Published : 07 Apr 2024 05:17 PM
Last Updated : 07 Apr 2024 05:17 PM
திருவண்ணாமலை: பாமக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியை அதிமுகவினரும் அரசு ஊழியர்களும் ஆதரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நேற்று (ஏப்ரல் 6-ம் தேதி) இரவு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ''மக்களவைத் தேர்தல் நமக்கு மிக முக்கியமான தேர்தல். தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளும் 57 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளன. இவர்களால் தமிழகத்துக்கும், இளைஞர்களுக்கும் எந்த பயனும் இல்லை. தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும் என்பதற்காக, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற்றால், தமிழகத்தில் முதன் முறையாக 2026-ல் திமுக, அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சி அமையும். தமிழக மக்களுக்கு மிக பெரிய செய்தியாக இதை தெரிவிக்கிறேன்.
திமுகவை அண்ணா தொடங்கினார். இதிலிருந்தது வந்தது அதிமுக. அண்ணாவின் பெயரை மட்டும் பயன்படுத்தினார்கள். கொள்கைகளை மறந்துவிட்டனர். தமிழுக்காக, தமிழ் மண்ணுக்காக, மக்களுக்காக ஒரு நேர்மையான ஆட்சியை நடத்த வேண்டும் என கட்சியை தொடங்கியவர் அண்ணா. இதையெல்லாம் மறந்துவிட்டு இரண்டு திராவிட கட்சிகளும் கொள்ளையடிக்கின்றன. சமூக நீதி, விவசாயி, வேளாண்மை, நீர் மேலாண்மை, வேலைவாய்ப்பு, இளைஞர் நலன், பெண்கள் பாதுகாப்பு என்றால் என்னவென்று அமைச்சர்களுக்கு எதுவும் தெரியாது.
ஆரணி பகுதியில் நெசவாளர்கள் அதிகம் வாழ்கின்றனர். நாளுக்கு நாள், நெசவுத் தொழில் நலிவடைந்து வருகிறது. பரம்பரை பரம்பரையாக நெசவுத் தொழில் செய்து வந்தவர்கள், தொழிலைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், ஆட்சிக்கு வந்தால் பட்டு ஜவுளி பூங்கா அமைத்து கொடுப்போம் என கூறி இரண்டு திராவிட கட்சிகளும் நெசவாளர்களை ஏமாற்றிவிட்டன. ஆரணியில் பட்டு ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்பது உட்பட 13 வாக்குறுதிகளை கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒரு கோரிக்கையை கூட நிறைவேற்றவில்லை.
3 ஆண்டுகளாக மாவட்டம் வளர்ச்சி பெறவில்லை. சுதந்திரத்துக்கு முன்பு, தமிழகத்தில் 14 மாவட்டங்கள் இருந்தன. இப்போது 38 மாவட்டங்கள் இருக்கின்றன. 45 மாவட்டங்கள் இருக்க வேண்டும். தமிழகத்தில் இரண்டாவது பெரிய மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. ஆனால், அதிகாரம் குறைந்துவிடும் என்பதால் மாவட்டத்தை பிரிக்க, அமைச்சர் எ.வ.வேலு விடமாட்டார். அதிமுக கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் கிடையாது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெற்றி பெற்றால், பிரதமராக முடியாது.
திமுக மீதுதான் அதிமுகவினருக்கு கோபம் உள்ளது. அதனால் உங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம். மாம்பழத்துக்கு வாக்களித்து அதிமுகவினர் தங்களது கோபத்தை வெளிப்படுத்த வேண்டும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களே மூன்றாண்டுகளாக உங்களுக்கு என்ன கிடைத்தது. ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். பொய் வாக்குறுதியை கொடுத்தனர்.
இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அதனை கொண்டு வராதது ஏன்? தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெற செய்தால், திமுக கூட்டணி தோல்வி அடைந்தால், அடுத்தாண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை வேறு வழியின்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். அவர் அறிவிக்க வேண்டும் என்றால், மக்களவைத் தேர்தலில் திமுக தோல்வி அடைய வேண்டும். இல்லையென்றால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நீங்கள் மறந்துவிட வேண்டும்.
நீங்கள் சிந்தித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் முடிவு என்பது, 57 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு கிடைக்கப்போகும் விடுதலை. 1947-ல் கிடைத்தது முதல் விடுதலை. திமுக, அதிமுக இல்லாத ஆட்சி அமையும்போது கிடைப்பது 2-வது விடுதலை. தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமகவுக்கு மாம்பழ சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். செய்யாறு அருகே மேல்மா சிப்காட் அமைக்க விளை நிலங்களை அழிக்க நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தரிசு நிலங்களில் தொழிற் சாலைகளை தொடங்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுங்கள். நிலத்தை பாதுகாக்க போராடிய 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் திமுக அரசு கைது செய்தது. இதற்கு காரணமான அமைச்சர் எ.வ.வேலுக்கு பாடம் புகட்ட வேண்டும்.
விவசாய மக்கள் மறக்க கூடாது. மாவட்ட மக்கள் அடிமையாக இருக்கும் சூழல் தெரிகிறது. டாஸ்மாக் கடை மூலம் 3 தலைமுறைகளை நாசப்படுத்திவிட்டது. இப்போது, அமெரிக்காவில் கிடைக்கும் போதை பொருள், திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகம் கிடைக்கிறது. பாமகவும் பல போராட்டங்களை நடத்தியது. ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயிகளும், மக்களும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்யுங்கள்'' என்றார். புதிய நீதிக் கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT