Published : 08 Apr 2024 02:46 PM
Last Updated : 08 Apr 2024 02:46 PM

தெலுங்கு, கன்னட மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் யுகாதி வாழ்த்து

யுகாதி

சென்னை: யுகாதி திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின், பிற அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இன்று (திங்கள் கிழமை) முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் அவர்கள் கூறியிருப்பதாவது:

முதல்வர் ஸ்டாலின்: “தமிழ்நாட்டிலும், பக்கத்து மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த யுகாதி – புத்தாண்டுத் திருநாள் (9-04-2024) நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் வாழும் மொழிச்சிறுபான்மையினரின் நலனில் என்றுமே அக்கறையுடன் செயல்பட்டும் வரும் கழக அரசுதான் யுகாதி திருநாளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது.

வெவ்வேறு மாநிலங்களாக உள்ளபோதும், ஒரே மொழிக்குடும்பமாகவும், பொதுவான பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டவர்களாகத் தென்னிந்திய மக்களான நாம் திகழ்கிறோம். தனித்தன்மையை இழக்காமல், சகோதர உணர்வைப் பேணி வாழ்ந்து வருகிறோம். புத்தாடை, மாவிலைத் தோரணம், அறுசுவையும் கலந்த பச்சடியுடன் யுகாதி திருநாளை வரவேற்கும் உங்கள் வாழ்வில் புத்தாண்டு மகிழ்ச்சியை மலரச் செய்யட்டும்.” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை: “தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசுகிற, மொழி சிறுபான்மையினர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் மக்களோடு இரண்டறக் கலந்து தமிழை வாழ்வியல் மொழியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். சமீபகாலமாக மொழி சிறுபான்மையினர் மீது வெறுப்பை வளர்க்கிற வகையில் சிலர் செயல்பட்டு வருவது மிகுந்த வேதனையைத் தருகிறது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கப்பட்டாலும், மொழி சிறுபான்மையினர் எவ்வித பேதமுமின்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள். யுகாதி திருநாளில் ஜாதி, மத, துவேஷம் கலைந்து மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சி தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், இன்று யுகாதி பண்டிகை கொண்டாடும் மொழி சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பும், முக்கியத்துவமும் வழங்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்கிற தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் யுகாதி பண்டிகை நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்: “இந்தப் புத்தாண்டு, தென்னிந்திய மக்களின் உரிமைகள் மீட்கப்படும் ஆண்டாகவும், நமக்குரிய முறையில் வரிப்பகிர்வைப் பெறும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாகவும் அமையட்டும். தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டான யுகாதி திருநாளைக் கொண்டாடும் அந்த மொழிகளைப் பேசும் சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘‘முப்பது கோடி முகமுடையாள் - உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் - இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்’’ என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப தெலுங்கு பேசும் மக்களும், கன்னட மொழி பேசும் மக்களும் தமிழர்களிடமிருந்து மொழியால் வேறுபட்டு இருந்தாலும் சிந்தனையால் ஒன்றுபட்டவர்கள்; உடலால் வேறுபட்டாலும் உயிரால் ஒன்றுபட்டவர்கள். இதற்கு வாழும் எடுத்துக்காட்டு தமிழ்நாடு தான். தமிழ்நாடு மாநிலம் தான் மொழியாலும், பிற வகைப்பாடுகளாலும் வேறுபட்டவர்களை ஒன்றாக்கி ஒற்றுமையாக வாழச் செய்யும் மாநிலம் ஆகும்.

யுகாதி நாளில் தான் உலகம் பிறந்ததாக தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் உலகத்தை உருவாக்கிய யுகாதி நாள், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் தேவையான அனைத்து நலன்களையும், வளங்களையும் வழங்க வேண்டும். அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, சகோதரத்துவம், இன்பம், வளமை, நிம்மதி உள்ளிட்ட அனைத்தும் நிறைய வேண்டும் என்று கூறி வாழ்த்துகிறேன்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

டிடிவி தினகரன்: “யுகாதி திருநாளை புத்தாண்டாக உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் தங்களுடைய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பேணிக்காப்பதோடு, பல நூற்றாண்டாக தமிழ்நாட்டு மக்களோடு ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். கன்னட மற்றும் தெலுங்கு மக்கள் பேசும் மொழிகள் வெவ்வேறாக இருந்தாலும் தமிழக மக்களின் இன்ப, துன்பங்களில் பங்கேற்பதோடு, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் ஒருமித்த, ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்து வேற்றுமையில் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர்.

யுகாதி திருநாளில் மலரும் புத்தாண்டு தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுடனான தமிழக மக்களின் ஒற்றுமையும், நட்புணர்வும் தொடரும் ஆண்டாக அமைய வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x