Published : 08 Apr 2024 07:34 PM
Last Updated : 08 Apr 2024 07:34 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குகளை குறிவைத்து அரசியல் கட்சியினர் தேர்தல் களத்தில் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திர, கர்நாடக மாநில எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி மக்களில் பிரதானத் தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. இதனால், விவசாயம் சார்ந்த கூலித்தொழிலாளர்களும் இத்தொகுதியில் அதிகம் பேர் உள்ளனர்.
உள்ளூரை விட கூலி அதிகம்: இங்கு பருவ மழை பொய்க்கும் நேரங்கள் மற்றும் விவசாய கூலி வேலை கிடைக்காத நேரங்களில் அருகில் உள்ள ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலத்தில் விவசாயம் மற்றும் கட்டிடப் பணிகளுக்காகப் புலம்பெயர்வது அதிகரித்து வருகிறது. மேலும், தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் கட்டிடப் பணி, பனியன் கம்பெனிகள், பேக்கரிகள், தொழிற்சாலைகளில் பணிக்கு செல்வது அதிகரித்துள்ளது. உள்ளூரை விட வெளியூர், வெளிமாநிலத்தில் வேலை நேரம் குறைவு மற்றும் கூலியும் அதிகம் கிடைப்பதால், பலர் நிரந்தரமாகத் தங்கி பணிபுரிகின்றனர்.
மலைக் கிராம மக்கள்: மேலும் பல தம்பதிகள் தங்கள் குழந்தைகளை மட்டும் உள்ளூரில் நெருங்கிய உறவினர் களின் பாதுகாப்பில் விட்டு விட்டு வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் தங்கி பணிபுரிந்து வருகின் றனர். இவர்களில் மலைக்கிராம தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். அதே நேரம் இவர் களுக்கு ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அட்டை அனைத்தும் சொந்த ஊரில் உள்ளது.
இவ்வாறு புலம் பெயர்ந்தவர்கள் முக்கியமான பண்டிகைகள் மற்றும் கோயில் திருவிழாவுக்குச் சொந்த ஊருக்கு வருவது வழக்கம். அதேபோல தேர்தல் நேரத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் மீது அரசியல் கட்சியினரின் கவனம் திரும்பும். தொழிலாளர்களின் உறவினர்கள் மூலம் புலம் பெயர் தொழிலாளர்களைத் தொடர்பு கொண்டு தேர்தல் நேரத்தில் வாக்களிக்க சொந்த ஊருக்கு தொழிலாளர்களை அழைத்து வருவதும் உண்டு.
ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: தற்போது, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உட்பட 27 பேர் தேர்தல் களத்தில் உள்ள நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குகள் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே, புலம் பெயர் தொழிலாளர்களின் வாங்குகளைப் பெற அரசியல் கட்சியினர் தீவிர பணியில் ஈடுபட்டு ள்ளனர். அதன்படி 'ஒவ்வொரு வாக்கும் முக்கியம்' என்ற நோக்கத்துடன் அரசியல் கட்சியினர் வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் தங்கி பணிபுரியும் தொழிலாளர்களின் முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.
மேலும், அவர்களை செல்போன் மற்றும் வாட்ஸ் - அப் எண்ணில் தொடர்பு கொண்டு தாங்கள் சார்ந்த கட்சியின் வேட்பாளர்களுக்குத் தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி வருவதோடு, உள்ளூரில் அவர்களுக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தொழிலாளர்களின் வாக்குகளை தங்களுக்கு சாதகமாக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT