Published : 09 Apr 2024 05:46 AM
Last Updated : 09 Apr 2024 05:46 AM
புதுடெல்லி: அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுவசதி வாரிய மனை ஒதுக்கீடு தொடர்பான சிறப்பு நீதிமன்றவழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-11 திமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சராக பதவி வகித்ததற்போதைய அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலரான கணேசன் என்பவருக்கு முறைகேடாக நொளம்பூர் பகுதியில் வீட்டு மனை ஒதுக்கீடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதனடிப்படையில் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புபோலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் இருந்துஐ.பெரியசாமியை விடுவித்து கடந்தஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் விதமாக தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ், இந்த வழக்கில்இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். அத்துடன், இந்த வழக்கை வரும் ஜூலை மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பி.கே.மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி: அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபில், ‘‘அமைச்சராக பதவி வகித்த ஒருவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்கும் அதிகாரம் பேரவைத் தலைவருக்கு கிடையாது. இதுதொடர்பாக ஆளுநரிடம் முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், ஆளுநரின் முன்அனுமதியின்றி அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக இந்த வழக்கை போலீஸார் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதிவு செய்துள்ளனர்.
இது சட்டவிரோதமானது. அதன்காரணமாகவே இந்த வழக்கில்இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து ஜூலைக்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதிகள், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான இந்த வழக்கை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து முடிக்கும் வரை, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT