது. தற்போது என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியும், பாஜகவுக்கு ஆதரவு தரும் எம்எல்ஏக்களையும் சேர்த்து 25 எம்எல்ஏக்கள் (என்.ஆர்.காங்கிரஸ் - 10 எம்எல்ஏக்கள்; 3 சுயேச்சைகள் ஆதரவு; பாஜகவுக்கு 6 எம்எல்ஏக்கள், 3 சுயேட்சைக்கள் ஆதரவு, நியமன எம்எல்ஏக்கள் 3 பேர்) பலமும் உள்ளது.
அதோடு பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த நமச்சிவாயம் போட்டியிடுகிறார். ஆட்சியின் செல்வாக்கை நிரூபிக்க முதல்வர் ரங்கசாமியும், தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதிருப்தியாளர்களையும் வீடு தேடி சென்று சந்தித்து நமச்சிவாயம் ஆதரவை கோரி வருகிறார். இதனால் பாஜக தரப்பானது தாமரையை புதுச்சேரியில் மலர வைக்கும் அளவில் பணியாற்றுகின்றனர்.
தேசியக் கட்சிகள் நேரடியாக முழுவீச்சில் தேர்தல் பணியாற்றத் தொடங்கியுள்ளதுடன் நாள்தோறும் உள்ளூர் பிரச்சாரங்களைத் தாண்டி, தொலைவிலுள்ள பிராந்தியங்களுக்கு விமானத்தில் பறந்தும் வாக்குகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளதால் எக்கட்சி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT