Published : 09 Apr 2024 04:08 AM
Last Updated : 09 Apr 2024 04:08 AM

தாமதமாக தொடங்கினாலும் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க கூடாது: தேர்தல் ஆணையம் கண்டிப்பான உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்

மதுரை: ‘‘சில காரணங்களால் வாக்குப்பதிவு தாமதமாகத் தொடங்கினாலும் மாலையில் வாக்குப்பதிவு நேரத்தை எக்காரணம் கொண்டும் நீட்டிக்கக் கூடாது’’ என்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களாக நியமிக்கப்பட்டோருக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப் பித்துள்ளது. அதன் விவரம் வருமாறு: வாக்குச் சாவடியின் அனைத்து நிகழ்வுகளுக்கும் பொறுப்பு அதிகாரி, சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி தலைமை அலுவலரே ஆவார். அதனால், வாக்குச் சாவடியின் தலைவர் என்ற அடிப்படையில் அவர்கள் கடமைகளை மட்டும் தெரிந்து கொள்ளாமல், தனக்குக் கீழ் பணிபுரியும் மற்ற வாக்குப் பதிவு அலுவலர்களின் கடமைகளையும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்

வாக்குச் சாவடியில் மின் இணைப்பு உள்ளதா? குடிநீர் வசதிகள், மாற்றுத் திறனாளிகள் வர சாய்வு தளம் போடப்பட்டுள்ளதா? போன்றவற்றைப் பார்த்து தகவல் சொல்ல வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடி களில் வெப் கேமரா அமைக்கப் பட்டிருக்கும். அதனால், வாக்குச் சாவடியில் நிகழும் அனைத்தையும் தேர்தல் ஆணையத்தில் இருந்தே நேரடியாக கண்காணிப்பார்கள் என்பதால் தனிக் கவனத்துடன் செயல்பட வேண்டும் வாக்குப் பதிவு நாளன்று வாக்குப் பதிவு தொடங்குவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக மாதிரி அல்லது ஒத்திகை வாக்குப் பதிவை நடத்த வேண்டும்.

காலை 7 மணிக்கு வாக்குப் பதிவைத் தொடங்க வேண்டும். சிறுசிறு காரணங்களால் சற்று தாமதமானாலும் அதற்காக வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கக் கூடாது. வாக்குப் பதிவை மாலை 6 மணிக்கு முடிக்க வேண்டும். அதனால், 6 மணிக்கு வரிசையில் நிற்கும் கடைசி வாக்காளரிடம் இருந்து டோக்கன் வழங்குவதை ஆரம்பித்து முதலில் நிற்பவர் வரை வழங்கி அனைவரையும் வாக்களிக்கச் செய்ய வேண்டும். டோக்கன் வழங்கிய பிறகு வருவோரை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x