Published : 08 Apr 2024 07:34 AM
Last Updated : 08 Apr 2024 07:34 AM

பல்லடத்தில் பாஜக ஐ.டி. விங் - செய்தியாளர் மோதல்: அண்ணாமலை அதிருப்தி; வைரலான வீடியோ

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக ஐ.டி.விங் குழுவினர் மற்றும் செய்தியாளரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிருப்தி தெரிவித்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

கோவை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில், வடுகபாளையம்புதூர், வடுகபாளையம், செட்டிபாளையம்பிரிவு, மாணிக்காபுரம், கரடிவாவி, பருவாய்,காமநாயக்கன்பாளையம், காரணம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கோவைமக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், கட்சியின் மாநிலத் தலைவருமான அண்ணாமலை நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன், அவரது தேர்தல் பிரச்சாரக் குழுவினரும் வந்திருந்தனர். செட்டிபாளையம் பிரிவில் பிரச்சாரக்குழுவினர் மைக்கை வைத்துக்கொண்டிருந்தபோது, செய்தி சேகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தினசரி நாளிதழ் செய்தியாளர் ஒருவர், பாஜக தகவல் தொழில்நுட்பக் குழுவினருக்கு (ஐ.டி. விங்) இடையூறு ஏற்படுத்தியதாக சலசலப்பு எழுந்தது.

அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் செய்தியாளர் தகாத வார்த்தையில் பேசியதாகவும், இதை ஐ.டி. விங் குழுவினர் வீடியோவாக பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சினையின்போது பாஜக ஐ.டி. விங் குழுவினர் வைத்திருந்த வாக்கிடாக்கி சேதமடைந்தது.

இதையடுத்து, பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம், ஐ.டி. விங் குழுவினர் தகவல்தெரிவிக்கவே, அவர் அதிருப்தி அடைந்தார். பின்னர், அங்கிருந்த அனைத்து ஊடகத்தினரை அழைத்து அண்ணாமலை கூறும்போது, “குறிப்பிட்ட அந்த செய்தியாளர் நடந்துகொண்ட விதம் தவறானது. செய்தியாளர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அதே மரியாதையை அவர்களும் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அந்த செய்தியாளர், மன்னிப்பு கேட்காவிட்டால், பல்லடம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்படும். அதுவரை பல்லடம் பகுதியில் செய்தியாளர் சந்திப்பைத் தவிர்க்கப் போகிறேன்” என்றார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இருதரப்பினர் சமாதானம்... இந்த சம்பவத்தின்போது உடனிருந்த உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, பிரச்சாரத்தின் உணவு இடைவேளையில் இருதரப்பையும் அழைத்து, அண்ணாமலை முன்னிலையில் சமாதானப்படுத்தி அனுப்பினார். இதனால், பல்லடம் காவல் நிலையத்தில் பாஜக தரப்பில் புகார் அளிக்கப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x