Published : 08 Apr 2024 09:28 AM
Last Updated : 08 Apr 2024 09:28 AM
கோவை: கொடுப்பவர்களுக்கும், அதை தடுப்பவர்களுக்கும் நடக்கும் யுத்தம் தான் இந்த தேர்தல் என்று கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பேசினார்.
கோவை கணபதி உடையாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று கணபதி ராஜ்குமார் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மக்களவைத் தேர்தல் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். எதிரே நிற்கக்கூடிய சக்திகள், நாட்டை இன, மத ரீதியாக பிரித்து பிரச்சினையை ஏற்படுத்தி பத்தாண்டுகளாக ஆட்சி புரிந்து வருகின்றனர். எதுவும் செய்யாமல் பண வீக்கத்தை ஏற்படுத்தி, ஜிஎஸ்டி என்னும் சட்டத்தை கொண்டு வந்தது நம்மையெல்லாம் பாதிப்படையை செய்தது.
2014-க்கு முன்பு பன்முகம் கொண்டதாக, சிறு, குறு தொழிற்சாலைகள், பெரும் தொழிற்சாலைகள் என்று பணப் புழக்கத்துடன் செல்வச் செழிப்புடன் கோவை இருந்தது. அத்தகைய கோவையை மீட்டெடுக்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். நான் இந்த பகுதியைச் சேர்ந்தவன். நான் இங்கேயே தான் இருக்கப் போகிறேன். முதல்வர் சொன்னது மக்களுக்குள்ளே மக்களாக இருக்க வேண்டும். என்னென்ன தேவை, என்ன குறைகளோ அதையெல்லாம் கேட்டு தெரிந்து செயல்படுத்த வேண்டும் என்று என்னை அனுப்பி வைத்திருக்கிறார். வெளியூரிலிருந்து வருவார்கள், போவார்கள். அவர்கள் சொல்லும் பொய் பிரச்சாரம், பொய் செய்திகளை இளைஞர்கள் யாரும் நம்பக் கூடாது.
ஒன்றும் செய்யாமலே செய்தது போல பாஜகவினர் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. கொடுப்பவர்களுக்கும், அதை தடுப்பவர்களுக்கும் நடக்கும் யுத்தம் தான் இந்தத் தேர்தல். மகளிருக்கு உரிமைத் தொகை, விடியல் பயணம் என்ற பல திட்டங்களை கொடுக்கிறோம். முதல்வர் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதை இலவசம் என்று தடுக்கும் தீய சக்திகளை முறியடித்து கோவை தொகுதியின் குரல் மக்களவையில் ஓங்கி ஒலிக்க அனைவரும் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பிரச்சாரத்தில், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ. ரவி, மேயர் கல்பனா ஆனந்த குமார், மாவட்ட துணைச்செயலாளர் அசோக் ஆறுக்குட்டி, மண்டல தலைவர் கதிர்வேல், பகுதி செயலாளர் சிவா என்ற பழனிச்சாமி, தளபதி தியாகு, ம.கணேசன், மனோஜ், வட்ட செயலாளர் முத்துச்சாமி, ஆரோக்கிய ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT