Published : 08 Apr 2024 07:51 PM
Last Updated : 08 Apr 2024 07:51 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு, வழங்கப்பட்ட மாற்று இடத்தை அளவீடு செய்து பட்டா வழங்காமல் 70 ஆண்டுகளாக அலைகழிப்பதாகக் கூறி மக்களவை தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னமுத்தூர் ஊராட்சியில் கடந்த 1952-ம் ஆண்டிற்கு முன்பு, தென்பெண்ணை ஆறு பாயந்தோடும் பகுதியில் வசித்து வந்த மக்கள் மானவாரி பயிர்களும், நெல்சாகுபடியும் செய்து வந்தனர். அப்பகுதியில் அரசு, அணைகட்ட முடிவு செய்தபோது, அங்கு விவசாயம் செய்து குடியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட கிராம மக்களுக்கு சோக்காடி, உஸ்தலஅள்ளி, நெல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வனத்தை ஒட்டி நிலங்கள் அளிக்கப்பட்டது. இதில், 75 குடும்பத்தினர் ஆலப்பட்டி வன வட்டாரம் சோக்காடி ஊராட்சியில் மலை மீது இடம் ஒதுக்கீடு பெற்றனர். அவ்வாறு வழங்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கிராம மக்கள் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ''கிருஷ்ணகிரி அணை கட்டும்போது எங்கள் முன்னோர்கள் நிலம் கொடுத்தனர். எங்களுக்கு மாற்று இடமாக சோக்காடி ஊராட்சி ஜம்பூத்தில் இடம் கொடுத்தனர். ஆனால் எங்களுக்கு உரிய இடத்தை இதுவரை அரசு அளந்து கொடுக்கவில்லை.
இதுகுறித்து பல போராட்டங்களுக்கு பிறகு மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில், கிருஷ்ணகிரி வன நிர்ணய அலுவலர் இளங்கோ, நிலத்தை அளவீடு செய்ய முன்வந்தார். ஆனால், எங்கள் கிராமத்திற்கு நேரில் வந்தவர், நிலத்தை அளந்து கொடுக்க மாட்டேன், அணை கட்ட யார் நிலம் கொடுத்தீர்களோ அவர்களுக்கு மட்டுமே நிலத்தை அளந்து கொடுப்பேன். அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கும் சொத்தை பகிர்ந்து கொண்டாலும், பட்டா வழங்க மாட்டேன். நிலத்தையும் அளந்து கொடுக்க மாட்டேன்.
நீங்கள் அனைவரும் எனக்கு தெரிந்த சுப்பிரமணி என்பவரை சென்று பாருங்கள். அவர் மூலம் என்னை வந்து பாருங்கள். அப்போதுதான் நிலத்தை அளந்து கொடுப்பேன் என தெரிவித்தார். ஆனால் அவர் குறிப்பிட்ட சுப்பிரமணி என்பவர் ஒரு புரோக்கர். மேலும் வன நிர்ணய அலுவலர், எங்களின் ஜிபிஎஸ் இயந்திரம் பழுதாகி விட்டது என்றும், தனியாக வேறு ஒரு ஜிபிஎஸ் இயந்திரத்தை கொண்டு வாருங்கள். அப்புறம் நிலத்தை அளந்து கொடுக்கிறேன் என்றார்.
சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் கடந்தும், அணைக்கு நிலம் கொடுத்து 70 ஆண்டுகள் கடந்தும் இதுவரை எங்களுக்கு நிலத்தை அளந்து கொடுக்கவில்லை. அடிப்படை வசதியும் செய்துதரவில்லை. எனவே வன நிர்ணய அலுவலரை மாற்றி எங்களுக்கு வாழ்வளிக்க ஆவண செய்யும் வரை இந்த மக்களவைத் தேர்தலை புறக்கணிப்போம்.
சோக்காடி ஊராட்சியில் ஜம்பூத்து, குள்ளன்கொட்டாய், கெடிவெங்கட்டராமன் கோவில் கொட்டாய், ஆலமரத்து கொட்டாய், சின்னகுட்டபைல், பாறக்கொட்டாய், பூபதி கொட்டாய், நரசிம்மன் கொட்டாய் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. நாங்கள் அனைவரும் இந்த தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT