Published : 08 Apr 2024 10:46 PM
Last Updated : 08 Apr 2024 10:46 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ரயில் நிலையம், ஓசூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேசினார்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து, திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், வேனில் இருந்தபடியே பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: இன்று சென்னையில் ஐபிஎல் மேட்ச் நடக்கிறது. மணியும் ஒன்பதை நெருங்கிவிட்டது. அதனால் கூட்டம் குறைவாக இருக்கும் என நினைத்து கிருஷ்ணகிரிக்கு வந்தேன். இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்தால், கடந்த மக்களவைத் தேர்தலில், 1.56 லட்சம் ஓட்டுகளை விட கூடுதலாக 1.5 லட்சம் ஓட்டுகள் பெற்று, 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்பது தெரிகிறது. வாக்குபெட்டியில் நீங்கள் போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு.
இந்திய மக்களுக்கே துரோகம்: பழனிசாமி சசிகலாவிற்கு பச்சை துரோகம் செய்து முதலமைச்சர் ஆனார். இதே போல் பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய மக்களுக்கே துரோகம் செய்தார். ஆனால், நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் ஆதரவுடன் பொறுப்பேற்றபோது, கரோனா பெருந்தொற்று அதிகம் இருந்ததை கட்டுக்குள் கொண்டு வந்தார்.
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைத்தும், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தையும் கொண்டு வந்தார். இந்த கட்டணமில்லா பேருந்து திட்டத்தை கர்நாடகா மாநிலத்திலும் பின்பற்றுக்கிறார்கள். பெண்கள் தான் பேருந்துகளின் உரிமையாளர்கள்.
மேலும், 2014-ல் மோடி ஆட்சிக்கு வரும் முன்பு சிலிண்டர் விலை ரூ.450 ஆக இருந்தது. இன்று ரூ.1000-த்தை தாண்டி விட்டது. இப்போது தேர்தல் நேரத்தில் சிலிண்டர் விலையை குறைத்து மோடி மக்களை ஏமாற்றுகிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும். பெட்ரோல் லிட்டர் ரூ.75-க்கும் டீசல் ரூ.65-க்கும் வழங்கப்படும். நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் அகற்றப்படும்.
எருதுவிடும் விழா வழக்குகள் ரத்து: ஓசூர் அரசு மருத்துவமனை ரூ.100 கோடியில் மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு பணிகள் நடக்கிறது. ரூ.233 கோடியில் எண்ணேகொள் திட்டம் பணிகள் நடக்கிறது. இதே போல் ஓசூரில் ரூ.50 கோடியில் புதிய பேருந்து நிலையம், ரூ.575 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் உள் வட்ட சாலை என பல்வேறு பணிகள் நடக்கிறது.
இந்த தேர்தல் வாக்குறுதிகளாக ஓசூரில் விமான நிலையம், கிருஷ்ணகிரி ரயில் நிலையம், ஓசூர் கிருஷ்ணகிரி ஜோலார்பேட்டை திட்டம், சென்னைக்கு கிருஷ்ணகிரிக்கு வழியாக ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படும். வால்மீகி சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் எருது விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்படும். எருது விடும் விழா தொடர்பாக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும்.
தகுதியான மகளிருக்கு விரைவில் கிடைக்கும்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகளிர் இலவச பேருந்து பயணத்தில் 11 கோடி முறை மகளிர் பயணம் செய்துள்ளனர். புதுமை பெண் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் மாணவியருக்கு கிடைக்கிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
கர்நாடக மாநிலம், தெலங்கானா மாநிலம் பின்பற்றுகிறது. கனடா பிரதமர் இதை பற்றி பேசி பின்பற்றுகிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 84 ஆயிரம் மாணவர்கள் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகின்றனர். அதேபோல மகளிர் உரிமைத்தொகை, தமிழகத்தில் 1.16 கோடி பேரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 3 லட்சம் பேரும் மகளிர் உரிமைத் தொகை பெறுகின்றனர். தகுதியுள்ள அனைவருக்கும் இது விரைவில் கிடைக்கும்.
கல்லை மீண்டும் ஒப்படைப்பேன்: எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா 2019 ஜன.27 அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை கட்டவில்லை. அடிக்கல் நாட்டப்பட்ட ஒரு கல்லை நான் எடுத்துவந்துவிட்டேன். மருத்துவனை கட்டியபிறகு இந்த கல்லை நான் ஒப்படைப்பேன். ஆனால் பாஜக ஆளும், 6 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிவிட்டனர்.
தற்போது தேர்தல் வந்தவுடன் தமிழகம் அக்கறை இருப்பதை போல் காட்டி கொண்டு ஓட்டு கேட்டு வருகிறார். அவர்களது ஏமாற்று வேலைகளை நம்பாமல், கிருஷ்ணகிரி உட்பட, 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். நாங்கள் சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT