Published : 08 Apr 2024 05:06 PM
Last Updated : 08 Apr 2024 05:06 PM

“ஒரு சதி வலையில் நயினார் நாகேந்திரன் பெயர்...” - அண்ணாமலை விளக்கம் @ ரூ.4 கோடி பறிமுதல்

கோவை சரவணம்பட்டி பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை: “பிடிப்பட்ட பணம் குறித்து பறக்கும்படை, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கட்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஒரு பிரச்சினையும் இல்லை. நயினார் நாகேந்திரன் தனிப்பட்ட முறையில் ‘சம்பந்தம் இல்லை’ என்று கூறிய பிறகு, எதிர்க்கட்சியினர் இதை வைத்து அரசியல் செய்து வருகின்றனர்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் ரூ.4 கோடி பிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளது தொடர்பாக கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “இது தொடர்பாக நெல்லை பாஜக வேட்பாளரும், எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் பதிலளித்திருக்கிறார். ஒரு சதி வலையில் நயினார் நாகேந்திரனின் பெயர் சொல்லப்பட்டிருக்கிறது. ‘எனக்கும், அந்தப் பணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்று நயினார் நாகேந்திரன் சொல்லிய பிறகு, அதற்குமேல் அது குறித்து பேசுவதற்கு ஒன்றும் இல்லை.

பிடிப்பட்ட பணம் குறித்து பறக்கும்படை, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கட்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஒரு பிரச்சினையும் இல்லை. நயினார் நாகேந்திரன் தனிப்பட்ட முறையில் ‘சம்பந்தம் இல்லை’ என்று கூறிய பிறகு, எதிர்க்கட்சியினர் இதை வைத்து அரசியல் செய்து வருகின்றனர்” என்றார்.

அப்போது பாஜக சம்பந்தப்பட்ட 20 வேட்பாளர்களின் வீடுகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருப்பது, தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “அதாவது, திருடன் ஒருவன் ஒரு வீட்டில் திருடும்போது, போலீஸார் அந்த வீட்டை நோக்கி செல்வார்கள். திருடன் உடனே திருடிய வீட்டிலிருந்து வெளியே வந்து திருடன் திருடன் என்று சப்தமிடுவான். போலீஸ் வீட்டுக்குள் சென்று திருடனைத் தேடும்போது, திருடன் தப்பித்து ஓடியிருப்பான். அதுதான் திமுக.

தேர்தல் வரும்போது, திமுக செய்யக்கூடிய அனைத்து தவறுகளும்கூட, மக்கள், காவல் துறை, தேர்தல் ஆணையம் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திருடன் திருடன் என்று ஓடிக் கொண்டிருக்கிறார். ஆனால், உண்மையான திருடன் திமுக என்பது தெரியும். கோவையில், 85 வயதுக்கு மேற்பட்டோர் தங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு திமுக தங்கத் தோடு, ரூ.2,000 பணமும் வழங்குகின்றனர். எனவே, பணம் குறித்து பேசுவதற்கு ஒரு தார்மிக உரிமை இல்லாத கட்சி திமுகதான். ஆர்.எஸ்.பாரதியின் புகார் என்பது வீட்டில் இருந்து வெளியே வந்த திருடன் ஒருவன் காவல் துறையை குழப்புவதற்காக திருடன் திருடன் என்று சப்தமிடுவதைப் போல உள்ளது” என்றார்.

அப்போது முதல்வரின் கிரிக்கெட் மைதான வாக்குறுதி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கோவையின் புறநகர் மற்றும் மாநகரப் பகுதிகளில், பொதுமக்கள் பயன்படுத்தும்படியான விளையாட்டு மைதானங்களை உருவாக்கித் தருகிறோம் என்பது எங்களுடைய வாக்குறுதி. இதற்கு மக்கள் ஆதரவு தெரவிக்க ஆரம்பித்த பிறகு, முதல்வர் ஸ்டாலின் களத்துக்கு வந்திருக்கிறார். அவர் கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

ஆச்சரியம் என்னவென்றால், ஒரு மக்களவைத் தேர்தல் நடக்கும்போது, ஒரு மாநிலத்தின் முதல்வர் கோவைக்கு வந்து சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று கூறுகிறார். சர்வதேச கிரிக்கெட் மைதானம் தேவைதான். தமிழகத்தில் இன்னும் 4 சர்வதேச மைதானங்கள் தேவைதான். அந்தளவுக்கு பலரும் விளையாட்டில் ஆர்வம் காட்டுகின்றனர்.

முதல்வர் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு பதிலாக, கோவையின் சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது, அதற்கு பணம் கொடுக்கலாமே? 511 தேர்தல் வாக்குறுதிகளில் 20-ஐ கூட நிறைவேற்றவில்லை. கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்தால், மக்கள் வாக்களித்துவிடுவார்கள் என்று முதல்வர் இந்த வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார்” என்றார்.

இந்தியாவின் தலைநகரமாக நாக்பூரை பாஜக மாற்றப்போகிறது. எனவே, அந்த கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்று மநீம தலைவர் கமல்ஹாசன் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “மனநல மருத்துவமனைக்குச் சென்று மூளையை பரிசோதிக்க வேண்டும். அது கமல்ஹாசனாக இருந்தாலும் யாராக இருந்தாலும் சரி, மனநல மருத்துவனைக்குச் சென்று, உண்மையாக அவர்கள் நன்றாக உள்ளனரா? இடப்பக்கம், வலப்பக்கம் என இரண்டு பக்க மூளைகளுமே செயல்படுகிறதா? சுயநினைவுடன்தான் இருக்கின்றனரா? சரியாக உணவு உண்கின்றனரா? என்பதை பார்க்க வேண்டும்.

மேலும், கமல்ஹாசனை ஒரு நல்ல உளவியல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும். கமல்ஹாசன் உண்மையாகவே இப்படி பேசுகிறாரா, அல்லது தன்னுடைய கட்சியை திமுகவிடம் ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக விற்பதற்காக இப்படி பேசுகிறாரா என்பதை அவர்தான் தெளிபடுத்த வேண்டும்” என்று அண்ணாமலை கூறினார்.

தேர்தல் ஆணையம் தகவல்: இதனிடையே,ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக வருமான வரி சிறப்புக் குழு விசாரணை நடத்தும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். விசாரணை நடத்தப்பட்டு தேர்தல் செலவினப் பார்வையாளர் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். அதன் முழு விவரம்: ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக வருமான வரி சிறப்புக் குழு விசாரணை: சத்யபிரத சாஹு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x