Published : 08 Apr 2024 09:51 AM
Last Updated : 08 Apr 2024 09:51 AM

கட்சி வேறுபாட்டை கடந்து பாசத்தை பகிர்ந்த திமுக, அதிமுகவினர்!

அமைச்சர் பெரியசாமியிடம் காலில் விழுந்து ஆசிபெற்ற முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகன் சதீஷ்.

திண்டுக்கல்லில் நடந்த பாஸ்கு திருவிழாவில் பங்கேற்க வந்த திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியிடம், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது மகனை காலில் விழுந்து ஆசிபெறச் செய்தார். இது இருவருக்கும் இடையிலான அரசியலையும் கடந்த நட்பை வெளிப்படுத்தியது. திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் புனித வியாகுல அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி பாஸ்கு திருவிழா நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் கலந்துகொள்ள நேற்று அமைச்சர் ஐ.பெரியசாமி, மார்க்சிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆர்.விசுவநாதன், எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் முகமது முபாரக் ஆகியோர் வந்திருந்தனர். அனைவரும் ஒன்றாக ஒரே இடத்தில் அமர்ந்து கட்சி பாகுபாடின்றி பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது மகன் சதீஷை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு அறிமுகப்படுத்தி, ‘பெரியப்பா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கு’ என்றார். அவரது மகன் சற்றே தயங்கி முழங்காலைத் தொட்டு வணங்கினார். ‘நன்றாக காலில் விழு’ என முன்னாள் அமைச்சர் கூறியதையடுத்து மீண்டும் அமைச்சர் ஐ.பெரியசாமியின் காலைத் தொட்டு ஆசிபெற்றார்.

பின்னர், அருகிலிருந்த திமுக மாவட்டச் செயலாளரும் ஐ.பெரியசாமியின் மகனுமான இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ.வை இது அண்ணன் என்றும், அருகில் இருந்த மேயர் இளமதியை அக்காள் என்றும் தனது மகனுக்கு திண்டுக்கல் சீனிவாசன் அறிமுகப்படுத்தினார். அப்போது, ‘இவனுக்குதான் சீட் வாங்கலாம் என்று இருந்தோம், அதற்குள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி விட்டனர்’ என அமைச்சர் ஐ.பெரியசாமியிடம், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

நத்தம் ஆர்.விசுவநாதனும் அமைச்சர் ஐ.பெரியசாமியும் கைகொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். திமுக, அதிமுக முக்கிய பிரமுகர்கள் கட்சி வேறுபாடின்றி ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது விழாவுக்கு வந்திருந்த மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x