Published : 16 Apr 2018 08:20 AM
Last Updated : 16 Apr 2018 08:20 AM
ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் சென்னை விமான நிலையத்தை ரூ.2,476 கோடியில் நவீனப்படுத்த இந்திய விமான நிலையங்கள் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை விமான நிலையம், பயணிகள் பயன்பாடு அடிப் படையில் தேசிய அளவில் டெல்லி, மும்பைக்கு அடுத்த படியாக 3-வதாகவும், ஆசிய அளவில் 49-வது பரபரப்பான விமான நிலையமாகவும் விளங்குகிறது. இதை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் சார்பில் நவீனப்படுத்துவதற்கான முதல் திட்டப் பணிகள் கடந்த 2012-ம் ஆண்டு நிறைவடைந்தது.
இந்த விமான நிலையத்தின் துரித வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அதை நவீனப்படுத்துவதற்கான 2-ம் திட்டப் பணிகளை ரூ.2,476 கோடியில் தொடங்க இந்திய விமானங்கள் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. திட்ட விரிவாக்கத்துக்கான அனுமதி கோரி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பித்துள்ளது. அந்த விண்ணப்பத்துடன் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய் வறிக்கையில் கூறப்பட்டிருப்பதா வது:
இத்திட்டத்தில் மீனம்பாக்கத் தில் உள்ள பழைய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களை இடித்துவிட்டு, புதிய ஒருங்கிணைந்த முனையம் உருவாக்கப்படும். முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட ஒருங்கிணைந்த முனையம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 866 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும். ஒரே நேரத்தில் உள்நாட்டு முனையத்தில் 3 ஆயிரம் பயணிகள், பன்னாட்டு முனையத்தில் 4 ஆயிரம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக கட்டப்பட உள்ளது.
போதிய நிலம்
சென்னை விமான நிலைய நவீனமய திட்டம், தற்போதைய விமான நிலையத்தின் 1301.28 ஏக்கர் வளாகத்துக்குள்தான் செயல்படுத்தப்பட உள்ளது. ஒட்டுமொத்த நிலமும், இந்திய விமான நிலையங்கள் ஆணை யம் வசம் உள்ளதால், கூடுதலாக நிலம் கையகப்படுத்தத் தேவையில்லை.
விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்ட பிறகு, அங்கு நீர் தேவை நாளொன்றுக்கு 4.1 மில்லியன் லிட்டராக இருக்கும். தேவைப்படும் நீர், நகராட்சி நிர்வாகத்திடம் இருந்தும், கழிவுநீரை மறுசுழற்சி செய்வதன் மூலமும், விமான நிலையத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் இருந்தும் பெறப்படும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
இத்திட்டத்தை செயல்படுத்தும் போது சிறு அளவிலான, தற்காலிகமான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதைச் சீரமைக்கும் பணிகளுக் காக ரூ.49 கோடியே 52 லட்சம் செலவிடப்பட உள்ளது.
இவ்வாறு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நெருக்கடி குறையும்
பல அடுக்கு வாகன நிறுத்தம், ஒருங்கிணைந்து பொதுப்பயன் சரக்கு வளாகம் தொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
இத்திட்டம் முடிவுக்கு வரும்போது விமான போக்கு வரத்து அதிகமாக உள்ள நேரங்களில் (பீக் ஹவர்) உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் மற்றும் குடியேற்றத் துறை உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் நெருக் கடி குறையும். இத்திட்டத்தால் நேரடியாகவும், மறைமுகமாக வும் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றனர்.
கருத்து கேட்புக் கூட்டம்
திட்டப் பணிகள் பம்மல், பழவந்தாங்கல், பொழிச்சலூர், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அப் பகுதிவாழ் பொதுமக்களிடம் ஏப்ரல் 25-ம் தேதி காலை 11 மணிக்கு, விமான நிலையத்தில் கருத்து கேட்புக் கூட்டம் நடை பெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT