Published : 08 Apr 2024 05:45 AM
Last Updated : 08 Apr 2024 05:45 AM
சென்னை: தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தேர்தல் நாளானஏப்ரல் 19-ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நலத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ், தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் உள்ள பொதுத் துறை, தொழில்,வர்த்தகம், உணவு, தகவல் தொழில்நுட்பம், மோட்டார் போக்குவரத்து, பீடி, சுருட்டு மற்றும் தோட்ட நிறுவனங்கள், அனைத்து கடைகள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக ஏப்.19-ம்தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்புவழங்கப்பட வேண்டும்.
கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் வாக்களிக்க ஏதுவாக விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
அந்த விடுமுறை நாளுக்கான ஊதியம் சாதாரணமாக தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும், பணியின் தன்மைக்கு ஏற்ப அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்துக்கு குறையாமலும் இருக்க வேண்டும்.
இவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள், தொழிலாளர்கள் புகார் அளிக்க தொழிலாளர் நலத்துறை சார்பில் மாநில, மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மாநில ஒருங்கிணைப்பாளரான தொழிலாளர் இணை ஆணையர் விமலநாதன் (9445398801, 044-24335107),தொழிலாளர் உதவி ஆணையர்களான வெங்கடாச்சலபதி - சென்னை முதல் வட்டம் (7010275131, 044-24330354), சுபாஷ் சந்திரன் - இரண்டாம் வட்டம் (8220613777, 044-24322749), சிவக்குமார் - மூன்றாம் வட்டம் (9043555123, 044-24322750) ஆகியோரைதொடர்பு கொண்டுபுகார் அளிக்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT