Published : 08 Apr 2024 06:01 AM
Last Updated : 08 Apr 2024 06:01 AM
சென்னை: தமிழகத்தில் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, கூடுதல் கட்டண வசூலை உடனே நிறுத்துமாறு மின்வாரியத்துக்கு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய மின் இணைப்பு வழங்க பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அதன்படி, ஒரு கிலோவாட் மேல்நிலை கேபிள்மூலம் மின் இணைப்பு பெற ரூ.2,040-ம், நிலத்தடி கேபிள் மூலம் மின் இணைப்பு பெற ரூ.5,110-ம் மேம்பாட்டு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை, மதுரை,கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் புதிய மின்இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களிடம், நிர்ணயித்ததைவிட பலமடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, மேல்நிலை கேபிள்மூலம் மின் இணைப்பு பெற விண்ணப்பித்தவர்களிடம் ரூ.2,040-க்குபதிலாக, நிலத்தடி கேபிள் முறைக்கான ரூ.5,110 கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இதுமட்டுமின்றி, மேலும் பல காரணங்களை கூறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
இதைத் தொடர்ந்து, மின் இணைப்பு வழங்க கூடுதல் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்துமாறு மின்வாரியத்துக்கு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மின் இணைப்புக்காக வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை சம்பந்தப்பட்ட மின்நுகர்வோரின் கணக்கில் திருப்பி செலுத்துவதோடு, இந்த நடைமுறையை உடனடியாக அமல்படுத்துமாறும் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT