Published : 08 Apr 2024 10:12 AM
Last Updated : 08 Apr 2024 10:12 AM
வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து சென்னை ஓட்டேரியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: கட்சி தொடங்கிய நாளில் இருந்து வடசென்னைக்கு அதிக முறை வந்து செல்பவன் நான்.
என்னை போன்ற பலரின் கோரிக்கைக்கு இணங்க ரூ.1000 கோடி வடசென்னை வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. குடிசை மாற்று வாரியம் என்னும் வார்த்தையை கொண்டு வந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.
குடிசையெல்லாம் மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்து 40 ஆண்டுகளாகின்றன. அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் மத்தியிலோ வெளிநாடுகளில் இருந்து யாரேனும் வந்தால் குடிசை மறைப்பு வாரியம் என்பது போல் குடிசையை திரை போட்டு மறைத்து விடுகின்றனர்.
அந்த ஏழ்மை அவர்களால் வந்ததுதானே. இங்கு இருப்பதைபோல பெண்களுக்கு உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம் போன்றவை எத்தனை மாநிலங்களில் வழங்கப்படுகிறது என பார்க்க வேண்டும்.
குஜராத் மாடலில் இதெல்லாம் வழங்கப்படவில்லை. அவர்கள் 2050-ல் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்கை, தமிழகம் இப்போதே அடைந்துவிட்டது. ஊழல் என பேசுபவர்கள் தேர்தல் பத்திரம் என்னும் உலக மகா ஊழலை சட்டத்தை வளைத்து செய்திருக்கின்றனர். 10 ஆண்டுகாலம் நடந்த ஆட்சி டிரெய்லர்தான்.
மெயின் படம் போட காத்துக் கொண்டிருக்கின்றனர். உணவு, உடை உள்ளிட்டவற்றை அவர்கள் முடிவு செய்வார்கள். அது நடக்கக் கூடாது. இது மக்களுடன் ஒன்றாத அரசு. இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT