Published : 09 Apr 2024 05:03 AM
Last Updated : 09 Apr 2024 05:03 AM

அகர வரிசைப்படி வாக்காளர் பட்டியல்; பெயரை சிரமமின்றி கண்டுபிடிக்கலாம்: சத்யபிரத சாஹு தகவல்

சென்னை: வாக்குச்சாவடி உதவி மையத்தில் அகர வரிசைப்படியான வாக்காளர் பட்டியல் வைக்கப்படுவதால், வாக்காளர்கள் தங்கள் பெயரை சிரமமின்றி கண்டுபிடிக்க முடியும் என்று தமிழக தலைமைதேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வருமான வரித் துறையின் சிறப்பு குழு விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பணியாற்றும் தேர்தல் பணியாளர்களுக்கான முதல்கட்ட பயிற்சி மார்ச் 24-ம் தேதி அளிக்கப்பட்டது. 2-ம் கட்ட பயிற்சி கடந்த 7-ம் தேதி வழங்கப்பட்டது. அடுத்தகட்ட பயிற்சி ஏப்.18-ம் தேதி வழங்கப்படும். இதற்கிடையில் தேவைப்படும் பகுதிகளில் கூடுதல்பயிற்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் பணியாளர்களுக்கு தாங்கள் வசிக்கும் சட்டப்பேரவை தொகுதிக்குள் பணி வழங்கப்பட்டால், இடிசி எனப்படும் பணியாற்றும் வாக்குச்சாவடியிலேயே மின்னணு வாக்குப்பதிவு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. வேறு தொகுதி என்றால் தபால் வாக்கு வசதி வழங்கப்பட்டுள்ளது.

வாக்காளர் தகவல் சீட்டை (‘பூத் சிலிப்’) பொருத்தவரை, காலை 11 மணிநிலவரப்படி, 6.23 கோடி வாக்காளர்களில் 33.46 சதவீதம் அதாவது, 2 கோடி 8 லட்சத்து 59,559 பேருக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஏப்.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டுவிடும்.

வாக்குச்சாவடி குறித்த குழப்பங்கள்இருந்தால், வாக்காளர் உதவி செயலியில் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து, பாகம் எண் உள்ளிட்ட விவரங்களை பெறலாம். வாக்காளர் பட்டியலில் பெயரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால், வாக்குச்சாவடியில் உள்ள உதவி மையத்தில், அகர வரிசைப்படியான வாக்காளர் பட்டியல் இருக்கும். அங்குள்ள அலுவலர் அதைபார்த்து வாக்குச்சாவடி தொடர்பான தகவல், பாகம் எண் உள்ளிட்ட விவரங்களை தருவார்.

தாம்பரத்தில் ரூ.4 கோடி பணம்பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், வருமான வரித்துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிப்பார்கள். பொதுவாக ரூ.10 லட்சம்என்றால் வருமான வரித் துறை விசாரிக்கும். ரூ.1 கோடிக்கு மேல், வருமான வரித்துறை சிறப்பு குழுவினர் விசாரணை நடத்தி, தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிப்பார்கள். தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

குறிப்பாக இந்த விவகாரத்தில் தேர்தல் செலவின பார்வையாளர், மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் கவனம் செலுத்தி, விரிவான முழு தகவலுடன் கூடிய விசாரணை அறிக்கை பெற்று தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்து விசாரணை நடத்துவார்கள்.

கடந்த தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்த நகரங்களின் தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் அழைத்து, வாக்குப்பதிவை அதிகரிக்க தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக பல்வேறுஅறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

வாக்குச்சாவடிகளில் பொதுமக்களுக்கான குறைந்தபட்ச வசதிகளான சாமியானா பந்தல், இருக்கை, குடிநீர், கழிவுநீர் வசதிகள் 100 சதவீதம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் வசதிகள் அடிப்படையில் இவற்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள வசதி இல்லாத பள்ளிகள் உள்ளிட்ட வாக்குச்சாவடி அமைவிடங்களில், பொதுப்பணித் துறை சார்பில் தேர்தலுக்கு 3 நாட்கள் முன்னதாக தற்காலிக சாய்தள அமைப்பு உருவாக்கப்படும். தற்காலிக கழிப்பறை உள்ளிட்ட வசதிகளைஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறை செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மின் வசதி உள்ளிட்ட சிலவற்றுக்கு தேர்தல் துறையால் ரூ.1,300 வழங்கப்படும். சாமியானா போன்றவற்றுக்கு உள்ளாட்சி நிதியில் இருந்து பணம் எடுக்கப்படும். பின்னர், தேர்தல் ஆணையம் அந்த நிதியை வழங்கும்.

பெரம்பலூரில் ஒரு நுண்பார்வையாளர், ஒடிசாவை சேர்ந்த துணை ராணுவப் படை வீரர், நாமக்கல்லில் ஒரு தேர்தல் பணியாளர் என தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தது தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் குடும்பத்துக்கான நிவாரண நிதியை ஆணையம் உடனடியாக வழங்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரூ.208 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்: தமிழகத்தில் ஏப்ரல் 7-ம் தேதி காலை 9 மணி நிலவரப்படி, தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் ரொக்கமாக ரூ.59.39 கோடி, வருமான வரித் துறையினர் ரூ.28.72 கோடிக்கும் அதிகமாக என ரூ.88.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, ரூ.99.38 கோடி தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள், ரூ.4.53 கோடி மதுபானங்கள், ரூ.15.49 கோடி பரிசுப் பொருட்கள், ரூ.87 லட்சம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் என மொத்தம் ரூ.208.41 கோடி மதிப்பில் ரொக்கம், பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஏப்.19-ல் வாக்குப்பதிவு முடிந்தாலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4 வரை நடத்தை விதிகள் அமலில் இருக்கும். அருகில் உள்ள மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால், ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக பணம், பொருட்கள் கொண்டு செல்லப்படும் பட்சத்தில் பறிமுதல் தொடரும். அதேநேரம், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ குழு எண்ணிக்கை குறைக்கப்பட்டு, தொகுதிக்கு தலா ஒரு குழு பணியமர்த்தப்படும் என்று சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x